மனிதர்களால் இனப்படுகொலை செய்யப்படும் தெருநாய்கள்! என்ற முந்தைய பதிவில் தெருநாய்களை கருணைக்கொலை செய்வதற்கு அரசாணை வெளியிட்டதன் பின்னணி பற்றியும் நாய்கள் பற்றிய சுருக்கமான வரலாறு பற்றியும் தெருநாய்கள் பிரச்சனைக்கு தீர்வுகள் எப்படி இருக்கவேண்டும் அவைகள் சாத்தியமா என்பதை பற்றியும் மேலோட்டமாக பார்த்தோம்.
இந்தவேளையில், நீயா நானா விவாத நிகழ்ச்சியில் தெருநாய் ஆதரவாளர்கள் x எதிர்ப்பாளர்கள் என்று விவாதம் நடந்தது அதில் ஆதரவாளர்கள் என்று வந்தவர்கள் பலர் இந்த பிரச்னை குறித்த முழு புரிதலற்றவர்களாகவும், செல்ல பிராணி காதலர்களாகவும், விவாதம் செய்யுமளவு பக்குவமற்றவர்களாகவும், மனித நலனை காட்டிலும் விலங்குகளின் நலனில் அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்பவர்களாகவே இருந்தார்கள். இதனாலேயே இணையதளத்தில் கேலிகிண்டலுக்கு ஆளாகியுள்ளார்கள். சரியான ஒரு நிபுணர்கள் கூட அதில் இல்லை. மேலும் தெருநாய்கள் மீதான ஆத்திரத்தை மக்களிடையே இன்னும் அதிகமாக இவர்கள் காரணமாக அமைந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான அடுத்த நாளே சில இடங்களில் தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவங்கள் வெளியானது.
இவர்களால் இப்பிரச்சனை என்பது வர்க்க பிரச்சனையாக மாறியுள்ளது. அதாவது பணக்கார்களைத்தான் தெருநாய்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் அதேசமயம் அவர்கள் தெரு நாய்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாவதில்லை எளிய மக்கள்தான் பாதிப்புக்குளாகிறார்கள், ஒட்டுமொத்த எளிய மக்களின் கோரிக்கையும் தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்துவதே எனும் போக்கை இவ்விவாதம் உண்டுபண்ணியுள்ளது. எதிர்பாலர்களாக பேசியவர்கள் எல்லோரின் கோரிக்கையும் "தெருநாய்களே இல்லாத தெரு" என்பதாகவே இருந்தது. ஆனால் இது பாதிதான் உண்மை. தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தவேண்டும் என்று எளியமக்கள் விரும்புகிறார்கள் என்பதாக சொல்லுவது உண்மையல்ல; கட்டமைக்கப்பட்ட வாதம்.
இந்த விவாதம் தீர்வை நோக்கி நகரவில்லை மாறாக செல்லப்பிராணி ஆதரவாளர்கள் என்ற பெயரில் இருக்கும் சில தற்குறிகளின் மனநிலையை அம்பலப்படுத்துவதே நோக்கமாக இருந்தது. இது தவறில்லை ஆனால் இதன்மூலம் தெருநாய்களின் மீதான வெறுப்பை அதிகரித்துவிட்டது. தெருநாய்களுக்கு ஆதரவாக பேசும் அனைவரும் சக மனிதர்களின் மீது அக்கறையற்றவர்கள், உளவியல் ரீதியாக மனிதர்களை வெறுப்பவர்கள் எனும் கருத்தை உருவாக்கிவிட்டது. தெருநாய்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்படுவதுகூட சரிதான் என்னும் மனநிலையை கட்டவிழ்த்துவிட்டது.
மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களை (கடிக்கும் வெறிநாய்கள், நோய்த்தொற்று தாக்கிய நாய்கள்) நிச்சயம் அப்புறப்படுத்தவேண்டும் இதில் மாற்றுக்கருத்தில்லை. அதே சமையம் அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், தடுப்பூசிகள் செலுத்தப்படவேண்டும், காப்பகங்கள் அமைக்கப்படவேண்டும் - இவைகள் அனைத்தையும் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். இவைகளை சரியாக செய்துகொண்டுவந்திருந்தாலே இந்த பிரச்சனைகள் இவ்வளவு பெரிதாகியிருக்காது. இனிமேலாவது இவற்றை முறையாக செய்யவேண்டும். இதில் இன்னும் வேறுமாதிரியான தீர்வுகளையும் பற்றி அதில் நிபுணத்துவம் உள்ளவர்கள் கலந்தாலோசித்து எடுக்கவேண்டும். அதை விடுத்தது ஒட்டுமொத்தமாக அனைத்து தெருநாய்களையும் அழித்தொபழிப்பது என்பது (கொச்சையாக சொல்லவேண்டுமென்றால்) பைத்தியக்காரத்தனமானது - மனிதாபிமானமற்றது. தெரு நாய்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் எல்லோருமே தெருவில் நாய்களே இருக்கக்கூடாது என்று தான் விரும்புகிறார்கள். அப்படியென்றால் இந்த நாய்கள் அனைத்தையும் என்ன செய்வது? அவைகளை பராமரிக்க முறையான வசதிகளுடன் கூடிய காப்பகங்கள் இருக்கிறதா? எந்தவித முன் ஏற்ப்பாடும் இல்லாமல் குருப்பிட்ட நாட்களுக்குள் அனைத்து தெருநாய்களையும் பிடித்த அப்புறப்படுத்த வேண்டும் என்பது சரியான தீர்வு இல்லை என்றுதான் இத்தீர்ப்பை எதிர்த்தார்கள். வெறிநாய்களை அப்புறப்படுத்துவதற்க்கோ, எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கோ யாரும் எதிர்க்கவில்லை.
ஒரு முதலாளித்துவ ஊடகம் சமூகப் பிரச்சினையின் ஆழமான வேரைக் கண்டறியாமல், அதன் மேலோட்டமானவற்றின் மீது மட்டும் கவனம் செலுத்துகின்றது. இதன் மூலம், மக்கள் தங்கள் கோபத்தை அமைப்பின் மீது திருப்புவதற்குப் பதிலாக, தெருநாய்கள் மீதும், அவற்றை ஆதரிப்பவர்கள் மீதும் திருப்புகின்றனர்.
சமூக செயற்பட்டாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முற்போக்காளர்கள் என்று அறியப்படும் பலரும் தெருநாய்களுக்கு எதிரான கருத்துக்களை பேசும்படி இது செய்துவிட்டது. இதில் பலரும் அதே elite கள் தான். எங்கே தானும் மனிதாபிமானமற்றவன் என்று நினைத்துவிடுவார்களோ என்று நினைத்து "மனிதர்களின் மீது அக்கறை காட்டாதவர்கள்தான் தெருநாய்கள் மீது அக்கறை காட்டுகிறார்கள்" என்று பேசும்படியாகிவிட்டது.
இது ஒரு குழு சிந்தனையாக (Groupthink) மாற்றிவிட்டது. இந்த நிலையில், மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இதனால், சரியான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.
சமூகவலைத்தளங்களில் பலரது கருத்து இப்படித்தான் உள்ளது //இந்த உலகம் மனிதர்களால் உருவானது, மனிதர்களுக்காக உருவானது. அதுல வாழ்ற அத்தனை உரிமையும் மனுஷனுக்கு மட்டும் தான் உண்டு. அவனோட பாதைல நா*ய்,பூனை,எலி டைனோசர் இப்புடி எது வந்தாலும் அதை பாதைய விட்டு அப்புறபடுத்திட்டு தன் பயணத்தை தொடருவான்..//
இதுபோன்ற கருத்துக்களை அதிகம் பகிர்கிறார்கள். இப்படிப்பட்ட speciesism கருத்தின் ஆபத்தை பற்றி பேசினாலே "போலி உயிர்நேயவாதி, மனிதாபிமானமற்றவன்" என்று Mob Mentality யோடு அனைவரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள்.



No comments:
Post a Comment