Breaking

Saturday, April 25, 2026

தமிழகத்தில் இடதுசாரி பாசிசம் - சர்வாதிகாரம்!

 


    இன்றைய சூழலில் குறிப்பாக தமிழகத்தில் இடதுசாரியம் என்ற ஒன்று இருக்கும் இடம் தெரியாமல் தேய்ந்து போய் - நீர்த்துப்போய் உள்ளது. ஆனால் இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு பஞ்சமில்லை. திரும்பும் திசையெல்லாம் முற்போக்காளர், முற்போக்கு எழுத்தாளர், மதச்சார்பற்றவர், கம்யூனிசவாதி, சோஷலிசவாதி, மார்க்சியவாதி, முதலாளித்துவ எதிர்ப்பாளர், சமூகநீதி செயல்பாட்டாளர், திராவிட சிந்தனையாளர் என்றெல்லாம் பலப்பல விதமாக தங்களை இடதுசாரிகளாக காட்டிக்கொள்பவர்களை பார்க்கலாம். 


இவர்கள் எல்லோருமே தான்கொண்ட கொள்கையை முழுமையாக கற்றபிறகுதான் வருகிறார்களா அல்லது மேம்போக்காக தெரிந்துகொண்டு கொள்கைவாதிகளாக ஆகிறார்களா என்று தெரியவில்லை. முழுமையாக கற்றவர் வெகுசிலரே இருக்கமுடியும்.


எது எப்படியோ, இங்கே பிரச்னை என்னவென்றால் இப்படிப்பட்டவர்களின் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கிறது. சுயநல நோக்கமே வெளிப்படுகிறது. மேலும் மேட்டிமைத்தனம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.


குறிப்பாக தேர்தல் அரசியலில் இவர்கள் பாசிசவாதிகளாக மாறிவிடுகிறார்கள்.


நேர்மையற்ற கட்சியுடன், மக்களின் நலத்தைவிட தன் நலனில் அக்கறையுள்ள, ஊழலுடைய, விளிம்புநிலையினருக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான கட்சியுடன் சொற்ப சீட்டுகளுக்காய் கூட்டணி வைத்துக்கொண்டு குறைந்தபட்ச நேர்மையும் இன்றி கூட்டணிதர்மம் என்ற பெயரில் அக்கட்சியை  வெற்றியடைய செய்யவும் அவப்பெயரை மறைக்கவும் அறிவுபூர்வமாக கதையாடல்களை உருவாக்கி மக்களை நம்பவைப்பதையே தொழிலாக கொண்டிருக்கிறார்கள். 


தற்போதைய நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. அதிகாரபூர்வ இடதுசாரிகள் என்று சொல்லிகொள்ளபவர்களேகூட வாக்கரசியலில் முதலாளித்துவ கட்சியிடம் சிக்கி கேடுகெட்ட நிலைக்கு சென்றுவிட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பது. எதிர் கட்சியினரை அறிவற்றவர்கள் தற்குறிகள் என்று வசைபாடுவது, மாற்று கட்சிக்கு வாக்களிப்பவர்கள் எல்லோரும் தற்குறிகள், வலதுசாரிகள் என்று முத்திரை குத்துவது. பாமர உழைக்கும் மக்களையே குறைகூறுவது. இவர்களை எதிர்த்து கேள்விகேப்பதே அறியாமையின் அடையாளம் என்று சொல்லும்படியான அச்சுறுத்தலை கட்டமைத்துவிட்டார்கள்.


இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும் ஒரு வலதுசாரி, தற்குறி என்று எந்த விசாரணையோ சுய விமர்சனமோ இன்றி மூர்க்கத்துடன் தாக்கி அழித்தொழிப்பதே (உடல் ரீதியான தாக்குதலல்ல - உளவியல் ரீதியாக தாக்குதல், விலக்கிவைத்தல், வாழத்தகுதியற்றவராக உணரச்செய்தல், எதிரியாக பாவித்தல்) கடமையென்பதுபோலவும் எந்தவித இரகத்திற்கும் தகுதியற்றவன் என்பது போலவும் வெறுப்பை உமிழ்வார்கள்.  இதுதான் எதார்த்த உண்மை. பல மாற்றுக்கருத்தை தத்துவரீதியாக முன்வைத்த எழுத்தாளர்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.       


இந்த வேளையில்தான் நம்முன் சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுகிறது.


  • இவர்கள் போலிகளா அல்லது உண்மையிலேயே இடதுசாரிகள்தானா?  
  • இடதுசாரியம் என்பது இப்படியான சர்வாதிகாரப் போக்கைத்தான் கொண்டிருக்குமா?
  • இவர்களைப் போன்றவர்களால் கட்டமைக்கப்படும் சோஷலிச சமூகம் சர்வாதிகாரமற்ற பாசிசமற்றதாக இருக்குமா? 
  • சோஷலிச புரட்சியே சர்வாதிகாரத்தினால்தான் சாத்தியம் என்ற கொள்கையை நம்பும் இவர்கள் எப்படி சர்வாதிகாரமற்று இருப்பார்கள்?


என்பதுபோன்ற அச்சமூட்டும் கேள்விகள் எழுகிறது... இவர்களை போன்றவர்களின் தாக்கத்தினால் இப்படி அச்சம் எழுகிறதா! நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறதா! நேர்மையானவர்களாக இருந்திருந்தால் இவ்வாறு தோன்றியிருக்காதா! 


இவ்வேளையில், ஜனநாயகத்தை கைக்கொள்வதே சரியாக இருக்கும் என்ற யோசனை எழுகிறது.    


இடதும் சரி வலதும் சரி இந்த ஜனநாயக கட்டமைப்பில் ஜனநாயகவாதிகளாக (அல்லது ஜனநாயகத்தை மதிப்பவர்களாக) இல்லாமல் இருப்பதுதான் ஜனநாயக சீர்கேட்டிற்கு காரணமாக இருக்கிறது... 


வலதும் சரி இடதும் சரி ஜனயாகத்தை ஒரு இடைஞ்சலாகவே பார்க்கிறது.  இடதுசாரிகளோ ஜனநாயகத்தை முதலாளித்துவ ஜனநாயகமாக பார்க்கிறார்கள். வலதுசாரிகளோ அதை மீற அல்லது உடைக்க முயல்கிறார்கள். இன்று ஜனநாயகமும் பெயரளவில் தான் இருப்பதாக தோன்றுகிறது. என்றாலும் ஜனநாயகமே நாம் கடைபிடிக்க வேண்டியது. 


எனவே ஒரு உண்மையான ஜனநாயகம் அதாவது முதலாளித்துவக் கூறுகளற்ற மற்றும் சர்வாதிகாரத்திற்கும் பாசிசத்திற்கும் இடம்கொடுக்காத; மையம் மற்றும் இருமை தகர்ந்து பன்மைத்துவத்தையுடைய ஜனநாயகத்தை உருவாக்கமுடியுமா? அப்படியொன்றை உருவாக்கவேண்டும். அதுதான் அனைவருக்குமானதாகவும் அத்தியாவசியமான ஒன்றாகவும் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட ஒரு  ஜனநாயக சமுதாயம்தான் சோஷலிச சமுதாயமாக இருக்க முடியும் அல்லது கருதமுடியும். 

 

முதலில் நாம் ஜனநாயக பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்.  ஏனென்றால் ஜனநாயகமற்ற தன்மை தான் பாசிசத்திற்கு, சர்வாதிகாரத்திற்கு வழிவகுப்பதாக இருக்கிறது. 


கடைசியாக சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் எத்தகைய கொள்கையையோ, கோட்பாட்டையோ, தத்துவத்தையோ, அரசியலையோ கொண்டிருங்கள் அது உங்கள் தனி விருப்பம்; முதலில் நேர்மையாக இருக்க பழகுங்கள். இங்கே நேர்மை என்பது கொள்கைக்கு நேர்மையாக இருப்பது பற்றி சொல்லவில்லை அப்படி இருப்பது நிச்சயம் நேர்மையல்ல ஏமாற்றுத்தனம். கொள்கைக்காக நேர்மையை அடகுவைக்கும் போக்கே இங்கு நிலவுகிறது. கொள்கைக்காக, சுய நலனுக்காக அநீதியை நீதியாகவும்  தவறை சரியாகவும் , பொய்யை உண்மையாகவும் மாற்ற அறிவின் துணைகொண்டு விளங்கங்களை கொடுத்து கதையாடல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். எனவே முதலில் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.         



- தீயவன் 


 

No comments:

Post a Comment