Breaking

Tuesday, May 30, 2023

1857 - படைவீரர்கள் கிளர்ச்சி என்பது இந்தியர்களின் முதல் சுதந்திர போரா! | கட்டுக்கதைக்கு மறுப்பு

*இப்பதிவு முகநூலில் வந்த நேரமே இதை பகிர்ந்தவரிடம் இது பிழையான தகவல் என்று கூறினேன். என்ன பிழை என்றுகூட கேட்காமல் எல்லாம் எங்களுக்கு தெரியும் எங்களுக்கு யாரும் பாடம் கற்பிக்கத்தேவையில்லை என்று அகங்காரமாக கூறினார். சரி என்று விட்டுவிட்டேன், ஆனாலும் அவ்வப்போது இப்பதிவுக்கு மறுப்பு எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்து செல்லும். அதற்கான நேரமும் கிடைக்காமல் இருந்தது. அதனால் தான் இப்போது அப்பதிவிற்கு மறுப்பு எழுதுகிறேன்.




https://senthalam.com/384?fbclid=IwAR2qIxMR2OSn7czVMaW-sO8f-aPfbVDqfrqXg_rQf2OkPGVa56nvIGnyXwg

👆இந்த தலத்தில் உள்ள பதிவின் நோக்கம் சிப்பாய் கிளர்ச்சியை பெரியார் கொச்சைப்படுத்திவிட்டார், அவர் ஆங்கியேலர்களின் விசுவாசி என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் 1857 ஆம் ஆண்டு நடந்த படைவீரர் கிளர்ச்சி என்பது உழைக்கும் மக்கள் மற்றும் சிப்பாய்களால் இணைந்து நடத்தப்பட்ட  இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று அறிவிப்பதாக உள்ளது. இது உண்மையா? 


அப்பதிவின் முதல் வரியிலேயே பிழை உள்ளது.

//1857 ல் இந்தியாவில் உழைக்கும் மக்கள் மற்றும் இந்திய சிப்பாய்களால் இணைந்து நடத்தப்பட்ட எழுச்சி போராட்டமானது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியையும் பிரிட்டிஷ் அரசையும் நடுங்க வைத்தது.//


சிப்பாய்களோடு இந்திய உழைக்கும் மக்களும் இணைந்து நடந்ததாக சொல்லப்படுவது முதல் பிழை. இது முழுக்க முழுக்க இந்திய சிப்பாய்களால் நடத்தப்பட்டது மட்டுமே. வட இந்திய - மீரட் பகுதியில் தொடங்கப்பட்டு மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும் பரவியது. இதில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லை. 


அப்போரை இந்தியர்களின் முதல் சுதந்திர போர் என கார்ல் மார்க்ஸ் சொன்னதால் இவர்களும் கிளிப்பிள்ளைபோல அது இந்தியர்களின் முதல் சுதந்திர போர் என்று சொல்கிறார்கள். இது சரியா?


இக்கிளர்ச்சி எப்படியெல்லாம் வரையறுக்கப்படுகிறது?


 "முதல் இந்திய விடுதலை போர்" - என்று சாவர்க்கர் தொடங்கி சில தேசிய உணர்வாளர்கள். 

"சிப்பாய் கலகம்" - என்று ஆங்கிலேயர்கள்.

"இந்து - முஸ்லீம் சனாதனவாதிகள் நடத்திய போராட்டம்" (ஐரோப்பிய புதுமையை எதிர்த்து பழமையை தக்கவைத்துக்கொள்ள)

"இஸ்லாமிய சதித்திட்டம்" (முகலாய பேரரசை மீண்டும் கொண்டுவர)


என்று பலவகையாக கூறப்படுகிறது. இவை அனைத்திற்கும் சான்றுகள் கூறமுடியும் என்பதாலேயே இதை ஒரு வட்டத்துக்குள் வைத்து பார்க்கமுடியாத நிலை உள்ளது என்பதே உண்மை. ஆனாலும் இதை தேசிய இயக்கம் என்றோ மக்களின் எழுச்சி என்றோ கூறுவது முற்றிலும் தவறாகும். அரசியல் ரீதியாக ஆங்கிலேயரை வெளியேற்றி முகலாய அரசை பதவியேற்றும் திட்டத்தின்படி இது விடுதலைப்போர்தான். இஸ்லாமிய - இந்து மன்னர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த அதிகாரப்போர். முகலாய பேரரசை இந்தியாவில் மீண்டும் கொண்டுவர கலகத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட போர்.


தேசியம், தாய்நாடு, நாட்டை மீட்பது போன்ற உணர்வு இல்லாமல் சரியான திட்டங்கள் இல்லாமல் தன்னலத்திற்காக பழிவாங்கும் நோக்குடன் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வெறியாட்டத்தை மட்டுமே கொண்டிருந்தார்கள். அதனாலேயே மக்களின் ஆதரவின்றி தோல்விதடைந்தது.


கிளர்ச்சிக்கான காரணங்கள்:


அரசியல் -  டல்ஹௌஸி பிரபுவின் வாரிசிழப்பு கொள்கை (இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கொண்டுவந்த திட்டம்). இது இந்திய மன்னர்களை உசுப்பிவிட்டது. 


ஜான்சி ராணிக்கு தத்தெடுக்கும் உரிமை மறுப்பு, நானாசாகிப்பிற்கு ஓய்வூதியம் மறுக்கப்படுத்தல்.. etc 


இந்தியமன்னர்களுக்கு சரியான மரியாதை இல்லாமல் ஆங்கிலேயருக்கு அடிமைபோல் இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக சதிசெய்ய திட்டமிட்டனர். 


பொருளாதாரம் - இந்திய மன்னர்களிடம் துணைப்படை திட்டம் மற்றும் திறை போன்றவற்றால் பலகோடி ரூபாய்களை வசூலித்தது. ஆங்கிலேயரின் நில வருவாய் திட்டம் மூலம் பல நிலகீழார்கள் (சமீந்தார்கள்) பாதிக்கப்பட்டனர். (முகலாயர் ஆட்சிக் காலத்தில் சமீந்தார்கள் அதிகார வர்க்கத்தினராக இருந்தனர்.)


இந்திய வணிகர்களைவிட ஆங்கிலேய வணிகர்களே அதிக லாபம் ஈட்டினார்.


1852-ல் டல்ஹௌஸி பிரபு நியமித்த இனாம் குழு நில உரிமை பத்திரம் இல்லாத 20,000 பண்ணைகளை பறிமுதல் செய்தது.


பதவியிழந்த மன்னர்கள், நிலக்கீழார்கள், பிரபுக்கள்  தாம் இழந்ததை மீட்க துடித்தனர். வஞ்சிக்கப்பட்ட உழவர்கள், வணிகர்கள், படைவீரர்கள் போன்றவரை கலகம் செய்ய தம் பக்கம் ஈர்த்துக்கொள்ளவும் இவர்கள் தயங்கவில்லை.


சமூகம் - இந்தியாவில் ஐரோப்பிய நாகரீகம் வளர்வது, சதியொழிப்பு, விதவை மறுமண சட்டம், சிசுக்கொலையை சட்டவிரோதமாக்குதல், கிறிஸ்தவ மதம் மாறியோர்க்கு சொத்துரிமை, மேலைநாட்டு கல்விமுறை போன்ற சமூக சீர்திருத்தங்கள் பழமை பற்றாளர்களுக்கு ஆத்திரமூட்டியது. மேலும் இந்த மாற்றங்கள் இந்து சமூக - சாதிமுறைக்கு எதிராக இருப்பதாய் உணர்ந்த பழமைவாதிகள் ஆங்கிலேயரை வேரறுக்க துடித்தனர். 


சமயம் - ஆங்கிலேயர்கள் நடத்தும் திருச்சபை பள்ளிகள், ஆதரவு இல்லங்கள், மருத்துவ நிலையங்கள் எல்லாம் சாதி முறையை அழித்து கிறிஸ்தவ சமயம் பரப்பும் முயற்சி என்று நினைத்தனர். 


சதி ஒழிப்பு, சிசுக்கொலை தடுப்பு, விதவை மறுமணம் போன்ற நடவடிக்கைகள்  இந்து மதத்தில் அத்துமீறி தலையிடும் செயலாக கருதினர்.


படைவீரர்கள் மத அடையாளங்களோடு இருக்கக்கூடாது. தாடி, மீசை நீக்கவேண்டும். கடல் கடந்து பணியாற்ற வேண்டும். முஸ்லீம் வீரர்கள் தொப்பி அணிய தடை, இந்தியர்கள் தலைப்பாகை அணிய தடை. ஐரோப்பிய முறையிலான தொப்பியை மட்டுமே அணிய வேண்டும் என்றது.


குற்றவியல் நீதிமன்றங்களில் "மௌலவிகள்" (இஸ்லாமிய சட்ட அறிஞர்) என்று பணியாற்றிய இஸ்லாமிய குருமார்களின் பதவி இழப்பு இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டியது.


கிறிஸ்தவ சமயம் பரவ ஏற்பாடுசெய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக அறிவித்ததும் வெறுப்பை ஏற்படுத்தியது.


படைத்துறை - படையிலிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் சிப்பாய்களாக மட்டுமே இருந்தார்கள்.ஆங்கிலேயர்கள் உயர் பதவிகளில்.


அதிக ஊதியம் தேவை என்று  1806 முதல் 1852 வரையிலும் பல கலகங்கள் நிகழ்ந்துள்ளது. அவை அடக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டது.


படைகளில் இருந்த இந்துக்களில் பெரும்பாலானோர் உயர்குலத்தை சார்ந்தவர்களாக இருந்ததால் இவர்களின் சமய நம்பிக்கைபடி கடல்கடந்து பணியாற்ற மறுத்தனர்.


மத அடையாளமின்றி இருத்தல், தேவையற்ற விதிமுறைகள், தவறு செய்யும் வீரர்களுக்கு கசையடி போன்ற கடும் தண்டனைகள் போன்றவற்றால் இந்து, இஸ்லாமிய வீரர்கள் கொதிப்படைந்தனர். படைவீரர்களை மதமாற்றம் செய்ய முனைவதாக எண்ணினார்.


உடனடி காரணம்:


மேலே சொல்லப்பட்ட காரணங்களால் கனன்று கொண்டிருந்தவர்களை வெடிக்க செய்த காரணம் அப்போது வந்திருந்த என்ஃபீல்டு தோட்டாக்கள் (Enfield rifle) இத் தோட்டாக்கள் மேலுள்ள உரையை பல்லால் கடித்து கிழித்து துப்பாக்கிக்குள் இட்டு சுடவேண்டும். பல்லால் கடித்து கிழிக்க வசதியாக தோட்டங்களில் கொழுப்பு தடவப்பட்டிருக்கும். 



இது தாங்கள் புனிதமாக கருதும் பசுக்களின் கொழுப்பாக இருக்குமோ என்று இந்துக்களும், தாங்கள் அசுத்தமாக கருதும் பன்றியின் கொழுப்பாக இருக்குமோ என்று இஸ்லாமியர்களும் அச்சம் கொண்டனர். எனவே அத்தோட்டாக்களை பயன்படுத்த மறுப்பு தெரிவித்தார்கள். மறுத்தவர்கள் அவமதிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டார்கள். இதற்க்கு பழிவாங்கவே மங்கள் பாண்டே என்பவர் இந்நிகழ்வுக்கு அடுத்தநாள் தன் மேலதிகாரியை சுட்டு கொன்றார். கலகம் துவங்கியது முப்படை வீரர்களும் காலத்தில் இறங்கி மீரட்டிலிருந்த அணைத்து ஐரோப்பியர்களையும் கொன்றுகுவித்தார்கள். பிறகு டெல்லிக்கு சென்று அங்கிருந்த சிப்பாய்களை இணைத்துக்கொண்டு ஆங்கிலேயர்களையும், அவர்களின் குடியிருப்புகளையும் அழித்தார்கள்.


கிளர்ச்சியின் போக்கு:


கலகக்காரர்கள் டெல்லியை கைப்பற்றியதும் முகலாய பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவை இந்துஸ்தானின் பேரரசாக அறிவித்தார்கள். இச்செய்தி வடஇந்தியாவெங்கும் பரவத்தொடங்கியது.  கான்பூரில் நானாசாகிப்பின் தலைமையில் கலகம் நடந்தது. மனைவி குழந்தைகளுடன் ஆங்கிலேயர்கள் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பீகாரில் - 300 கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டு பிணங்கள் கிணற்றில் எறியப்பட்டன. இவைகளே "கான்பூர் படுகொலை"  என அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலேயர்களை திகிலடைய செய்தது.


வாரிசிழப்பு கொள்கையால் பாதிக்கப்பட்ட ஜான்சி ராணியும் பழிவாங்க இதுதான் நல்ல நேரம் என்று நானாசாகிபு மற்றும் பிறருடனும் கலகத்தில் இணைந்து தாக்குதல் மேற்கொண்டார். கலகம் வெடித்த இடங்களிலெல்லாம் ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். 


பிறகு ஆங்கிலேய தளபதிகள் கலவரங்களை அடக்கினார்கள். டெல்லியையும் கைப்பற்றினார்கள். இரண்டாம் பகதுர்ஷா (முகலாய பேரரசர் சிறைபிடிக்கப்பட்டு ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரது மகன்களும், பேரன்களும் கொல்லப்பட்டார்கள். மகள்கள் மட்டும் இருந்தார்கள். கலகத்தில் ஈடுபட்ட மன்னர்கள் தப்பியோடினர் சிலர் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். 1858-ஆம் ஆண்டு சிப்பாய் கிளர்ச்சி நசுக்கப்பட்டு முடிவடைந்தது. 


புரட்சி நடந்ததற்கான மேலேயுள்ள காரணங்களையும் போக்குகளையும் பார்த்தீர்கள். இது சுதந்திர போராட்டம் என்ற வரையறைக்குள் இருக்கிறதா? என்று நீங்களே சிந்தியுங்கள். ஆங்கிலேயருக்கு  எதிராக அரசியல், சமய, சமூக, பொருளாதார காரணங்களால் மனமொடின்டந்திருந்த பல தரப்பினர்; படைவீரர் கலகம் துவங்கிய காரணத்தை பயன்படுத்திக்கொண்டு தமது வெறுப்பையும், எதிர்ப்பையும் மனம்போன போக்கில் எவ்வித தலைமையும், திட்டமும் இன்றி ஆங்கிலேயருக்கு எதிராக வெளிக்காட்டினர் என்பதே இந்நிகழ்ச்சிக்கு சரியான விளக்கமாக இருக்க இயலும். மக்களின் தன்னெழுச்சி தேசிய விடுதலை போராட்டமல்ல வேண்டுமானால் பிற்காலத்தில் தேசிய விடுதலைக்காக இப்போராட்டத்தை முன்னுதாரணமாக கொள்ளத்தொடங்கினர் என்று சொல்லலாம்.

 

மேலும் அப்பதிவில் //இந்திய வரலாறு பற்றி தட்டையான புரிதலும், குறைந்த பட்சம் ஒன்றை பற்றி முழுவதும் அறிந்து கொண்டு பேசுவோம் என்கிற மனநிலை இல்லாமல் இருப்பதும், நாடி நரம்பு இரத்தம் சதை இதில் அனைத்திலும் ஏகாதிபத்தியத்திய ஆதரவு வெறிப்பிடித்துமான ஒருவரால் மட்டுமே முடியும்.// என்று சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் குறைந்த பட்சம் ஒன்றை பற்றி முழுவதும் அறிந்து கொண்டு பேசுவோம் என்கிற மனநிலை இல்லாமல் பதிவிட்டது யாரென்று நான் சொல்லவேண்டியதில்லை. 


"ஆதரவு தெரிவிக்க உண்மை தேவையில்லை அதேபோல் எதிர்ப்பு தெரிவிக்கவும் உண்மை தேவையில்லை. ஆனால் உண்மை தெரிவிப்பது என்பது ஆதரவோ, எதிர்ப்போ அல்ல வெறும் உண்மை மட்டுமே." ஒரு நிகழ்வை முழுமையாக பார்க்கவேண்டும். தான் நம்பும் அல்லது தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு அதன்படி நிறுவுதல் கூடாது.   


//நாடி நரம்பு இரத்தம் சதை இதில் அனைத்திலும் ஏகாதிபத்தியத்திய ஆதரவு// 


ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள், சுரண்டினார்கள், வல்லாதிக்கம் கொண்டிருந்தார்கள் சில சீர்திருத்தங்களையும் செய்தார்கள் என்பதும் உண்மை அதற்காக வரலாற்றில் நிகழ்ந்த ஒரு கிளர்ச்சியை உண்மைக்கு புறம்பாக மிகைப்படுத்தி சொல்வதென்பது தவறான உதாரணமாகிவிடும். 


- தீயவன் 

No comments:

Post a Comment