பகுதி ஒன்றில் கோலார் பகுதியில் அசோக கல்வெட்டுகள் இருப்பதையும் அசோக மன்னன் தக்காணம் நோக்கி வந்ததே துங்கபத்ரா விலுள்ள தங்க வளத்திற்காக என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள் என்பதையும். கோலார் போல வேறுசில பகுதிகளிலும் கனிம வளம் நிறைந்த பகுதிகளில் பௌத்தமும், பௌத்த வணிகர்களின் தொடர்பும் இருந்திருக்கிறது என்பதையும் மேலோட்டமாக பார்த்தோம்.
இந்த இரண்டாம் பகுதியில் புத்தர் சிலை இருந்தால்தான் அது பௌத்த பகுதி என்று நினைப்பவர்களுக்கு சில points
கோலாரில் புத்தர் சிலை இல்லை எனவே பௌத்தத்துக்கும் KGF கும் சம்மந்தமில்லை ஆனால் தங்கலான் படத்தில் புத்தர் சிலையை காட்டி வரலாறை திரிக்கிறார் ரஞ்சித் என்று சொல்பவர்கள் சில விஷயங்களை புரிந்துகொள்ளவில்லை.
பௌத்தம் என்பது சிலை வழிபாடா?
எல்லா பௌத்தர்களும் சிலை வைத்து வணங்கினார்களா?
புத்தரின் சிலை இருந்தால்தான் அது புத்த தலமா?
புத்தர் மறைவிற்கு பிறகு பௌத்தம் பல பிரிவுகளாக பிரிந்தது. புத்தரை கடவுள் நிலைக்கு கொண்டு சென்று அவருக்கு சிலைகள் வடித்தது மகாயான பௌத்தர்கள் தான். மகாயான பௌத்தர்களின் காலகட்டத்தில் தான் பௌத்த சிலைகள் உருப்பெற்றன. (https://ennaththinkural.blogspot.com/2021/11/blog-post.html)
அசோகர் பின்பற்றியது ஹீனயான பிரிவு. (ஹீனயானம் மட்டும்தான் உண்மையான மரபு பௌத்தம் என்றும் சொல்லிவிடமுடியாது. மகாயான கருத்துக்கு எதிர்நிலைப்பாடு கொண்டவர்களை பொதுவாக அழைக்கும் பெயராகவே நான் பார்க்கிறேன். மேலும் ஹீனயானம் இலங்கைக்கு சென்றபோது அது தேரவாதமானது. தேரவாதம்தான் ஹீனயானம் என்றும் சொல்லிவிட முடியாது)
அசோகர் காலத்தில் புத்தருக்கு சிலைகள் இல்லாததற்கு காரணம் அவர் ஹீனயான பௌத்தத்தை பின்பற்றினார் என்பதே. அசோகர் கால பௌத்த கலைகளில், கற்சிற்பங்களில் புத்தரின் உருவம் பொறிக்கப்படவில்லை. மாறாக புத்தரை குறிக்கும் விதமாக பாதங்கள், அரசமரம், தம்ம சக்கரம், காலியான அரியணை போன்றவையே பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஆக எல்லா பௌத்தர்களும் சிலை வைத்திருப்பவர்களல்ல. மேலும் புத்தர் சிலை இருந்தால்தான் அங்கே பௌத்தம் இருந்தது என்று நம்புவது என்பது - ஒரு இஸ்லாமிய பகுதியில் சென்று அங்கு எந்த சிலைகளும் இல்லாததால் அங்கு கடவுள் வழிபாடு/நம்பிக்கை இல்லை என்று சொல்வதை போன்றது இக்கூற்று.
அதேபோல, இங்கே கற்களால் கட்டப்பட்ட இந்துக்கோயில்களே பெருமளவில் தென்படுவதால் இங்கே இந்துமதம் மட்டும்தான் தொடக்கத்திலிருந்தே இருந்துள்ளது என்று சொல்லிவிடமுடியுமா?? கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகே கற்களால் கோயில்கள் காட்டும் வழக்கம் தொடங்கியது. அந்த காலகட்டத்தில்தான் வைதீகமதம் - பக்திமதம் பரவ ஆரம்பித்தது.
அதற்குமுன் இங்கே பரவியிருந்தது அவைதீக மாதங்கள் அதில் பௌத்தத்திற்கு பெரும் பங்கு உண்டு. கிபி 6 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு கற்களால் கோவில்களோ கட்டிடங்களோ காட்டும் வழக்கம் இல்லை. செங்கற்களாலும், மரத்தாலும் கட்டப்பட்டது. மேலும் அக்கால கலைப்பொருட்கள்கூட - துணிகளிலும் சுவர்களிலும் ஓவியம் தீட்டுவது, மரசிற்பம், செங்கற்களால் காட்டப்படும் கட்டிடங்கள், விஹாரைகள் என்றே இருந்தது. இவைகளெல்லாம் காலத்தால் அழிந்துபோக கூடியவை என்பதால் இன்று நமக்கு கிடைக்கவில்லை. கிடைக்காததால் அவைகள் இல்லை என்று அர்த்தமாகாது. மேலும் அக்கால கற்சிலைகள் கிடடைத்ததாலும், இலக்கிய தகவல்கள் கிடைப்பதாலும் பௌத்தம் இங்கே இருந்திருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஒருகாலத்தில் - ஏன் இன்றும் கூட இது இந்துக்களின் நாடு இங்கே இந்தி மொழி, சமஸ்கிருதம் தான் தாய்மொழி என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, வரலாற்று ஆய்வின் போது இக்கருத்துகளை நினைவில் கொள்ள வேண்டும்.
தங்கலான் திரைப்படம் இல்லாத பௌத்த அடையாளத்தை கோலார் பகுதிக்கு கொடுத்து வரலாற்றை திரிக்கிறது என்று சொல்பவர்களுக்கு வரலாற்று புரிதல் குறைவு என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.
கோலார் பகுதியில் மேலை கங்கர்கள் ஆள்வதற்கு முன்பே கிமு 3 ஆம் நூற்றாண்டில் அசோகபேரரசின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது கோலார். ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்தால் அங்கே பௌத்தம் இருந்தது என்று சொல்லிவிட முடியுமா என்று கேட்பவர்களும் இருப்பார்கள். அசோக ஆளுகைக்குட்படாத தமிழ் நிலத்திலும் அதே காலத்தில் பௌத்தம் இருந்துள்ளது. மேலும் தங்கலான் திரைப்படம் பேசுவது தலித்துகள் பற்றி. தலித்துகளுக்கு நெருக்கமான மதமாக பௌத்தம் இருந்துள்ளது. பௌத்தர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கிவித்த தகவல்களும் உள்ளது. சமண மதத்தைவிட பிராமணியம் பகையாக கருதியது பௌத்தத்தைத்தான். இந்த பிராமணியத்திற்கும் பௌத்தத்திற்கும் உள்ள மோதலே இந்திய வரலாறு என்கிறார் அம்பேத்கர். எனவே தங்கலான் திரைப்படம் எதையும் திரிக்கவில்லை. வேண்டுமானால் தலித்தியம் பேசுவது அவர்களுக்கு எரிச்சலையும் ஒவ்வாமையையும் கொடுத்திருக்கலாம் அதனால்தான். வரலாற்றை திரிகிறீர்கள் என்று பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
- தீயவன்
No comments:
Post a Comment