Image Courtesy: Achyutananda Samanta |
துன்பத்தில் உழலும் தன் குடிமக்கள் மகிழ்ச்சியும், சுதந்திரமும் அடைய ஒரே வழி அவர்கள் சொர்க்கலோகம் செல்வதே என்று சிந்தித்த அரசன் அமைச்சரவையைக்கூட்டி தன் நாட்டு மக்கள் அனைவரையும் துன்பத்திலிருந்து மீட்டு சொர்கத்திற்கு அனுப்பிவைப்பதற்கு அவர்களின் ஆன்மாவை உடலிலிருந்து பிரிக்க ஆணையிட்டார்..
அமைச்சரவையில் வலதுபக்கத்தில் இருந்த அமைச்சர்கள் எல்லோரும் கரகோஷத்துடன் வரவேற்றார்கள். இடதுபுறத்தில் இருந்த சில அமைச்சர்கள் ஆதரவுதெரிவிக்காமல் மௌனம்காத்தார்கள்...
இந்த செய்தியைக்கேட்ட துன்பத்தில் உழலும் குடிமக்கள் அதிர்ந்துபோய், நம் விருப்பமினின்றி எப்படி அனுப்பிவைக்க ஆணையிடலாம்! எனக்கு சொர்கம் செல்ல விருப்பமில்லை, நான் இங்கேயேதான் இருக்கப்போகிறேன்! அந்த ஆணையை கடைபிடிக்கப்போவதில்லை என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
அரசரின் ஆதரவு அமைச்சர்களோ, துன்பத்தில் உழலும் உங்களுக்காக இதுவரை யாரும் செய்யத்துணியாத செயலை அவர் செய்ய விழைகிறார்.. சொர்க்கலோகம் அனுப்பிவைக்க ஆசைப்படுகிறார். அங்கே இல்லாதது என்ன ? நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியோடு, உங்கள் குடும்பத்தினருடன் சுதந்திரத்தோடு வாழலாம்.. அதைவிட்டுவிட்டு ஏன் மறுக்கிறீர்கள் என்று மக்களை ஆணைக்கு கட்டுப்படவைப்பதற்கான செயலில் இறங்கினார்கள்.
விஷயம் மன்னரின் காதுக்கு சென்றது ஆதரவுதெரிவிக்காத அமைச்சர்களைக்கூட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார்:
"உங்கள் ஆட்சியின் எல்லைக்குட்பட்டப் பகுதிகளெல்லாம் சொர்கலோகமாக இருக்கும்போது அவர்களை இங்கிருந்து பிரித்து அனுப்பிவிட்டால் அவர்கள் மிகவும் வருந்துவார்கள், சொர்கமே சென்றாலும் உங்களின் ஆட்சியின்கீழ் அவர்கள் குடிமக்களாக இல்லாததை எண்ணி கவலையென்னும் துன்பத்தில் ஆழ்ந்திட நேரிடும் மன்னா, எனவே அவர்கள் சம்மதித்தால் மட்டுமே அவர்களை சொர்க்கலோகம் அனுப்புங்கள்" என்று சொன்னார்கள்.
"நான் மாற்றுக்கருத்துக்கு எப்போதும் மதிப்பளிப்பவன், துன்பத்தை ஒழித்து விடியலை கொண்டுவருவதே இந்த அரசின் நோக்கம்! துன்பத்தை ஒழிக்க நான் மேற்கொள்ளும் இம்முயற்சி குடிமக்களுக்கு துன்பத்தை கொடுக்குமானால் அதை நடைமுறைப்படுத்துவத்தைப்பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும். ஆகவே, தற்காலிகமாக இந்த ஆணையை நிறுத்திவைக்கிறேன்" என்று அறிவித்தார்.
மக்கள் கருத்துகளையும் காது கொடுத்து கேட்கும் மன்னர் இதுவரை எவருமில்லை, உங்களின் ஜனநாயக பண்பை கண்டு வியக்கிறோம் என்று அமைச்சர்கள் முகஸ்துதி செய்து பாராட்டிக்கொண்டிருந்தார்கள்.
மக்களோ, அடுத்து என்ன ஆணைபிறப்பிக்கப்படுமோ என்ற பயத்தோடே நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார்கள்....
- தீயவன்
No comments:
Post a Comment