இப்போது நகரங்களின் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகளவில் பெருகியுள்ளதாகவும் அதேசமயம் வெறிபிடித்த தெருநாய்களால் கடிபட்டு - ரேபிஸ் (Rabies) எனும் வைரஸ் நோய் தாக்கி இறக்கும் சம்பவம் நிகழ்வதாலும். அச்சுறுத்தலாகவும் கருதப்படுவதால் சமீபகாலங்களில் இது பற்றிய பேச்சுக்கள் பரவியிருந்தது. அரசு இதற்கு ஒரு தீர்வுகாணவேண்டும் என்ற குரல் வலுத்துக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு சுற்றித்திரியும் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
இச்செய்தியை பலர் ஆதரித்து வருகிறார்கள். யாராவது மாற்று கருது வைத்தால் மந்தையாக சேர்ந்து அவரை தற்குறி, அறிவற்றவர், விலங்குகள் மீது அக்கறைகாட்டுவதாக சொல்லும் போலியவாதி என்றெல்லாம் தூற்றி மிதித்து வெளுத்து அனுப்புவார்கள். இதனாலேயே Animal Lover என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் கூட பொத்திக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள்.
இவர்களின் கவலை புரிகிறது. தெருநாய்கள் பெருகிவிட்டதால் ஏற்படும் அச்சம் நியாயமானது. வெறிநாய் கடி, ரேபிஸ் பரவல், வாகன விபத்துகள் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கருணைக் கொலை மட்டுமே நிரந்தர தீர்வாக அமையுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இவைகளுக்கு தீர்வை தேடும் முன்பு நாய்களின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று ஆராய வேண்டும். மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்லப்படும் இந்த நாய்கள் பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்துள்ளது. நாய்கள், ஓநாய்களில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவை. மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக ஓநாய்களைப் பழக்கி, வேட்டை, கால்நடைப் பாதுகாப்பு, திருடர்களிடமிருந்து பாதுகாத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தினர். காலப்போக்கில், இந்த ஓநாய்களே இன்றைய நாம் காணும் பல்வேறு வகையான நாய்களாகப் பரிணாம வளர்ச்சி பெற்றன. இன்றும், நாய்கள் மனிதர்களுக்கு பல்வேறு வழிகளில் உறுதுணையாக இருக்கின்றன; காவல்துறை மற்றும் ராணுவத்தில் குற்றவாளிகளைக் கண்டறியவும், வெடிகுண்டுகளைக் கண்டறியவும், காணாமல் போனவர்களைத் தேடவும் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட நாய்கள், தங்கள் காட்டு மூதாதையர்களான ஓநாய்களைப் போலக் காடுகளில் தனித்து வாழும் திறனைப் பெரும்பாலும் இழந்துவிட்டன. அவற்றின் உணவுமுறை மற்றும் குணநலன்கள் மனிதர்களுடனான தொடர்பால் மாறியுள்ளன.
இந்தச் சூழலில், அவைகளின் தேவை முடிந்ததும் தூக்கியெறிந்து விட்டு அவைகளுக்கும் மனிதர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுபோல் மாறிவிட்டோம். அவைகளெல்லாம் திடீரெண்டு வானத்திலிருந்து வந்துவிட்டதா என்ன! தெருநாய்களின் இன்றைய நிலைக்கு மனிதர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.
தெருநாய்களின் இந்த விஷயத்தில், சரியான முறையான அணுகுமுறைகளை கடைபிடிக்கவேண்டும். தடுப்பூசி செலுத்துவது, தேவைப்பட்டால் அவைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட அளவுக்குலேயே இருக்கும்படி இனப்பெருக்க கட்டுப்பாடு (நேர்மையான முறையில்), பராமரிப்பு காப்பகம் (அவைகளின் மன ஆரோக்கியத்தை குலைக்காத வகையிலான சுற்றுப்புற சூழலுடன்), மருத்துவ உதவி, போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.
ஆனால் இந்தியா போன்ற ஏழை நாடுகளில், தெருநாய் மேலாண்மைக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. மனிதர்களுக்கே தரமற்ற அத்தியாவசியப் பொருட்கள் (நியாய விலைக்கடைகளில்), மருத்துவ வசதிகள், கல்வி, சாலைகள் என அடிப்படை வசதிகள் கூட தரமாகவோ, முழுமையாகவோ கிடைக்காத சூழலில், நாய்களின் பராமரிப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஊழல் நிறைந்த சமூக அமைப்பில், நாய்களின் பராமரிப்புக்கான நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதும் கேள்விக்குறியே.
அரசாணையின் நோக்கம் கருணைக் கொலையாக இருந்தாலும், களத்தில் நோய்வாய்ப்பட்ட நாய்கள் என்ற பட்டியலில் ஆரோக்கியமான நாய்களும் சேர்க்கப்பட்டு, கொல்லப்படும் அபாயம் உள்ளது. காப்பகங்கள் அமைக்கப்பட்டாலும், போதுமான இடவசதி, உணவு, தண்ணீர், மருத்துவ கவனிப்பு மற்றும் சுகாதாரம் இல்லாமல் போனால், அவை நாய்களுக்கு மேலும் மன அழுத்தத்தையும், நோய்களையும் ஏற்படுத்தும். நெருக்கடியான இடங்களில் அடைக்கப்படும் நாய்களுக்கு இடையே சண்டைகள் ஏற்பட்டு, காயங்கள் அல்லது நோய்கள் வேகமாகப் பரவக்கூடும். இது ஒரு காப்பகமாக இல்லாமல், நாய்களுக்கான சிறைச்சாலையாகவே மாறிவிடும்.
தெருநாய் விஷயத்தில் மனிதாபிமானத்தையும், அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகளையும் பின்பற்றுவது மிகவும் முக்கியம். இதற்கு அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்.
தெருநாய்களில்லா தெரு இருந்தால் போதும் அவைகளை பற்றி கவலை இல்லையென்று நினைப்பீர்களென்றால் உங்களைவிட கேவலமான பிறவி யாரும் இருக்க முடியாது.
ஹோமோ சேபியன்களான நாம் பல இனங்களை அழித்திருக்கிறோம். அந்த விழிப்புணர்வுடன், மாற்று கருத்துக்களை முன்வைப்பவர்களை மந்தை புத்தியுடன் விமர்சிக்காமல், ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
- தீயவன்
No comments:
Post a Comment