Breaking

Friday, February 13, 2026

சாத்தானிய வழிபாடு எனும் சதிக்கோட்பாடு

    



   Epstein விவகாரம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த தீவில் சிறுமிகளை பாலியலில் ஈடுபடுத்தியது, துன்புறுத்தியது பற்றி தகவல்கள் வந்துள்ளது. அங்கு சிறுமிகள் கொல்லப்பட்டிருக்கலாம், நரமாமிசம் சாப்பிட்டிருக்கலாம் போன்ற யூகங்களுக்கு வழிவகுக்கும் வகையில் மர்மம் நிறைந்ததாக Epstein Files உள்ளது. மேலும் Baal எனும் பெயரில் Epstein இன் Username கொண்ட குறிப்பு அதில் இடம்பெற்றுள்ளதால் அவன் சாத்தானிய வழிபாட்டாளனாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் பேசத்தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால் பண்டைய கானானியர்களின் தெய்வங்களில் ஒன்றான Ba'al என்பது பொய் தெய்வம் அல்லது சாத்தான் என்று யூத மத நூலிலும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதால் கானானியர்களின் தெய்வங்கள் மீது எதிர்ப்பு மனநிலை இன்னும் அதிகமாக வலுபெற்றுவருகிறது. ஈரானில் இஸ்லாமியர்கள் சேர்ந்து Baal இன் போலி உருவச்சிலையை எரித்து கொண்டானினார்கள். இதற்கு பலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் 'பார்த்தீர்களா எங்களது கடவுள் தான் உண்மையானவர், எங்களின் வேதத்தில் சரியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது, கடைசி காலம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் பதிவிட்டுவருகிறார்கள்.


[சிறுமிகள் பாலியல்வன்புணர்வு, சித்திரவதை மற்றும் கொலை செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் அது தவறானதே அதில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேபோல் மூடநம்பிக்கையின் பேரில் சடங்குகளில் பலியிடப்பட்டாலும் தவறுதான். அதை நான் ஆதரிக்கவில்லை. அல்லது இனி நாம் பார்க்கப்போவதில் Epstein போன்றவர்களை ஆதரித்து கூறப்போவதில்லை. நான் சுட்டிக்காட்டவிரும்புவது என்னவென்றால் நம்பிக்கையாளர்கள் எதையெல்லாம் சாத்தானிய வழிபாடு என்கிறீர்களா அதற்க்கு பின் மறைமுக அரசியல் மற்றும் மூடநம்பிக்கை நிறைந்துள்ளது என்பதே.]


பண்டைய கானானியர்கள் குழந்தைகளையெல்லாம் பலியிடுபவர்களாக இருந்திருக்கிறார்கள் அவர்களின் தெய்வம் சாத்தான் என்று ஆபிரகாமிய மத நூல்களில் உள்ளதால் அவர்களை சாத்தானியர்கள் என்று கூறுவது மேம்போக்கானது. அப்படிப்பார்த்தால் கானானியர்கள் மட்டுமல்ல ஆபிரகாமிய கடவுளை ஏற்காத அணைத்து உலக மதத்தினரும் சாத்தானிய வழிபாட்டாளர்கள்தான். அப்படிதான் அவர்களது வேதம் சொல்கிறது. 


பண்டைய காலத்தில் உலகிலுள்ள பல்வேறு மக்களிடம் இதுபோன்ற பலியிடும் மூட பழக்கங்கள் இருந்திருக்கிறது. எகிப்து, மெசபடோமியா, சீனா, ஐரோப்பிய பழங்குடிகள் தென்னமெரிக்காவில் மாயன், அஸ்டெக், இன்கா போன்ற நாகரீகத்தவர்கள். ஏன் இந்தியாவில்கூட போருக்கு செல்லும் முன் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மனிதபலியிடும் சடங்கு நடந்துள்ளது. அதேபோல் வடஇந்தியாவில் சிவனை வழிபடும் கபாலிகர்கள் என்பவர்கள் நரமாமிசம் உண்பது, தங்களையோ அல்லது மற்றவரையோ பலிகொடுத்து போன்ற மூடநபிக்கையை பின்பற்றியிருக்கிறார்கள். 


அதேபோலத்தான் பண்டைய கானானியர்கள் பஞ்சம், போர், அழிவு போன்ற அசாதாரணமான நெருக்கடி காலங்களில் மட்டுமே குழந்தைகளை படியிடும் மூடப்பழக்கத்தை கொண்டிருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இன்றும் அதுபோல நம்பிக்கொண்டு பலியிடும் சடங்குகள் செய்துகொண்டிருந்தாள் நிச்சயம் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும். அதை மூடநம்பிக்கையாகத்தான் கருதவேண்டும் ஆனால் அதைவிட்டுவிட்டு கானானியர்களின் கடவுள்களை உண்மையான சாத்தான் என்றும் அம்மக்களை சாத்தானியர்கள் என்றும் வெறுப்பு பிரச்சாரம் செய்வததற்கு முன் ஆபிரகாமிய மாதங்கள் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) ஏன் அவ்வாறு முத்திரை குத்துகிறது என்று  புரிந்துகொண்டால்தான் இதன் பின்னுள்ள அரசியல் அல்லது மூடநம்பிக்கை புரியவரும்.


இவர்களது வேதத்தின்படி கானானியர் என்பவர்கள் நோவாவின் 3 ஆவது மகனுக்கு பிறந்த நான்கு மகன்களில் ஒருவனின் பெயர்தான் கானான். அந்த 3 ஆவது மகன் நோவா நிர்வாணமாக போதையில் இருப்பதை பார்த்து இச்சித்ததால் அவனுடைய மகனான கானான் என்பவனுக்கு பிறக்கப்போகும் சந்ததிகள் எல்லோரும் நோவாவின் மற்ற இரண்டு மகன்களுக்கு அவர்களின் சந்ததியினருக்கு எக்காலத்துக்கும் அடிமையிலும் அடிமையாக கிடைக்கவேண்டும் என்று சாபமிட்டான் நோவா. 


அதனால்தான் சிலபல தலைமுறைகள் கழித்து பிறந்த ஆபிரகாம், கானானியர்கள் (கானான் என்பவனுக்கு பிறந்த சந்ததிகள்) வசிக்கும் தேசத்தை நோவாவின் 2 ஆவது மகனின் வம்சத்தில் பிறந்த தனக்கும் தனக்கு பிறக்கப்போகும் சந்ததிகளுக்கும் கொடுப்பதாக கடவுள் வாக்களித்தார் என்று உள்ளது. ஆபிரகாமின் சந்ததியில் பிறந்த இஸ்ரவேல் என்பவனுக்கு பிறந்த 12 மகன்களின் சந்ததியினர் அந்த கானான் தேசத்தை படையெடுத்து குழந்தைகள், பெண்கள், கர்பிணிகள் என்று எவரையும் விட்டுவைக்காமல் வெட்டி வீழ்த்தி பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினார்கள் - கடவுள்தான் குழந்தைகளையும் வெட்டிக் கொல்லும்படி கட்டளையிட்டார் என்று உள்ளது. இந்த கதையின் படி கானானியர்கள் அனைவரும் இயற்கையாகவே பாவிகள் (நோவாவின் மகன் செய்த பாவத்தை சுமப்பவர்கள்) அவர்கள் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் சாத்தான்கள். கானானியர்களின் தெய்வங்கள் மட்டுமல்ல அவர்களின் கருத்துப்படி யூதர்கனின் தெய்வத்தை தவிர மற்ற இனத்தவர்கள் வணங்கும் தெய்வங்கள் எல்லாமே பொய் அல்லது சாத்தான் என்பதுதான் அவர்களது நம்பிக்கை. இன்று இஸ்ரேல் என்ற தேசம் உருவாகி அதைச்சுற்றி நடந்துகொண்டிருக்கும் போர்களுக்கும் இக்கதையும் ஒருவகையில் காரணமாக இருக்கிறது. 


இப்படி, வேறொரு மக்கள் வசித்துவந்த தேசத்தை கைப்பற்றுவதற்காக அது கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசம் என்று  அவர்களிடமிருந்து சில மூடநம்பிக்கையை காரணம் காட்டி அவர்களை பாவிகள், சாத்தான் வழிபாட்டாளர்கள் என்று சொல்லி குழந்தைகள், பெண்கள் என்று ஒருவரையும் விட்டுவைக்காமல் கடவுளின் பெயரால் கொன்று அதை தன்னுடைய தேசமாக மாற்றிக்கொண்டது பற்றி எழுதப்பட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் தன் சுயநலனுக்காக பேசிக்கொண்டிருப்பதில் நாமும் அவர்களுடன் சேர்ந்து 'சாத்தானுக்கு எதிரான குரல்' அல்லது 'சாத்தானிய வழிபாட்டாளர்களுக்கு எதிரான குரல்' என்ற பெயரில் கானானியர்களின் கடவுள்களை சாத்தான்கள் என்று பிரச்சாரம் செய்வது முட்டாள்தனமானது.


மற்றவர்களின் தெய்வத்தை சாத்தான் என்று சொல்பவனும் முட்டாள் தான், சாத்தான் இருக்கிறான் என்று நம்பிக்கொண்டு பலிச்சடங்கு செய்துகொண்டிருப்பவனும் முட்டாள்தான். 


எதோ ஒரு காலத்தில் போருக்கு செல்லும்முன் கொற்றவை'க்கு வேண்டி மனித பலி சடங்கு செய்த தமிழர்களையும் அவர்கள் வணங்கிய கொற்றவையை பார்த்து சாத்தான் என்றும் சாத்தானிய வழிபாட்டாளர்கள் என்றும் முத்திரைகுத்தினாலோ அல்லது நம்முடைய தேசத்தை கைப்பற்ற இதுபோல் ஒரு கதையை உருவாக்கி பரப்பினாலோ எப்படி இருக்கும்! அதேபோல், பண்டைய தென்னமரிக்கர்களை சாத்தானிய வழிபாட்டாளர்கள் என்று சொல்வது சரியாக இருக்குமா! மூடநம்பிக்கையை மூடநம்பிக்கையாகத்தான் பார்க்கவேண்டும்.


தமிழர்களை அரக்கர்கள், இராட்சதர்கள் என்று ஆரியர்கள் கதைகளை உருவாக்கிவைத்திருக்கிறார்களே அந்த பாடமே போதாதா இதுபோன்ற கதையின் பின்னுள்ள அரசியலை புரிந்துகொள்ள!


பிற மதத்தை பொய்மதம் என்று சொல்லும் யூத மதத்தில் மனித பலி என்ற ஒன்று இல்லாததால் மட்டும் அது பகுத்தறிவான உண்மை மதமா என்ன! பிறப்பு முதல் இறப்பு வரை தொட்டதற்க்கெல்லாம் விலங்குகளையும் பறவைகளையும் பலியிடவேண்டும் என்று அவர்களின் கடவுள் கட்டளையிட்டிருப்பதாக வேதம் சொல்கிறது. அவர்களின் ஆலயத்தில் தினமும் பலிபீடத்தில் பலியிடவேண்டும், பலிபீட நெருப்பு அணைந்துவிட கூடாது என்றெல்லாம் உள்ளது. பலி சடங்கு பற்றி அவர்களின் வேதத்தில் சொல்லப்பட்டது படி பார்த்தல் வேற்றுகிரகத்திலிருந்துதான் விலங்குகளை இறக்குமதி செய்ய வேண்டும் போல. பலியிடுதல் மட்டுமல்ல இன்னும்பல மூடநம்பிக்கைகளை கொண்டுள்ள மதம் அது. 



- தீயவன் 



(சுருக்கமாக:

நோவா திராட்சை ரசம் குடித்துவிட்டு நிர்வாணமாகத் தூங்குகிறார். அவருடைய மூன்றாவது மகன் ஹாம் (Ham) இதைப் பார்த்துவிட்டு தன் சகோதரர்களிடம் சொல்கிறான். போதை தெளிந்து எழுந்த நோவா, தவறு செய்த ஹாம்மைச் சபிக்காமல், ஹாம்மின் மகனான கானானைச் சபிக்கிறார். "கானான் சபிக்கப்பட்டவன் அவன் தன் சகோதரருக்கு அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான்" என்று கூறுகிறார்.


இந்தக் கதை பின்னாட்களில் கானான் தேசத்தை இஸ்ரவேலர்கள் கைப்பற்றுவதற்கு ஒரு மத ரீதியான நியாயமாகப் பயன்படுத்தப்பட்டது. "அவர்கள் பிறப்பாலேயே சபிக்கப்பட்டவர்கள், எனவே அவர்களை அடிமைப்படுத்துவது கடவுளின் கட்டளை" என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.

கானானியர்கள் குழந்தையை பலியிடும் பழக்கம் இருந்தது.. இதே போன்ற பலியிடும் பழக்கங்கள் அக்காலத்து அனைத்துப் பழங்குடிகளிடமும் ஏதோ ஒரு வடிவில் இருந்தன.


இஸ்ரவேலர்களின் 'யாவே' கடவுளைத் தவிர மற்ற அனைத்துக் கடவுள்களையும் "பொய் தெய்வங்கள்" என்றும் "பேய்கள்" என்றும் யூத வேதம் அழைக்கிறது. இதையே பிற்கால கிறித்தவமும் இஸ்லாமும் பின்பற்றியதால், கானானியர்கள் "சாத்தானியவாதிகள்" என்று வரலாற்றில் முத்திரை குத்தப்பட்டனர்.


கானான் தேசம் என்பது பாலும் தேனும் ஓடும் செழிப்பான பூமி. அதை ஆக்கிரமிக்க ஆபிரகாமிய மதம் முன்வைத்த வாதம் - கடவுள் இந்த நிலத்தை ஆபிரகாமுக்குக் கொடுத்துவிட்டார், கானானியர்கள் பாவம் நிறைந்தவர்கள், அவர்கள் அருவருப்பான சடங்குகளைச் செய்கிறார்கள், எனவே அவர்களை அழிப்பது பூமியைச் சுத்தப்படுத்தும் செயல். என்று சொல்லி கானான் மீது படையெடுத்து, அங்குள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கொன்று அத்தேசத்தை கைப்பற்றியதாக அவர்களது வேதத்தில் உள்ளது.)



No comments:

Post a Comment