ராஜராஜ சோழனின் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாகவும் அக்கொலைக்கு காரணங்கள் என்னவாக இருக்கும் என்ற விவாதங்கள் எல்லாம் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் வெளியானபிறகு பேசுபொருளானது.
ஆதித்த கரிகாலனின் கொலையை போலவே ஆதித்த கரிகாலன் இறந்து 100 வருடங்களுக்கு பிறகு சோழ வம்சத்தில் இன்னொரு மர்மமான கொலை நடந்தது. அக்கொலைக்குப்பிறகு சோழ வாரிசுகளின் ஆட்சி முடிவுற்று அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. அதைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
ராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழனின் மூன்றாவது மகனின் மகனே ஆதிராஜேந்திரன். (இராஜேந்திர சோழனின் முதல் மகன் போரில் இறந்ததால் அவருக்கு ஆன் வாரிசு இல்லாததால் இரண்டாம் சகோதரர் அரசரானார். அவரின் மகன் அவருக்கு முன்னதாகவே போரில் இறந்ததால் இவருக்கு பிறகு கடைசி சகோதரன் அரியணை ஏறினார்; இவர் (கி.பி.1070) இறந்ததும் இவரின் மகன் ஆதிராஜேந்திரன் முடிசூடினார்)
இந்த ஆதிராஜேந்திரன் என்பவர் சிலவாரங்கள் மட்டுமே சோழ பேரரசை ஆண்டார். அதற்குள்ளாகவே மர்மமான முறையில் (கி.பி.1071) கொல்லப்பட்டு இறந்தார். இவருக்குப் பிறகு "முதலாம் குலோத்துங்கன்" என்ற பட்டப்பெயர் கொண்ட கீழை சாளுக்கிய மன்னனின் மகன் இரண்டாம் ராஜேந்திரன் என்பவர் சோழப் பேரரசர் ஆனார். (சோழ மன்னர்களின் பெயரும், கீழை சாளுக்கிய மன்னர்களின் பெயரும் ஒன்றுபோலவே இருப்பதால் குழம்பிடவேண்டாம்)
மேலேயுள்ள வம்சாவழி அட்டவணையை பார்த்தல் புரியும் ராஜேந்திர சோழனின் மகள் "அம்மங்கதேவி" என்பவர் கீழை சாளுக்கிய மன்னருக்கு மணமுடித்து கொடுக்கப்பட்டாள். அவர்களுக்கு பிறந்த மகனே "முதலாம் குலோத்துங்கன்" இவர் நேரடி சோழ வாரிசு அல்ல. ஏன் இவர் முடிசூடினார்; சோழ வாரிசுகள் ஏன் மன்னராகவில்லை என்ற மர்மமும் நீடிக்கிறது. சரி, ஆதிராசேந்திரன் கொல்லப்பட்டதை பற்றி பார்ப்போம்.
சொல்லப்படும் காரணங்கள்:
- இராமானுஜர் சாபத்தால் உயிரிழப்பு
- உள்நாட்டு கலகத்தால் உயிரிழப்பு
- முதலாம் குலோத்துங்கனின் சூழ்ச்சி
இராமானுஜர் சாபத்தால் நோய்தாக்கியது பற்றி:
ஆதிராசேந்திரன் தீவிர சைவராக இருந்ததால் வைணவர்களை கொடுமைப்படுத்தினாராம். இதனால் வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் என்பவர் மைசூருக்கு ஓடி சென்றதாகவும். சினத்தினால் "மரண மந்திரம் ஏவினார்" அதனால் நோய்தாக்கி ஆதிராஜேந்திரன் இறந்ததாகவும் "எதி ராச வைபவம்", "இராமானுஜ திவ்ய சரிதை" நூல்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் "கிருமிகண்ட சோழன்" என்று வைணவ நூல்கள் சபிக்கும் மன்னர் இவரே என்றும் கூறுகிறார்கள்.
உள்நாட்டு கலகம் பற்றி:
- ராமானுஜர் ஆதிராசேந்திரன் காலத்திற்கு பிற்பட்டவர் மேலும் வைணவர்களை துன்புறுத்தியதற்கு ஆதாரம் இல்லை என்று மறுக்கிறார்கள்.
- ஆதிராசேந்திரன் காலம் அமைதியானது. உள்நாட்டு கலகம் நடந்திருக்க வாய்ப்பில்லை. விக்ரமாங்கதேவ சரித்திரம் எனும் வடமொழி நூலில் கூறப்பட்டதை அப்படியே ஏற்கமுடியாது. தமிழ் நூல்களில் குறிப்புகள் இல்லை என்றுசொல்லி இக்கூற்றையும் மறுக்கிறார்கள்.
- குலோத்துங்கனின் சூழ்ச்சியால் இறந்திருந்தால்; சோழ பேரரசில் இருந்த பெரும் செல்வர்களும், மக்களும் குலோத்துங்கன் மன்னனானதை எதிர்ப்பில்லாமல் ஏற்றிருக்கமாட்டார்கள். எனவே இக்கூற்று உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
ஆதிராஜேந்திரனே சோழப் பரம்பரையின் கடைசி வாரிசு. ஆட்சிப்பொறுப்பேறற்ற சில வாரங்களிலேயே மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ஆட்சிப்பொறுப்பு கீழை சாளுக்கியர்களிடம் செல்கிறது. சோழ வாரிசுகள் யாரும் அரியணை ஏறவில்லை. இதுபற்றி உறுதியான குறிப்புகளும் இல்லை. இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. இது ஆதித்த கரிகாலனின் மரணத்தைவிட முக்கியமானதும் புதிரானதுமாக உள்ளது.
- தீயவன்
No comments:
Post a Comment