புத்தரோ, சித்தரோ, சமண அருகரோ, இன்னபிற சமய கடவுளர்களோ இன்று நாம் காணும் அவர்களின் உருவங்கள் (சிலைகளாகவோ, ஓவியங்களாகவோ) இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்கிற யூகத்தின் அடிப்படையில் - சமய, இலக்கிய நூல்கள் அவர்களை வர்ணித்ததன் அடிப்படையில் கற்பனையாக வடிக்கப்பட்டவைகளே என்பது நமக்கு தெரியும். அந்த உருவம்போலவே அச்சசலாக அவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் நமக்கு தெரியும். ஆனால் அவைகள் ஒரு அடையாளத்திற்காக உருவாக்கப்பட்டு பின் வழிபாட்டிற்க்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எது எப்படியோ, இன்று அவைகள் ஒரு Symbol'லாக பார்க்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது.
எதோ ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இவைகள் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டிருக்கும். அப்படி, புத்தரையும் எதோ ஒரு காலகட்டத்தில் உருவமாக்கி இருப்பார்கள். அது எப்போது? யாரால்? என்பதைத்தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ளப்போகிறோம்.
புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பிறகு தோராயமாக 400 ஆண்டுகள் கழித்தே அவருக்கு உருவம் கொடுக்கப்பட்டது அல்லது உருவச் சிலைகள் உருவாக்கப்பட்டது. அதற்கு இடைப்பட்ட காலமான கி.மு மூன்றாம் நூற்றாண்டில் அதாவது அசோகப் பேரரசர் காலத்தில்கூட புத்தருக்கு சிலைகள் உருவாக்கப்படவில்லை. அசோகரை பற்றி நமக்கு தெரிந்திருக்கும் இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆட்சிசெய்தவர், பௌத்தத்தை தழுவி அவரது ஆட்சிப்பகுதிகளில் மட்டுமின்றி ஆசியா முழுவதும் பௌத்தம் பரப்ப முயற்சிசெய்தவர். இதே காலத்தில்தான் தமிழகத்திலும் பௌத்தம் நுழைந்தது. அவர் பல தூபிகளையும், விஹாரங்ககளையும், கல்வெட்டுகளையும் நாடெங்கும் அமைத்தாரே தவிர புத்தரின் உருவ சிலைகளை அமைக்கவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது,
"தம்மத்தை நிலைநிறுத்த அதை உருவாக்கியவரின் பெயரை பயன்படுத்தும் நிலை ஏற்படுமானால் அது தம்மமல்ல" என்பதுபோன்ற புத்தரின் போதனைகள் மற்றும் உருவ வழிபாட்டை, சடங்குகளை புத்தர் மறுப்பதால் அசோகர் அப்படி செய்யாமல் இருந்திருக்கக்கூடும்.
அசோகரும் புத்தருக்கு உருவம்கொடுத்து சிலைகள் வடிக்கவில்லையென்றால் வேறுயார் செய்திருப்பார்கள்? அதை தெரிந்துகொள்ள கி.பி முதலாம் நூற்றாண்டிற்கு செல்லவேண்டும்.
குஷான பேரரசு (கி.பி. 30 - 375) - அசோகருக்குப்பிறகு வடஇந்திய, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பெரும்பகுதிகளை ஆட்சிசெய்த ஒரு வலிமைக்க அரசு. கிரேக்க, பாரசீக, இந்திய போன்ற நாகரிகம், கலாச்சாரம் சங்கமித்து செழித்த ஒரு காலகட்டம் அது. இதன் விளைவாக "காந்தாரக்கலை" (காந்தாரம் என்ற பகுதியில் உருவானதால் அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது) என்ற புது கலை உருவானது. அதாவது இந்திய கலையும், உரோமானிய, கிரேக்க கலையும் இணைந்து உருவான ஒரு கலை எனலாம். இதனை கிரேக்க - புத்த கலை என்றும் அழைப்பார்கள்.
அந்த பேரரசில் குறிப்பிடத்தக்க அரசர் யாரென்றால் அது "கனிஷ்கர்". அவரது ஆட்சிக்காலத்தில்தான் "காந்தாரக் கலை பள்ளிகள்" அமைக்கப்பட்டு புத்தருக்கு முதன்முதலில் உருவம் கொடுத்து சிலைகள், நாணயங்கள் வெளியிடப்பட்டது. அரசராக, துறவியாக பின் ஞானம் அடைந்த பிறகு என்று புத்தரை பல நிலைகளில் வெளிப்படுத்தும் சிலைகள் உருவாக்கப்பட்டது. அதற்க்கு முன்புவரை புத்தரையும் அவரது போதனைகளையும் அடையாளப்படுத்தும் விதமாக புத்தரின் பாதங்கள், தூபிகள், விஹார்கள் மட்டுமே இருந்த நிலையில் இவரின் ஆட்சிக்குப்பிறகே புத்தருக்கு உருவச்சிலைகள் வைக்கும் வழக்கம் ஆரம்பமாகி இருப்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.
இதுமட்டுமல்ல, பௌத்தம் இரு பிரிவுகளாக பிளவுபட்டதும் இவரது காலத்தில்தான். அந்த பிளவிற்கும் இந்த உருவச்சிலைகளுக்கும் கூட தொடர்பிருக்கக்கூடும்.
புத்தர் மறைவிற்கு பிறகு நான்கு புத்த மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிற்கும் தோராயமாக 100 ஆண்டுகள் இடைவெளி இருக்கும். அந்த மாநாடுகளில் அணைத்து புத்த பிக்குகளும் கலந்துகொண்டு கொள்கையிலும், சங்க நடவடிக்கையிலும் திருத்தங்கள் செய்வார்கள். அந்தவகையில் நான்காவது மாநாட்டை நடத்தியவர் "கனிஷ்கர்".
அம்மாநாட்டில்தான் பிக்குகளிடையே கொள்கை மோதல் ஏற்பட்டு, புத்தரின் உருவ சிலைகளுக்கு சிறு சடங்குகள் செய்து, அவரை இறைவனின் அவதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் "மகாயானம்" (பெருவாகனம்) என்ற பிரிவினராகவும். உருவ வழிபாடு, சடங்கு, பூசை ஏதுமின்றி புத்தரின் போதனைகளின்படி அப்படியே நடப்பவர்கள் "ஹீனயானம்" (சிறு வாகனம்) என்ற பிரிவினராகவும் பிளவுபட்டார்கள்.
இம்மன்னன் மகாயான பௌத்தத்தை ஆதரித்து சீனா, கோரிய, ஜப்பான் போன்ற தூரக்கிழக்கு நாடுகளிலும் பரவச்செய்தார். இதனால் இவரை "இரண்டாம் அசோகர்" மற்றும் "இந்தியாவின் கான்ஸ்டன்ட்டைன்" என்றும் அழைப்பர்.
மகாயானம் புத்தரின் கொள்கைகளுக்கு நேர்மாறானது என்றாலும் அவர்களால் வைக்கப்பட்ட சிலைகள் தான் இன்று புதையலைப்போல தோண்டும் இடமெல்லாம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. அது பௌத்தம் இங்கு செல்வாக்குடன் இருந்து பின் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது என்பதை வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்றே எடுத்துக்கொள்ளமுடிகிறது.
- தீயவன்
குறிப்பு: நான் அறிந்தவற்றை அடிப்படையாகக்கொண்டு இவ்வாறு கூறியுள்ளேன், மாற்றுக்கருதிருப்பின் பின்னூட்டமிடவும்.
No comments:
Post a Comment