மேலேயுள்ள படத்தில் இருப்பதைப்போன்று, அந்த இடத்தில (இந்தியப்பெருங்கடல் பகுதியில்; மடகாஸ்கர் முதல் ஆஸ்திரேலியவரை) குமரிக்கண்டம் என்று அழைக்கப்படும் பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும், தமிழினம் நாகரீகத்தோடு அங்கு செழித்து வளர்ந்ததாகவும் பிறகு கடல்கோளால் அந்நிலப்பகுதி அழிந்துவிட்டதாகவும் ஒரு கருத்து பரவலாக நம்பப்பட்டு பரப்பப்பட்டும் வருகிறது.
தமிழர்களின் பெருமையை உலகறிய செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பலர் இக்கருத்தை ஆணித்தனமாக நம்புகிறார்கள்.
குமரிக்கண்டம் என்ற ஒன்று உண்மையிலேயே இருந்திருக்குமா என்று பார்த்தல். அப்படி ஒன்று இருந்ததில்லை என்பதுதான் விடையாக இருக்கும். ஆனால் இதை குமரிக்கண்ட ஆதரவாளர்கள் ஏற்கமாட்டார்கள். தொல்லியல் அகழ்வாராய்ச்சி எதுவும் செய்யாமலேயே குமரிக்கண்டம் இல்லை என்று சொல்வதை ஏற்கமுடியாது என்று வாதிடுகிறார்கள்.
சரி, படத்தில் உள்ளதைப்போல ஒரு பெரிய நிலப்பரப்பு உண்மையிலேயே கடலில் மூழ்கப்பட்டிருக்குமானால்; Satellite Mapping இல் பார்க்கும்போது அதற்கான தடயம் ஓரளவுக்காவது இருந்திருக்கவேண்டும் தானே? ஆனால் அதற்கான எந்த ஒரு தடயமுமே சுத்தமாக இல்லையே!
தற்போதைய படம் - இதில் இந்திய பெருங்கடலில் அப்படியொரு கண்டம் இருந்ததற்கான தடயம் உள்ளதா? அவ்வளவுபெரிய நிலப்பரப்பு இருந்த சுவடு தெரியாமல் கடலில் மூழ்கிப்போக/அழிந்துபோக சாத்தியமில்லை. இந்த கடல் அடித்தள வரைபடங்கள் இந்தியப் பெருங்கடலின் அடியில் மூழ்கிய பெரிய கண்டங்கள் எதுவும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக நிரூபிக்கின்றன.
இப்படி சொன்னால், குமரிக்கண்ட ஆதரவாளர்கள் இன்னொரு கருத்தை முன்வைக்கிறார்கள். அதுதான் புவித்தட்டு நகர்வு, ஆழிப்பேரலை மற்றும் கடலோரப்பகுதிகளில் கடலில் மூழ்கியிருக்கும் சில கட்டிட எச்சங்கள்.


புவித்தட்டு நகர்வு - கண்டங்களின் இடப்பெயர்வு பற்றி அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்ட படங்களில் கூட அப்படி ஒரு கண்டம் இருந்ததாக காணப்படவில்லை. 2 கோடி, 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியநிலப்பரப்பு எப்படி இருந்திருக்கும் என்று காட்டும் படங்களிலும் கூட குமரிக்கண்டம் தென்படவில்லை. அதுமட்டுமல்ல பெரும் விளைவுகளை ஏற்படுத்த சாத்தியமுண்டான புவித்தட்டு நகர்வுகள் மற்றும் இந்தியப்பகுதி ஆசியாவோடு இணைந்ததெல்லாம் மனிதகுலம் உருவாவதற்கு முன்பேயே நடந்துவிட்டது. 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் மனித இனமே தோற்றம் பெறுகிறது. அப்படி இருக்கும்போது இந்த புவித்தட்டு நகர்வை இதனுடன் தொடர்புபடுத்துவது முரணானது.
வேண்டுமானால் இந்த இரண்டுலட்சம் ஆண்டுகளுக்குள் கடலோரப் பகுதிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தின் உச்ச நிலை இருந்தது. அதன்பின் பனிப்பாறைகள் உருகத் தொடங்கி, சுமார் 10,000 முதல் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடல் மட்டம் சுமார் 120 மீட்டர்கள் உயர்ந்ததாக, அதாவது கடந்த 20,000 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கடல் மட்டம் 120 மீட்டர்கள் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. சில நகரங்கள் அப்படி மூழ்கியதற்கான சான்றுகளும் உள்ளன. ஆனால் இவைகளெல்லாம் குமரிக்கண்டம் எனும் பிரமாண்ட கருத்துக்குள் வராது.
கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டம் என்னும் இத்தகைய கருத்தில் இவர்கள் உறுதியாக இருக்க காரணம் தமிழ் இலக்கியங்கள். அதில் முதன்மையானது நக்கீரர் என்பவரால் எழுதப்பட்ட "இறையனார் களவியல் உரை" ஆகும். இது பிற்காலத்தில் எழுதப்பட்டது சுமார் கிபி 7 - 8 ஆம் நூற்றாண்டுகளில். இதில் கூறப்பட்டுள்ள கருத்து என்னவென்றால்:
பண்டைய தமிழகத்தில் தமிழை வளர்ப்பதற்காகப் பாண்டிய மன்னர்கள் மூன்று இடங்களில் சங்கங்கள் அமைத்தார்கள் என்று கூறுகிறது.
முதலாவது தமிழ்ச்சங்கம் தென்மதுரை என்னும் நகரத்தில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கம் மொத்தம் 4,440 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும் மொத்தம் 89 பாண்டிய அரசர்கள் ஆட்சிசெய்ததாகவும் உள்ளது. சிவபெருமான், முருகக்கடவுள், அகத்தியர், முரஞ்சியூர் முடிநாகராயர், குபேரன் போன்றவர்கள் உட்பட மொத்தம் 549 தலைமைப் புலவர்கள் இச்சங்கத்தில் வீற்றிருந்தார்கள் என்றும் இவர்களைத் தவிர 4,449 புலவர்கள் இங்கு வந்து கவிதைகள் பாடினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிறகு இந்த தென்மதுரை நகரம் கடலால் மூழ்கிப்போனதாகவும் அதனோடு அவர்கள் இயற்றிய நூல்கள் அனைத்தும் முழுமையாக அழிந்துபோனதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதற்சங்கம் அழிந்த பிறகு, பாண்டியர்கள் தங்களின் அடுத்த சங்கத்தை கபாடபுரம் என்ற நகரத்தில் அமைத்தார்கள். இந்த இடைச்சங்கம் 3,700 ஆண்டுகள் நிலவியதாகவும் மொத்தம் 59 பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்ததாகவும் உள்ளது. மேலும் இதில் காகாபாடினியார், சிறுபாண்டரங்கன், துவரைக்கோமான், கீரந்தை, வெள்ளூர்க் காப்பியன், தொல்காப்பியர், திரையன் மாறன் உள்ளிட்ட 59 தலைமைப் புலவர்களோடு மொத்தம் 3,700 புலவர்கள் பாடல்களைப் பாடி அரங்கேற்றினார்கள் என்றும் உள்ளது.
இந்த கபாடபுரமும் கடலால் விழுங்கப்பட்டதால், அங்கு உருவான நூல்களில் தொல்காப்பியம் என்ற ஒரே ஒரு இலக்கண நூல் மட்டுமே இன்று நமக்குக் கிடைத்துள்ளது மற்றவை அழிந்துவிட்டனஎன்று கூறப்படுகிறது.
கபாடபுரமும் அழிந்த பிறகு, பாண்டிய மன்னர்கள் தங்களின் தலைநகரத்தை இன்றைய மதுரை மாநகரத்திற்கு மாற்றினார்கள். அங்கு மூன்றாவது சங்கமான கடைச்சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கம் 1,850 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கியது. மொத்தம் 49 பாண்டிய அரசர்கள் இக்கடைச்சங்கத்தை ஆதரித்து நடத்தினதாகவும். இதில் கபிலர், பரணர், நக்கீரர், சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், பெருங்குன்றூர்க் கிழார் உள்ளிட்ட 49 முதன்மைப் புலவர்கள் வீற்றிருந்தார்கள். இவர்களைத் தவிர 499 புலவர்கள் பாடியதாகவும் உள்ளது. (Reference: தமிழ் இலக்கிய வரலாறு - ரா. சீனிவாசன்)
தென்மதுரை, கபாடபுரம் போன்றவை கடல்கோளால் அழிந்தது என்று இதில் சொல்லப்பட்டுள்ளதால்; இதை குமரிக்கண்டம் கடலில் மூழ்கிப்போனதற்கான வரலாற்று சான்றாக எடுத்துக்கொண்டு வாதிடுகிறார்கள்.
ஆனால் பல ஆய்வாளர்களோ இதில் சொல்லப்பட்டுள்ள புலவர்கள் எண்ணிக்கை, அரசர்களின் எண்ணிக்கை மற்றும் ஆட்சிக்காலம், சங்கம் போன்றவற்றை விமர்சனபூர்வமாக நிராகரிக்கிறார்கள். கற்பனை என்று கருத்துதெரிவிக்கிறார்கள். ஏனென்றால் இதில் தர்க்கப்பிழையும், மிகைப்படுத்துதலுமே நிரம்பியுள்ளது. இந்த இறையனார் களவியல் உரையில் சொல்லப்பட்டது மிகைப்படுத்தலே அன்றி முழு உண்மை அல்ல என்கிற புரிதலோடுதான் இதை பார்க்கவேண்டும்.
இப்படியிருக்க, இந்தியபெருங்கடல் பகுதியில் மடகாஸ்கர் முதல் ஆஸ்திரேலியாவரை குமரிக்கண்டம் எனும் பெரும் நிலப்பரப்பு இருந்தது பிறகு கடலில் மூழ்கிப்போனது என்கிற கருத்து எப்படி உருவானதென்றால். 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த விலங்கியல் நிபுணர் Philip Sclater என்பவரால், மடகாஸ்கர் மற்றும் இந்தியாவில் லெமூர் குரங்குகள் வாழ்வதை விளக்க முன்வைக்கப்பட்ட கோட்பாடு இது. ஆனால் இது காலாவதியான கோட்பாடு. இது உண்மையற்றது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் சிலர் இதை தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்ட கடல்கோளால் நகரங்கள் மூழ்கியதுடன் சேர்த்து இப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனமான கட்டுக்கதையை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். எனவே குமரிக்கண்டம் இருந்தது உண்மை என்று சொல்லிக்கொள்வது அறியாமையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படும். ஆகவே இக்கருத்துக்கு கண்மூடித்தனமாக ஆதரவுகொடுப்பதை விட்டுவிட்டு எதையும் திறந்தமனத்துடன் ஆய்வுநோக்கில் அணுகும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- தீயவன்
No comments:
Post a Comment