எல்லா தீங்குகளுக்கும் இலுமினாட்டி எனும் ரகசிய அமைப்புதான் காரணம் அவர்கள்தான் திரைமறைவிலிருந்து உலகை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த ஒரு அமைப்புதான் ரகசிய அமைப்பா? இந்த ஒரு அமைப்புதான் எல்லா தீங்குகளுக்கும் காரணமா? அல்லது அப்படி பழிசுமத்தி பலியாக்கப்பட்டுள்ளதா?
அன்றிலிருந்து இன்றுவரை எத்தனை ரகசிய குழுக்கள் இருக்கிறது? அவைகளின் நோக்கங்கள் என்ன? அவற்றில் எது தீங்கானது? என்று நாம் எப்போது சிந்திக்கத் துவங்குகிறோமோ அப்போதுதான் உண்மையை நோக்கி நகரமுடியும்.
இலுமினாட்டி ஏன் உருவானதென்றால் அன்றைய காலத்தில் மதமும் மன்னராட்சியும் மக்களை எய்துகொண்டிருந்தது. மத மூடநம்பிக்கையில் மக்கள் சிக்கிக்கிடந்தார்கள். அக்காலத்தில் கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. அறிவியல்பூர்வமான உண்மைகளைவிட, மதக் கோட்பாடுகளே அரசாங்கத்திலும் மக்களின் வாழ்விலும் திணிக்கப்பட்டன. இதை எதிர்த்து, பகுத்தறிவு மற்றும் அறிவியலை முன்னிறுத்தவே இந்த இயக்கம் உருவானது. அன்றைய காலத்தில் தேவாலயத்திற்கும் அரசனுக்கும் எதிராகப் பேசுவது மரண தண்டனைக்குரியக் குற்றமாகும். எனவே, தங்கள் கருத்துகளைப் பாதுகாப்பாகப் பரப்புவதற்காக அவர்கள் ரகசியக் குழுவாக இயங்கத் தொடங்கினர். எனவே இலுமினாட்டியைத் தொடங்கிய Adam Weishaupt, ஃப்ரீமேசன் அமைப்பில் உறுப்பினர்களை ஊடுருவச்செய்து அதன் மூலம் புரட்சிகரமான பகுத்தறிவு சிந்தனைக் கருத்துகளைப் பரப்ப நினைத்தார். ஆனால் அங்கே ஏற்கனவே Rosicrucians (ரோசிக்ரூசியன்கள்) மிக வலுவாக ஊடுருவியிருந்தனர். அதாவது ரோசிக்ரூசியன்கள் நேரடியாக ஒரு புதிய அமைப்பைத் தொடங்கி மக்களிடம் செல்வதை விட, ஏற்கனவே செல்வாக்குடன் இருந்த ஃப்ரீமேசன் கிளைகளுக்குள் உறுப்பினர்களாகச் சேர்ந்து மெல்ல மெல்ல, அந்த கிளைகளின் தலைவர்களாகவும் அவர்களே மாறியிருந்தனர்.
ரோசிக்ரூசியன்கள் (Rosicrucians) என்பது ஐரோப்பாவில் தோன்றிய ஒரு மர்மமான மற்றும் ரகசிய அமைப்பாகும். இலுமினாட்டி அமைப்பை விடவும் பழமையான இது, Esoteric, wisdom, Hermeticism, யூத மாயவாதம் (கபாலா), கிறிஸ்தவ ஞானவாதம், மாயாஜாலம் மற்றும் ரசவாதம் (Alchemy) ஆகியவற்றில் ஈடுபாடுடைய அமைப்பு.
அந்தக் காலகட்டத்தில் பிரஷ்யாவின் (இன்றைய ஜெர்மனியின் ஒரு பகுதி) மன்னரான இரண்டாம் ஃபிரடெரிக் வில்லியம், ஒரு ஃப்ரீமேசனாக இருந்தார். ஆனால், அவரை வழிநடத்திய அமைச்சர்கள் ரோசிக்ரூசியன்களாக இருந்தனர். இதனால் ஃப்ரீமேசன் அமைப்பின் பெயரால் ரோசிக்ரூசியன்களின் ஆதிக்கமே ஜெர்மனி முழுவதும் பரவியிருந்தது.
இலுமினாட்டிகள் ஃப்ரீமேசன்ஸைப் பயன்படுத்த நினைத்தனர். ஆனால், அங்கிருந்த பல Freemason தலைவர்கள் இலுமினாட்டிகளின் மதத்திற்கு, மன்னராட்சிக்கு எதிரான அரசியல் கொள்கைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவர்களைத் தங்கள் அமைப்பிலிருந்து விலக்கத் தொடங்கினர்.
இலுமினாட்டிகளின் நோக்கம், நிறுவப்பட்ட மத அமைப்புகளை வீழ்த்திவிட்டு, "பகுத்தறிவு" என்ற புதிய முறையைக் கொண்டுவருவது. இதைப் புரிந்துகொண்ட ரோசிக்ரூசியன்களும், Jesuits 'களும் (Jesuits-இவர்கள் ரகசிய அமைப்பு அல்ல கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பிரிவு. ஐரோப்பாவின் அரச குடும்பங்களில் செல்வாக்கு பெற்றிருந்தவர்கள்) சேர்ந்து "இலுமினாட்டிகள் கிறிஸ்துவ மதத்தையே வேரறுக்க வந்த சாத்தானின் தூதர்கள்" "சாத்தானின் வழிபாட்டாளர்கள்" மற்றும் "அரசுக்கு எதிரான துரோகிகள்" என்றும் இவர்கள் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியை (Kingdom of Antichrist) நிறுவப் பார்க்கிறார்கள் என்றும் பிம்பத்தை உருவாக்கி அவர்களைத் தனிமைப்படுத்தினர்.
அன்றைய காலகட்டத்தில், ஒரு நாட்டின் மன்னர் என்பவர் 'கடவுளின் பிரதிநிதியாக' கருதப்பட்டார். இலுமினாட்டிகள் மன்னராட்சிக்கு எதிராக இருந்ததால், அவர்கள் கடவுளுக்கே எதிரானவர்கள் என்று எளிதாகத் திசைதிருப்பப்பட்டது.
"மன்னரைக் கொல்வது கடவுளைக் கொல்வதற்குச் சமம், எனவே இலுமினாட்டிகள் அந்திக்கிறிஸ்துவின் கூட்டாளிகள்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. பிறகு பவேரியாவின் ஆட்சியாளர் கார்ல் தியோடர் (ரோசிக்ரூசியன்களின் தூண்டுதலால்), இலுமினாட்டி அமைப்பைத் தடை செய்து அரசாணை வெளியிட்டார். இலுமினாட்டிகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் ரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.
இலுமினாட்டிகளை 'அந்திக்கிறிஸ்து' என்று முத்திரை குத்தி ஒழித்த ரோசிக்ரூசியன்கள், உண்மையில் தங்களை 'உண்மையான ஆன்மீகவாதிகள்' என்று காட்டிக்கொண்டனர். ஆனால் ரகசியமாகப் பல விசித்திரமான சடங்குகளைச் செய்து வந்தனர். இலுமினாட்டிகளை பொறுத்தவரை இதெல்லாம் மூடநம்பிக்கை. இந்த கொள்கை முரனால்தான் இலுமினாட்டி அமைப்பு வீழ்த்தப்பட்டது. இன்றும்கூட பகுத்தறிவு பேசுபவர்களை கண்டாலே பலருக்கு ஆவதில்லை, கலாச்சராத்தை கெடுப்பவர்களாகவும், மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை கெடுக்கவந்தவர்களாகவும் தானே பார்க்கப்படும் நிலை உள்ளது!
இலுமினாட்டிகளின் சின்னம் என்று எல்லோராலும் கருதப்படும் All-Seeing Eye, or Eye of Providence என்பது Rosicrucians மற்றும் Freemasons பயன்படுத்தும் சின்னம். இலுமினாட்டிகள் பயன்படுத்திய அதிகாரப்பூர்வச் சின்னமானது 'ஆந்தை' தான். இந்த ஆந்தையை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உள்ளது. ரோமானியப் புராணங்களின்படி, மினெர்வா எனும் அறிவு, ஞானம், கலை மற்றும் போர்த்தந்திரங்களுக்கான தேவதையின் தோளில் அல்லது அருகிலேயே எப்போதும் ஓர் ஆந்தை இருக்கும். இந்த ஆந்தை அறிவு, ஞானம் மற்றும் நுண்ணறிவைக் குறிக்கிறது. இதனால்தான் ஆந்தையை தங்களது சின்னமாக தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால், இலுமினாட்டிகள் தங்களை அறிவார்ந்தவர்களாகவும், ஞானத்தைக் கொண்டவர்களாகவும் கருதினார்கள். மினெர்வாவின் ஆந்தை சின்னத்தைப் போலவே, அவர்கள் இருளில் இருக்கும் மக்களுக்கு அறிவொளி (Enlightenment) ஊட்ட விரும்பினர். அப்படிப்பட்ட இயக்கத்தைதான் இப்படி தவறாக சித்தரித்துள்ளார்கள். அதற்காக அவ்வமைப்பு முற்று முழுதாக சிறந்தது என்று ஒப்புக்கொள்ள முடியாது. அவர்களின் நோக்கம் சரியானது ஆனால் அவர்களால் கடைபிடித்த அமைப்புமுறை படிநிலையுடையாக இருந்தது என்பது விமர்சிக்கப்படவேண்டியது.
இன்றும் கூட, உலகெங்கும் நடக்கும் தீமைகளுக்கு இலுமினாட்டிகளே காரணம் என்று சிலர் கூறுவதற்கு இந்தப் பழைய 'அந்திக்கிறிஸ்து' மற்றும் Kingdom of Antichrist முத்திரைதான் அடிப்படை காரணமாக இருக்கிறது. யாரோ கட்டமைத்த சதிக்கோட்பாட்டிற்கு நீங்களும் பலியாகி அவர்கள் ஆட்டுவிக்கும்படி ஆடிக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
- தீயவன்



No comments:
Post a Comment