மனிதர்களுக்கு கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பிரபஞ்சம் தற்செயலானது,
பூமி தற்செயலானது,
மனிதர்கள் தற்செயலானவர்கள்,
வாழ்க்கையும் தற்செயலானதே..
தற்செயலானது என்றால்?
முன்கூட்டியே திட்டமிட்டு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று (கம்ப்யூட்டர் program போல ஒன்றின் முழு செயல்பாட்டையும் முன்கூட்டியே வடிவமைத்ததாக) உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை குறிக்கும் சொல்லாகத்தான் தற்செயல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன்.
அப்படியென்றால் வாழ்க்கைக்கு அர்த்தமில்லையா?
ஏன் இருக்கவேண்டும்? அர்த்தம் இல்லையென்றால் வாழாமல் இறந்துவிடுவீர்களா? ஒன்று, அர்த்தத்தை தேடி ஓடுகிறீர்கள் அல்லது நீங்களாகவே ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக்கொண்டு அதன்படி வாழ்கிறீர்கள் அல்லது இரண்டுமின்றி போகிறபோக்கில் தான்தோன்றி தனமாக வாழ்கிறீர்கள்.
அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அர்த்தங்கள் பல கற்பித்து அபத்ததிலும் அபத்தமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறான் மனிதன்.
ஒருவகையில் மனிதர்களால் கற்பிக்கப்படும் அர்த்தம் என்பதே அர்த்தமற்றது.
மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை அபத்தமானதா?
அப்படி இல்லையா! கண்களை திறந்து பாருங்கள் மனிதன் எவ்வளவு அபத்தமான வாழ்க்கையை வாழ்த்துக்கொண்டிருக்கிறான் என்பது புரியும்.
அவனது வாழ்வியலையே அபத்தமானதாக மாற்றியமைத்துள்ளான்.
குடும்பம், சமுதாயம், சடங்கு, சமயம், கல்வி, சட்டம், பொருளாதாரம் என்று அனைத்திலும் அபத்தங்களே நிறைந்துள்ளது. இவைகள் எல்லாமும் அபத்தமான ஒழுங்குமுறைகளை கொண்டிருக்கின்றன.
ஒழுக்கம், நேர்மை, பாவம், புண்ணியம் என்பவைகள்கூட அபத்தங்களா?
நிச்சயமாக, மனிதர்கள் வரையறுத்து வைத்திருக்கும் ஒழுக்கம் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் வேறுபடும். ஒரு சமயத்திற்கும் இன்னொரு சமயத்திற்கும் வேறுபடும். ஒருவர் கடைபிடிக்கும் ஒழுக்கம் இன்னொருவருக்கு ஒழுங்கீனமாக இருக்கிறது.
இங்கே பலவகை ஒழுக்கம் உண்டு. சமய ஒழுக்கம், மரபு ஒழுக்கம், சட்ட ஒழுக்கம். எல்லாமும் ஒன்றுபோல இருப்பதில்லை. ஒன்று சரி என்பதை மாற்றொன்று தவறு என்று சொல்கிறது.
பாவ, புண்ணியம் என்பதெல்லாம் மனித வரையறைகள் மட்டுமே. ஒருவன் செய்யும் குற்றத்திற்கு மனித சட்டத்தில் மட்டும்தான் தண்டனை உண்டு. கர்மமோ, கடவுளோ அல்லது எதோ ஒரு அற்புத சக்தியோ கணக்கு வழக்கு வைத்து தண்டனையோ வெகுமதியோ கொடுக்கப்போவதில்லை.
அப்படியானால் குற்றங்கள் சரியா?
குற்றம் என்று எதை சொல்கிறீர்கள்?
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுவது...
பிற மனிதனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் எதுவாயினும் தவறே. அதற்காக - கற்பனை மாயைகள்மூலம் - பயம், ஆசை கொண்டு அல்லது சட்டத்தை கொண்டு ஒழுங்கை ஏற்படுத்த நினைப்பது அபத்தமில்லையா!
பாவ புண்ணியம், சொர்கம், நரகம், கடவுள், சாத்தான்., இவைகள் இல்லையென்றாலும் ஒருவன் இன்னொருவனுக்கு துன்பம் ஏற்படுத்தாமல் இருப்பதே பக்குவமாகும். மற்றவர்கள்மீது துன்பம் ஏற்படுத்தாமல் இருக்க மாயையான கருத்துக்கள் தேவைப்படும் என்றால் அது மனிதனின் பக்குவமின்மையை காட்டுகிறது இல்லையா!
தொடரும்........................
- தீயவன்
No comments:
Post a Comment