Breaking

Sunday, August 24, 2025

பரிசுத்தமற்ற வேதாகமம்: ஆதியாகமம் எனும் கட்டுக்கதை | நூல் அறிமுகம்

 


    வேதாகமங்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்டவை, அல்லது அவை கடவுளின் வார்த்தைகள், அவற்றில் எந்தப் பிழையும் இல்லை என்ற நம்பிக்கையாளர்ளின் கருதுகோள்கள் உண்மையற்றவை என்பதற்குரிய ஆதாரங்கள் வேதாகமங்களிலேயே உள்ளது. இவற்றைத் தெளிந்த மனதுடன் அணுகினால், உண்மை நமக்குப் புலப்படும்.


அந்த வகையில், கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதாகமத்தின் முதல் நூலான ஆதியாகமத்தை விமர்சனபூர்வமாக ஆராய்வதே இந்நூலின் நோக்கம். 

 

முன்னுரை:


    யூதர்களின் புனித நூலான தனக் (Tanakh) என்றழைக்கப்படும் எபிரேய பைபிளைதான் கிறிஸ்தவர்கள் தங்கள் வேதாகமத்தில் பழைய ஏற்பாடாக சேர்த்துக்கொண்டுள்ளனர். இருப்பினும், இந்த இரு தொகுப்புகளிலும் உள்ள புத்தகங்களின் வரிசை மற்றும் தொகுக்கப்பட்ட விதத்தில் சில வேறுபாடுகள் உள்ளன. 



இந்த வேறுபாடுகளை நீங்கள் ஒப்பீட்டுப் படத்தில் தெளிவாகக் காணலாம்.


இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பல கதைகள் மேலோட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆபிரகாம் (இப்ராஹிம்), மோசே (மூசா), மற்றும் பிற தீர்க்கதரிசிகள் பற்றிய குறிப்புகள் குர்ஆனில் காணப்படுகின்றன. யூத மதம் (Judaism) ஒரு மரம் என்றால், கிறிஸ்தவமும் (Christianity) இஸ்லாமியமும் (Islam) அந்த மரத்திலிருந்து கிளைத்த (ஆனால் தமக்கான தனித்த பாதைகளில் செல்லும்) கிளைகள். இந்த மூன்று மதங்களும் ஆபிரகாமிய மதங்கள் (Abrahamic Religions) என்று அழைக்கப்படுகின்றன. இவைகள் ஒரே மூலத்திலிருந்து தோன்றினாலும், அவற்றின் இறையியல் விளக்கங்கள், சட்டங்கள், மற்றும் சடங்குகளில் தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. 


யூத மற்றும் கிறிஸ்தவப் புனித நூலான பைபிளின் முதல் நூலாகிய ஆதியாகமம், உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது, மனிதகுலத்தின் ஆரம்பகால வரலாறு, பாவம் எவ்வாறு உலகில் நுழைந்தது, மற்றும் கடவுள் ஆபிரகாமுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி இஸ்ரவேல் மக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது போன்றவற்றை விவரிக்கிறது.


இந்த நூலில் கூறப்பட்டவைதான் உண்மை என்று நம்பிக்கையாளர்கள் உறுதியாகக் கருதுகிறார்கள். உயிரினங்களும் உலகமும் ஆதியாகமத்தில் விவரிக்கப்பட்டபடியே தோன்றின என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆதியாகமத்தை ஒரு வரலாற்று நூலாகவே அவர்கள் பார்க்கிறார்கள், ஏனெனில் இது கடவுளால் அருளப்பட்டது என்றும், அதாவது அவை கடவுளின் நேரடியான வார்த்தைகள் என்றும், அவற்றில் எந்தப் பிழையும் இல்லை என்றும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். 


இதன் காரணமாகவே, உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, மற்றும் பிற விஞ்ஞான விளக்கங்களை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அறிவியல் என்பது இப்போது வந்தது அவற்றால் சிலவற்றை கண்டுபிடிக்க முடியாது.ஆனால் கடவுள் இல்லாமல் மனிதர்களோ, அறிவியலோ இருக்க முடியாது. எனவே, கடவுளால் அருளப்பட்ட இந்த வேதத்தில் உள்ளவையே முழுமையான உண்மை என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இந்த வாதம், அறிவியல் ரீதியான விளக்கங்களை மறுத்து, ஆதியாகமத்தின் கூற்றுகளுக்கு முழுமையான முன்னுரிமை அளிக்கிறது.


மேலும், இந்த அறிவியல் விளக்கங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், கடவுளால் அருளப்பட்ட இந்த வேதாகமத்தைப் படித்து உண்மையை உணர்ந்து கொள்ளுமாறு நம்பிக்கையாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் அறிவியல் ரீதியான விளக்கங்களை முழுமையாக உள்வாங்கிப் புரிந்து கொள்ள முனைப்புக் காட்டுவதில்லை. மாறாக, வேதாகமத்தின் மீது நம்பிக்கையற்றவர்களையும், விமர்சிப்பவர்களையும் பார்த்து, "நீ வேதாகமத்தை முழுமையாகப் படிக்காததால்தான் இப்படிப் பேசுகிறாய். போய்; வேதாகமத்தைப் படி" என்பார்கள்.


ஆகவே, வேதாகமத்தின் முதல் நூலாக உள்ள இந்த ஆதியாகமத்தை நாம் பிரித்து மேய்ந்து, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்வோம். அவர்களின் கூற்றில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பதையும் பார்ப்போம்.


Paperback & Hardcover - புத்தகம் வாங்க 👇


Amazon KDP - E-Book 👇

Amazon


No comments:

Post a Comment