காதலைப்பற்றி பல்வேறு விதமான வரையைகள் உள்ளது. தத்துவவியலாளர்கள், அறிவியலாளர்கள், மாதங்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் தனிமனிதர்கள் என்று பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் காதலைப்பற்றி ஒவ்வொரு விதமான பார்வையை கொண்டுள்ளார்கள். அதுதான் காதல் இதுதான் காதல் என்று விளக்கங்களை கொடுத்துவிடும் அதை கடைபிடிக்க முயற்சித்தும் கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஒருவர் எதை காதல் என்கிறாரே அது மற்றவர்க்கு காதலற்றதாக இருக்கும் - இருவரின் கருத்து இன்னொருவரின் கருத்துக்கு முரண்பாடாகவே இருக்கும். அல்லது எல்லாவற்றையும் கலந்துகட்டி இதுதான் காதல் என்று சொல்லிக்கொள்பவர்களும் உண்டு.
இதில் ஒருவர் எதை காதல் என்கிறாரே அது மற்றவர்க்கு காதலற்றதாக இருக்கும் - ஒருவரின் கருத்து இன்னொருவரின் கருத்துக்கு முரண்பாடாகவே இருக்கும். காதலைப் பற்றி இவ்வளவு விதமான கருத்துக்கள், வரையைகள் இருக்கும்போது இதில் இதுதான் காதல் என்று ஒன்றை சொல்வது சரியாக இருக்குமா? இதுதான் உண்மையான காதலாக இருக்கும்?
ஓஷோ சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. அவர் காதலை பற்றி நிறைய பேசியுள்ளார் ஆனால் அவர்கூட ஒருமுறை இப்படி சொன்னார் 'காதலை பற்றி ஆயிரக்கணக்கான வரையறைகள் முயன்று பார்க்கப்பட்டன, ஆனால் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன. காதல் வரையறுக்க முடியாததாகவே உள்ளது' என்று. 'காதல் என்பது வரையறுக்கமுடியாதது, அது மர்மமானது, அறிந்துகொள்ளமுடியாதது' என்று சொன்னார். இது ஒத்துக்கொள்ளக் கூடியதாகத்தான் தோன்றுகிறது.
சரி உங்களுடைய கேள்விக்கு வருவோம், நீண்டகாலம் பழகியதால் உண்டாகும் புரிந்துணர்வு, நட்புணர்வு, நம்பிக்கை ஆகியவைதான் காதல் என்று நினைக்கிறீர்கள் அல்லவா! இப்படிப்பட்ட ஒரு உறவு காதலால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது, ஒருவேளை இப்படிப்பட்ட உறவில் காதல் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் ஆனால் இதுதான் காதல் என்று சொல்வதை நிச்சயம் ஏற்கமுடியாது. இதையும் காதலையும் ஒன்றுபடுத்தி குழப்பிக்கொள்ளக்கூடாது என்று நினைக்கிறேன்.
புரிந்துணர்வு, நட்புணர்வு, நம்பிக்கை என்பதெல்லாம் காதலாக அல்லது காதலர்களுக்கே உரித்தான பண்பாக மட்டும் சுருக்கி பார்க்கப்பட முடியாதது. இவைகள் சமூக உறவு சார்ந்த விஷயங்கள். அணைத்து வகையான உறவிலும் இதன் பங்கு இருக்கும்; இருக்கவும் வேண்டும். இவைகள் காதலர்களுக்குள்தான் இருக்கும் அல்லது இருக்கவேண்டும் காதலரலாத மற்றவருடன் இது இருக்காது என்று கருதுவது அறியாமையே. எனவே இதையும் காதலையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.
பிறகு எதைத்தான் காதல் என்கிறீர்கள்....'கண்டதும் காதல்' என்பதையா?
நாம் பல பேரை பார்த்து பேசி பழகி இருந்தாலும் ஒரு சிலரை பார்க்கும்போது மட்டும் நம்மை அறியாமலேயே நமக்குள் எதோ ஒருவித உணர்வு தோன்றும் - அந்த உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாது - அது ஏன் என்று சிந்தித்ததுண்டா! அது சரி உங்களுக்குத்தான் அதுபோல் ஏதும் ஏற்பட்டதில்லை என்று சொன்னீர்களே... ஒருவேளை உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கலாம்! என்னவென்று பரிசோதித்துக்கொள்வது நல்லது.
நீங்கள் சொல்லவருவது உடலியல் ரீதியான ஈர்ப்பு அதாவது காமம் சார்ந்தது.. இது எப்படி காதலாகும்?
காமம் சார்ந்ததா? ஒருவர்மீது ஏற்படும் அவ்வுணர்வுக்கும் காம உணர்வுக்கும் வேறுபாடு உள்ளது. இரண்டும் ஒன்றல்ல. இப்படியான கருத்து ஏன் உருவாகியிருக்கிறதெனன்றால்; இயற்கையை பொறுத்தவரை இதுபோன்ற ஈர்ப்பு என்பது இனப்பெருக்கத்திற்காகத்தான் என்ற கருத்து உள்ளதால் இதை வெறும் காமம் மட்டுமே என்று குறைத்து மதிப்பிடும் போக்கு ஏற்பட்டுள்ளதால் நீங்களும் அவ்வாறே நினைத்திருக்கலாம்.
அதற்காக காதலில் காமம் இருக்காது என்றும் சொல்லவில்லை. காதலுணர்வோடு கூடிய காமம் என்பது வேறு. அது காதலால் காதலுணர்வோடு ஏற்படும் ஒருவித உன்னதமான ஒன்று. அதில் தொடுதல் அணைத்தல் முத்தமிடுதல் என அணைத்து மென்மையானதாக ஆத்மார்தமானதாக அன்பில் வழிந்தோடுவதாக இருக்கும்.
இப்படியான காதலுடன்கூடிய காமம் (Lovemaking) என்பது எப்போது சாத்தியம் என்றால் இருவருக்குளேயும் ஒருவர்மீது இன்னொருவருக்கும் காதல் உணர்வு ஏற்படும்போதுதான் சாத்தியம்.
ஆனால் சாதாரண காமத்திலோ அப்படியிருக்குமா என்பதே சந்தேகம்தான். உள்ளார்ந்த ஈர்ப்பு இல்லாத ஒருவரின் உடல் பாகங்களை பார்கும்போதுகூட காம உணர்வு தோன்றும். அப்படி இணையும் இருவரின் காமத்தில் அப்படிப்பட்ட காதல் உணர்வு இருக்காது. இயந்திரத்தனமாக காமத்தை தணிக்கும் செயலாகத்தான் அது இருக்கும்.
எனவே ஒருவரை கண்டதும் தோன்றும் காதலை வெறும் காமம் என்று குறைத்து மதிப்பிட கூடாது.
ஆனால் பெரும்பாலும் ஒருவருக்கு இன்னொருவரை பார்த்ததும் தோன்றும் அந்த உணர்வு அந்த இன்னொருவருக்கு தோன்றுவதில்லையே!
உண்மைதான், பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை. ஒருதலை காதல் என்று சொல்வதெல்லாம் அதன் விளைவுதான். ஒருவரை பார்த்ததும் ஏற்படும் அந்த உணர்வு நம்மை பார்த்த அந்த ஒருவருக்கும் ஏற்படும் என்று சொல்லமுடியாது அவருக்கு வேறொருவரை பார்க்கும்போது அப்படிப்பட்ட உணர்வு தோன்றலாம். மேலும், இது ஒருமுறைதான் - ஒருவர்மீதுதான் தோன்றும் என்றெல்லாம் இல்லை.
இதில் என்ன சிறப்பென்றால், இந்த உணர்வு யாரை கண்டு ஏற்படுகிறதோ அவர் யார், என்ன செய்கிறார், அவருடைய செல்வாக்கு என்ன, அவர் என்ன மொழி, மதம், இனம், சாதி, வயது, நிறம் & நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் கணக்குப்போட்டு பார்த்து வருவதில்லை. அதனால்தான் என்னவோ 'காதலுக்கு கண் இல்லை' என்கிறார்கள் போலும். ஆனாலும் இவைகளுக்கெல்லாம் கண்ணும் ஒரு காரணம்தான். கண்ணால் பார்த்ததால்தானே நம்முள் பட்டாம்பூச்சி பறந்தது!
மேலும், இது கற்பனையான உணர்வு என்று ஒதுக்கித்தள்ள முடியாது. உயிரியல் ரீதியாக இது இயற்கையாக ஏற்படும் ஒரு உணர்வு. உண்மையான உணர்வு. முன்பின் தெரியாதவரை பார்க்கும்போது தோன்றும் இந்த உணர்வு அந்த இன்னொருவருக்கும் அதே கணத்தில் தோன்றினால் பிறகு அவர்கள் பேசி பழகி இணைந்திடக்கூடும்.
இதில் இன்னொரு பிரச்னையும் உள்ளது. ஒரே நேரத்தில் இருவருக்கும் அவ்வுணர்வு ஏற்பட்டாலும் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது நிச்சயமற்றது. ஏனென்றால் இருவரும் வெல்வேறு சமூக சூழலில் பிறந்திருக்கலாம் இருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் சிந்தனைகள் கொண்டிருக்கலாம். அல்லது அதில் யாருக்காவது அன்புணர்வு, புரிந்துணர்வு, நட்புணர்வு போன்றவை இல்லாமல் கூட இருக்கலாம். இதுபோன்ற ஏராளமான காரணங்களால் ஒருவர்மீது ஒருவருக்கு முதல் சந்திப்பிலேயே ஈர்ப்பிருந்தும் ஒன்றாக இருக்கமுடியாமல் போகலாம். இதில் சரி தவறு என்பதற்கு இடமில்லை.
ஆனால் அவ்வுணர்வுடைய இருவருக்குமே நல்ல அன்புணர்வு, அறிவுத்திறன், புரிந்துணர்வு இருக்கும்பட்சத்தில் அவர்கள் நிச்சயம் நல்ல காதலருக்கான எடுத்துக்காட்டாக அமையக்கூடும். அப்படிப்பட்டவர்களால்தான் நல்ல ஆரோக்கியமான காதலுடன்கூடிய உறவை; சூழலை உருவாக்கமுடியும். அது அபூர்வமாகவே நிகழக்கூடிய ஒன்று.
நாமோ என்ன செய்துகொண்டிருக்கிறோம். இருவருக்குமே இயற்கையான அந்த ஈர்ப்பு ஏற்பட்டபோதும் - அடுத்தகனமே நாம் வளர்ந்த சமூக சூழல், நமக்கிருக்கும் அறிவு, சிந்திக்கும் திறன் கொண்டு ஒருவர் மற்றொருவரை எடைபோட்டு இவர் நமக்கு சரிபட்டுவரமாட்டார் என்று முன்முடிவு செய்துவிடுகிறோம். அல்லது இது காதலல்ல என்று நமக்கு நாமே தேற்றிக்கொள்கிறோம்.
இப்படி எந்த ஈர்ப்பும் இல்லாமல் அல்லது ஒருவருக்கு மட்டுமே அவ்வுணர்வு ஏற்பட்டு இருவரும் இணைந்து வாழ முற்படும்போது அது உப்பு சப்பில்லாத உறவாகத்தான் இருக்கும். காதல் ஈர்ப்பின்றி இணையும் இருவரின் உறவு வெறும் ஒப்பந்த குறைவாகத்தான் பார்க்கப்படும். என்னதான் நட்புணர்வு, புரிந்துணர்வு இருந்தாலும் அந்த அந்நியோன்யம் இருக்காது. பெரும்பாலானவர்களின் திருமணம் அப்படிதான் இருந்துவருகிறது.
அதாவது கண்டதும் காதல் கொண்ட இருவரின் காதல்தான் முழுமையான காதலாக கடைசிவரை நிலைக்கும் காதலாக இருக்கும் என்கிறீர் சரிதானே!
அப்படியல்ல, கண்டதும் காதல் (அதாவது மூளையால் சிந்திப்பதற்கு முன்னே பரஸ்பர ஈர்ப்பு ஏற்பட்ட இருவர்) கொண்ட இருவருக்கும் கூடுதலாக அன்புணர்வும், புரிந்துணர்வும், அறிவும் கொண்டிருக்கும்போது அவர்களின் உறவு உன்னதமானதாக மாற வாய்ப்புள்ளது என்றேன். அவர்களின் ஒவ்வொரு செயலிலும் முடிவிலும் அன்பும் தெளிவும் ஞானமும் உடையதாய் இருக்கும். அங்கே வெறுப்பு, விரோதம், ஏமாற்றுதல், போலித்தனம், பாதுகாப்பின்மை, அச்சம் போன்றவற்றிற்கு இடமிருக்காது.
அதேசமயம் கடைசிவரை இணைபிரியாமல் இருப்பதுதான் முழுமையான காதல், உண்மையான காதல் என்றோ நான் சொல்லமாட்டேன்.
ஏன் அப்படி சொல்கிறீர்கள். பிரிவு என்பதே காதல் இல்லாமல் போகும்போது ஏற்படுவதுதானே. அப்படி பிரியும்போது அது காதலற்ற தன்மையைத்தானே குறிக்கும்?
நான் முன்பு கூறியதைப்போன்ற பண்புகளையுடைய இருவரின் முடிவுகள் எப்போதும் தெளிவானதாகத்தான் இருக்கும். அது இருவரும் பிரிந்து வாழவேண்டும் என்ற முடிவெடுத்தாலும் அதில் வெறுப்பு விரோதம் ஏமாற்று போன்றவை இருக்காது. பிரிவு தேவைப்படுமென்றால் பிரிவது தவறில்லை.
நாம் வகுத்துவைத்திருக்கும் சிலவகையான சமூக நெறிமுறைகளை இதனுடன்சேர்த்தால் குழப்பம்தான் மிஞ்சும். இரு மனம் இணைவது கடவுளின் செயல், யார் யாருடன் இணையவேண்டும் என்பது விதி, இணைந்த ஜோடிகள் பிரிய கூடாது, ஒருவனுக்கு ஒருத்தி, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்களையெல்லாம் விட்டொழிக்கவேண்டும்.
இதிலிருந்து நான் புரிந்துகொள்வது என்னவென்றால், புரிந்துணர்வு, நட்புணர்வு, நம்பிக்கை ஆகியவை மட்டும் காதலில்லை. ஒருவர்மேல் ஏற்படும் இயற்கையான அந்த உணர்வு தான் காதல். அதனுடன் புரிந்துணர்வு, அன்புணர்வு, அறிவு ஆகியவை கொண்டிருக்கும் இருவரால் அது மேலும் உன்னதமானதாக அல்லது வலுவான காதலாக மாறுகிறது அதேசமயம் காதல் என்பது ஒருமுறை மட்டும் - ஒருவர்மீது மட்டும் ஏற்படுவதில்லை என்கிறீர்கள். சரியா?
ஆமாம் சரிதான்.
தொடரும்......
- தீயவன்
No comments:
Post a Comment