Breaking

Sunday, May 7, 2023

முற்போக்கு முகமூடியில் பிற்போக்குவாதிகள்



        பேச்சையும், வெளித்தோற்றத்தையும் வைத்தே மற்றவர்களை நாம் எடைபோடுகிறோம், இன்னும் சிலர் கொஞ்சம் மேலே சென்று ஒருவன் கொண்டுள்ள நம்பிக்கை, அரசியல் கோட்பாடு, சித்தாந்தம் இவைகளைவைத்து எடைபோடுவார்கள், நம்பிக்கைவைப்பார்கள், அன்புசெய்வார்கள், வெறுப்பார்கள். ஆனால் இவைகள்மட்டுமே ஒருவனின் உண்மை சுயத்தை தெரிந்துகொள்ளக்கூடியவைகளா! ஒருவனின் பேச்சு, சித்தாந்தம், கொள்கை மட்டுமின்றி அவனது உள்நோக்கத்தையும் அறிந்துகொள்ளக்கூடிய பார்வை நமக்கு வேண்டும். 


பலப்பல மதங்கள், ஒழுக்கநெறிகள், தத்துவங்கள், அரசியல் கோட்பாடுகள், கொள்கைகள் என நிரம்பிய போதிலும் அவைகள் ஒவ்வொன்றும் தான்தான் மேன்மையானது, அனைவருக்கும் நல்வழி கொடுக்கக்கூடியது என்று கூறிக்கொண்டிருக்கும்போதிலும் அவைகளை தூக்கிச்சுமந்து கொண்டிருப்பவர்களும் - அதை பிரச்சாரம் செய்பவர்களும் இரட்டைத்தன்மையுடன் இருப்பதை பார்க்கமுடிகிறது. 


இந்த உலகையும் மனித - சமுதாய, அரசியல், பொருளாதார வளர்ச்சியையும் பற்றி - அதன் மாற்றத்திற்கான வழியையும் தெளிவையும் கொடுக்கக்கூடியது மார்க்சியம். அதற்காக அச்சிந்தனைகளை பேசுபவர்கள் எல்லோருமே முற்போக்காளர்கள், உத்தமர்கள், உண்மை போராளிகள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. அதி உன்னத கொள்கையை கொண்டிருப்பதால் மட்டும் ஒருவன் புனிதனாகிவிடமுடியாது. அல்லது அவனை வழிகேட்டிற்கு கொண்டுசெல்லமுடியாது என்பதில்லை. எல்லோரும் மனிதர்கள்தான், யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று தெரியாது. அவர்களின் உண்மையான உள்நோக்கம் என்னவென்று தெரியாது. அதற்கு சில வரலாற்று நிகழ்வு  படிப்பினையாகவுள்ளது.



இத்தாலியை சேர்ந்த பெனிட்டோ முசோலினி என்பவர் சுவிட்சர்லாந்தில் இருந்தபோது ரஷ்ய புரட்சியாளர் லெனினுடன் பழக்கம் ஏற்பட்டு பொதுவிடமை மீதும் ஈர்ப்பு கொண்டார். சுவிட்சர்லாந்தில் ஒரு சோஷலிச நாளேடு அலுவலகத்தில் பணியாற்றினார் அதனால் அந்நாடு அவரை வெளியேற்றியது. இத்தாலி வந்ததும் புரட்சி கருத்துக்களை பரப்பினார். பொதுவுடைமை நாளேடு ஒன்றில் ஆசிரியராக பணிசெய்தார். அவரது புகழ் பரவத்தொடங்கியது. பிறகு பாசிச கட்சியை உருவாக்கினார். இவரின் கொள்கைகளால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். 3 லட்சம் மக்களுடன் ரோமாபுரியை நோக்கி சென்றார் வழியிலிருந்த போக்குவரத்துக்கு, தபால், தந்தி அலுவலகங்களை கைப்பற்றினார். அதிர்ந்துபோன மன்னன் இம்மானுவேல் - முசோலினியை அமைச்சராக்கினார். அன்றுமுதல் அனைத்து அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டு ஒரு எதேச்சதிகாரியாக உருமாறினார்; பாசிசத்தை வளர்த்தார். 


முதல் உலகப்போரின்போது; கூலிவேலைகள் செய்துவந்த ஹிட்லர் தன் நாட்டு படைகளுடன் சேந்து போர்வீரனார். போர்முடிந்ததும் தொழிலாளர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். பிறகு தேசிய சோசலிஸ்டு தொழிலாளர் கட்சியை உருவாக்கினார்.  இதுவே பின்னர் நாசிச கட்சியாக மாறியது. சிறையில் இருக்கும்போது அவர் எழுதிய "எனது போராட்டம்" என்ற புத்தகத்தின் மூலம் நாசிச கருத்துக்கள் பரவியது. படைபலம் கூடியது.


ஒரே கட்சி, ஒரே தலைவர், ஒரே திட்டம் என்ற ஹிட்லரின் கோட்பாட்டைத்தான் முசோலினியும் கொண்டிருந்தார். இருவருக்கும் பெரும் வேறுபாடில்லை. 

இவர்கள் இருவரும் தொடக்கத்தில் சோஷலிஸ்ட்களாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் என்பது தெளிவு. பிறகே தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மடைமாற்றம் செய்யாமலிருந்திருந்தால் ரஸ்யாவைபோல ஜெர்மனியிலும், இத்தாலியிலும் கம்யூனிச புரட்சி ஏற்பட்டிருக்கும். ஒருவேளை அதை தடுக்கத்தான் இவர்கள் முனைத்தார்களோ!

ஆனாலும் இவர்கள் நேர்மையானவர்களாகிவிட்டார்கள். எப்போது பாசிசம், நாசிசம் என்று அறிவித்து வெளிப்படையாக சோசலிசம், பொதுவுடைமை மீது எதிர்ப்பு தெரிவித்தார்களோ அப்போதே தங்கள் முகமூடிகளை கழற்றி விட்டவர்களாகி விட்டார்கள். தான் கொண்ட கொள்கைக்கு உண்மையாயிருந்து மடிந்தார்கள். ஆனால் இன்றும் நம் மத்தியில் முகமூடி கழற்றாத சந்தற்பவாதிகள்தான் சூழ்ந்திருக்கிறார்கள்.


இந்த முதலாளித்துவ ஜனநாயக தேர்தலில் போட்டியிடும் பல காட்சிகள் அப்படிப்பட்டவையே. இங்கிருக்கும்; பாட்டாளி என்ற பெயரில் சாதிவெறியை தூண்டிவிடும் கட்சியும், முற்போக்கு - பகுத்தறிவு - சமூகநீதி என்றெல்லாம் பேசும் திராவிட கட்சிகளும் அந்தவகை சார்ந்தவையே. சொல்லப்போனால் இந்தியாவில் அதிகாரபூர்வ இடதுசாரிகளாக காட்டிக்கொள்ளும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட்களின் தொடக்ககால நடத்தையே சந்தர்பவாதமானதாகும். இவர்கள் ஹிட்லர், முசோலினியை விட ஆபத்தானவர்கள். இவர்களால் புரட்சியும் ஏற்படாது முன்னேற்றமும் ஏற்படாது. 


- தீயவன் 

No comments:

Post a Comment