Yu Dafu என்பவர் எழுதிய 'Chenlun' (Sinking or Drowning) குறுநாவல், சீன இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பு. இந்தக் குறுநாவல் வெளிவந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன் சீன இலக்கியம் பெரும்பாலும் சமூக சீர்திருத்தம் அல்லது குடும்பக் கதைகளையே பேசி வந்தது. ஆனால், யு டாஃபு முதன்முறையாக ஒரு இளைஞனின் அந்தரங்கமான பாலியல் உணர்வுகள், விரக்தி மற்றும் மன அழுத்தத்தை எந்த ஒளிவுமறைவுமின்றிப் பதிவு செய்தார். இது நவீன சீன இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இது அமைந்தது.
இந்தக் குறுநாவல், ஜப்பானில் கல்வி பயிலும் ஒரு சீன மாணவனின் கதையைச் சொல்கிறது. அங்கு அவன் எதிர்கொள்ளும் அந்நியப்படுதல் (Alienation) இதில் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகை ரசிக்கும் அதே வேளையில், சக மனிதர்களிடமிருந்து விலகி நிற்கிறான். பெண்ணின் அன்புக்கு ஏங்கும் அதேவேளையில் பெண்களை கண்டாலே நடுங்குகிறான் பேச முடிவதில்லை. நாயகனின் இந்த மனநிலை, வாசகர்களைக் கலங்கச் செய்யும். அவன் அனுபவிக்கும் தீவிரமான தனிமை, தாழ்வு மனப்பான்மை, காதல் ஏக்கம், கூச்சசுபாவம், மனச்சோர்வு, சுய-வெறுப்பு, பாலியல் தூண்டுதல் மற்றும் சீனர்கள் என்றாலே கீழானவர்கள் என்று கருதும் ஜப்பானியர்களின் கருத்துருவாக்கம் ஆகியவற்றால் அவன் அடையும் வேதனை ஆகியவற்றை இது மையமாகக் கொண்டுள்ளது. எனவேதான் இது நவீன சீன இலக்கியத்தின் முதல் மனோதத்துவ குறுநாவலாக பார்க்கப்படுகிறது.
இறுதியில், துயரத்தின் உச்சத்தில் அவன் தற்கொலைக்கு தள்ளப்படுகிறான். இக்குறுநாவல் சோகமானதென்றாலும் கவிதைகளோடு கவித்துவமாக தனிமனிதனின் உளவியலை மிகநேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளது.
தமிழில் முதல் முதலாக மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது.
அமேசான் கிண்டல் இல் படிக்க : https://amzn.in/d/0j9dF8bZ
- தீயவன்

No comments:
Post a Comment