நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் பற்றி தெரிந்துகொண்டு படிக்க தொடர்ந்தால் இப்பதிவை உள்வாங்கிக்கொள்வதில் சிக்கல் இருக்காது.
நாம் காலத்தை; தொன்மைக்காலம், இடைக்காலம், தற்காலம் அல்லது நவீனக்காலம் என்று பிரித்திருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே 19 ஆம் நூற்றாண்டிற்கு பிறகான ஓவியக்கலைகளை நவீன ஓவியங்கள் என்கிறோம் என்று தோன்றுகிறது. ஆனால் நாம் எதையெல்லாம் நவீன ஓவியங்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமோ அவற்றை பின்நவீனத்துவ பார்வையிலிருந்து அணுகும் போது அவைகள் நவீன ஓவியங்கள் எனும் பதத்தைவிட பின்-நவீன ஓவியங்கள் (அதாவது, நவீனத்திற்கு பிறகான ஓவியங்கள்) என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
Renaissance Period - Neoclassicism Paintings |
15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தை/அதற்கு பிறகான காலத்தை தான் மறுமலர்ச்சி காலம், அறிவியல் புரட்சி காலம் மற்றும் நவீன காலம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். மறுமலர்ச்சி கால (Renaissance Period) தொடக்கத்தில் ஏற்பட்ட ஓவியங்கள் கிரேக்க, ரோமானிய கலைகளை தழுவி உண்டான Neoclassicism வகை சார்ந்தவை. அவைகள் பெரும்பாலும் சமயம் சார்ந்தவைகளாக புராணங்களை வெளிப்படுத்துவதாக இருந்தன. புனிதத்தையும், பெருங்கதையாடலையும் கொண்டிருந்தன. மைக்கல் ஏஞ்சலோ, லியானர்டோ டாவின்சி, ரபேல் போன்றவர்கள் அக்கால புகழ்பெற்ற ஓவியர்கள். பிறகு 19 ஆம் நூற்றாண்டில் impressionism என்ற ஓவியபாணி உருவானது. இது இயற்கையில் இருப்பதுபோல ஒளியையும், நிறத்தையும் கொண்டு ஓவியங்களை தத்ரூபமாக காட்டவேண்டும் என்றது. Neoclassicism'கு எதிராக நவீனத்தை தழுவி தாங்கள் வாழும் எதார்த்த உலகை தத்ரூமாமாக காட்சிப்படுத்த முயன்றது. இதுதான் நவீன ஓவியம்.
Impressionism Paintings |
ஓவியங்களை இயற்கையில் இருப்பதுபோல ஒளியையும், நிறத்தையும் கொண்டு தத்ரூபமாக வரையவேண்டும் என்றில்லை என்று கிளம்பியதே post-Impressionism இதுவே பின்நவீன ஓவியக்கலையின் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. இதற்கு முன்னோடியாக இருந்தவர் Paul Cézanne அதன் பிறகு Paul Gauguin, Vincent van Gogh போன்றவர்களால் பரவியது. இதே காலகட்டத்தில்தான் புகைப்பட கருவி கண்டுபிடிக்கப்பட்டது அதனால் தத்ரூபமாக வரைவதில் அர்த்தமில்லாமல் போனது இதனாலும் ஓவியக்கலையில் மாற்றங்கள் நிகழ தொடங்கியது.
Post-Impressionism Artworks |
Post-Impressionism என்பது பிக்காஸோவின் காலத்தில் வளர்ச்சியை எட்டி Cubism, Dadaism, Fauvism, Expressionism, Surrealism, Futurism, Psychedelic என்று விரிந்துகொண்டே சென்றது. ஓவியத்திற்கென்று வரையறுக்கப்பட்ட அணைத்து கட்டுகளையும் அவிழ்த்து போட்டது. ஓவியமென்றால் தத்ரூமாமாக இருக்கவேண்டும், பொருட்களின் - உருவங்களின் அளவு சரியாக இருக்க வேண்டும், பயன்படுத்தும் வண்ணங்கள் எதார்த்தமாக இருக்கவேண்டும், முழுமையாக இருக்கவேண்டும், அழகியலை பெற்றிருக்கவேண்டும், புரியும்படி இருக்கவேண்டும், ஒழுங்கை கொண்டிருக்கவேண்டும், என்றெல்லாம் இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற வரையறைகளை கேள்விக்குட்படுத்தி கட்டுடைப்பதே - கட்டவிழ்ப்பதே பின்நவீனத்துவம். அவற்றை செய்த இந்த ஓவியக்கலைகள் பின்-நவீன ஓவியக்கலைகள் என்ற வகைமையில் சேர்ந்துவிடுகிறது. ஆனால் நாம் இதை நவீன ஓவியங்கள் என்று அழைத்துக்கொண்டிருக்கிறோம்.
So-called modern art - Postmodern Art |
- தீயவன்
No comments:
Post a Comment