Breaking

Saturday, December 20, 2025

இந்திய கிராமங்கள் ஊரும் - சேரியுமாக ஆன வரலாறு

(Janvary2024 இல் மரபாளர் எனும் டிஜிட்டல் இதழலில் வெளியிடப்பட்ட கட்டுரை - இந்திய கிராமங்கள் ஊரும் - சேரியுமாக ஆன வரலாறு Page no 8 to 10)



     இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள் ஊரும் சேரியுமாக இருக்கிறது. அதாவது சிலர் கிராமத்திற்கு உள்ளேயும், சிலர் கிராமத்திற்கு வெளியேயும் வசித்துவருகிறார்கள். இது ஏன், எப்படி, எப்போது நடந்தேறியது? ஆரம்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து பிறகு சிலர்மீது தீண்டாமை விதிக்கப்பட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்களா? அல்லது ஆரம்பத்திலிருந்தே - தீண்டாமை தோற்றம் பெறுவதற்கு முன்பே - அவர்கள் தனித் தனியாகத்தான் வசித்துவருகிறார்களா? இத்தகைய கேள்விகளுக்கு அல்லது வரலாற்று போக்கினை பற்றி மானுடவியல், வரலாறு ஆகியபாடங்களை பயின்று தேர்ச்சிபெற்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின்  ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது என்பது பற்றி மிகச்சுருக்கமாக பார்ப்போம்.


ஊரும் - சேரியும்

ஆரம்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருந்து பிறகு தீண்டாமை விதித்து சிலரை கிராமத்திற்கு வெளியே தள்ளப்பட்டதாக நினைப்போமானால் அது தவறு. தொடக்கத்திலிருந்தே அவர்கள் தனித்தனியாகத்தான் வசித்துவருகிறார்கள். இது எப்படி என்றால் உலகெங்கும் பூர்வீக சமுதாயம் (Primitive Society) நவீன சமுதாயமாக (Modern Society) மாறியபோது இம்மாற்றம் நிகழ்ந்தது. 


பூர்வீக சமுதாயமும் நவீன சமுதாயமும் இரண்டு அம்சங்களில் வேறுபடுகிறது. ஒன்று, பூர்வீக சமுதாயமானது இரத்த உறவு கொண்ட குலமரபு சமூகங்களை கொண்டது. நவீன சமுதாயமானது பிரதேச பற்றுதலுடையது. இரண்டாவது, பூர்வீக சமுதாயம் நாடோடி சமூகங்களை கொண்டது. நவீன சமுதாயம் குடியமர்ந்த சமூகங்களை கொண்டது. 




பூர்வீக சமுதாயம் நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியமர்ந்த நிலையான வாழ்க்கைக்கு மாறியபோது இதர நானோடி குழுக்களால் இவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தது. எல்லா குலங்களுமே ஒரே சமயத்தில் குடியமர்ந்த வாழ்க்கைக்கு மாறவில்லை சில குலங்கள் தொடர்ந்து நாடோடிவாழ்கையையே பின்பற்றின. ஒரு நாடோடி குழு இதர நாடோடிகளோடு போராடுவதைவிட குடியமர்ந்த குழுக்களை தாக்கி அவர்களின் உணவு தானியங்கள், கால்நடைகளை அபகரிப்பது என்பது எளிமையாகவும், அனுகூலமாகவும் இருந்தது. நாடோடி குழுக்களின் அச்சுறுத்தலை சமாளிக்கமுடியாத இத்தகைய வரலாறுகள் நாம் அறிந்தவையே.


ஆரம்பகாலத்தில் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த எல்லா குலமரபுக் குழுவினரும் தங்களுக்குள் ஓயாது போரிட்டுக்கொள்வது வழக்கம். கால்நடைகளை திருடியது, பெண்களை கடத்திச்செல்ன்றது போன்ற காரணங்களுக்காக. இப்படி நடக்கும் குலப்போர்களில் எந்த குலமும் பூண்டோடு அழிந்துபோய்விடுவதில்லை. தோற்கடிக்கப்பட்டவர்கள் துண்டு துண்டுகளாக சிதறுண்டு போய்விடுவார்கள். இப்படி சிதறடிக்கப்பட்டவர்கள் மற்ற குழுவுடன் சேர்ந்து அங்கமாக முடியாது. தனிநபர்களாகவே வாழவேண்டியிருந்தது. ஏனென்றால் பூர்வீக சமுதாயம் ரத்த உறவுடைய குலமரபு அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் விளைவாக ஆரம்ப காலத்தில் சிதறுண்டவர்கள் (Broken Men) அடங்கிய ஒரு பிரிவு எல்லா திசைகளிலும் சுற்றித்திரிந்தனர். (இவர்களை பொதுவாக நாடோடிகள் என்றோ அல்லது குறிப்பிட்ட குலமரபினர் என்றோ சொல்லிவிடமுடியாது, குலசண்டைகளிலோ அல்லது நாடோடிகளின் தாக்குதல்களாலோ வீழ்த்தப்பட்ட குடிகளுக்குள் தப்பித்து உயிர்பிழைத்தவர்கள் - இவர்கள் வேறெந்த குழுக்களுக்குள்ளும் சேர்க்கப்படமாட்டார்கள், பல குலங்களுக்குள் நடக்கும் சண்டைகளால் இப்படிப்பட்ட பலர் உருவாகியிருந்தார்கள்). 


சிதறுண்ட பிரிவினருக்கு உணவு, இருப்பிடம் போன்ற தேவைகள் மற்றும் மற்றவர்களின் தாக்குதலுக்குள்ளாகும் அபாயமும் இருந்தது. அவர்களால் தனித்துவாழ்வது கடினம். இதேபோல் குடியமர்ந்த சமுதாயத்திற்கும் நாடோடி சமுதாயத்தால் திடீர் தாக்குதலுக்குள்ளாகும் பிரச்னை இருந்தது.

 

இப்படி பூர்வீக சமுதாயம் நவீன சமுதாயமாக மாறிய நிகழ்வில் குடியமர்ந்த சமுதாயமும் சிதறுண்ட பிரிவினரும் இவர்களுக்குண்டான பிரச்சனைகளுக்கு முடிவுகட்ட இரு குழுக்களும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. குடியமர்ந்த குலத்திற்கு காவல் பணிபுரிய சிதறுண்ட பிரிவினர் ஒப்புக்கொண்டனர். இதற்கு பிரதியாக இவர்களுக்கு உணவும், புகலிடமும் அளிக்க குடியமர்ந்த குலத்தினர் இணக்கம் தெரிவித்தனர். இந்த ஒப்பந்தத்தின் பேரில் குடியமர்ந்த குலத்தினரின் கிராமத்தின் எல்லையில் சிதறுண்டவர்கள் வசிக்கநேர்ந்தது. இப்படித்தான் இந்திய கிராமங்கள் ஊரும் - சேரியுமாக ஆனது. 


இது இந்தியாவில் மட்டுமே நடந்த ஒன்றல்ல. அயர்லாந்து, வேல்ஸ் போன்ற இடங்களிலும் குடியமர்ந்த குழுக்களின் கிராமத்துக்கு வெளியே சிதறுண்டவர்கள் வசித்திருக்கிறார்கள். இந்தியாவில் என்ன காரணத்திற்காக வெளியே வசித்தார்களோ அதே காரணத்திற்காக. பிறகு தனிக்குடியிருப்புகள் மறைந்து இரண்டற கலந்துவிட்டார்கள். இது அணைத்து சமுதாயங்களிலும் காணப்பட்ட ஒரு பொது அம்சம். இதிலிருந்து என்னத் தெரிகிறதென்றால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற காரணத்திற்காக கிராமத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை. அவர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் இருந்த ஒரே வேறுபாடு அவர்கள் வெவ்வேறு குழுவை சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதே.  


இன்னும் நீடித்திருப்பதற்கான காரணம்?

இந்தியாவில் மட்டும் இந்தவேறுபாடு இன்னும் மறையாமல் போனதற்கான காரணம் என்னவென்றால் பிற்காலத்தில் ஏற்பட்ட தீண்டாமை எனும் கருத்துதான். இந்த தீண்டாமையின் தோற்றுவாயாக இருப்பது இன வேறுபாடோ, தொழில் வேறுபாடோ அல்ல. இன அடிப்படையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென்றால் விஞ்ஞானப்படி அது முரண்பாடானது. அதேபோல் தொழில் அடிப்படையில் பார்த்தல் பிராமணர்களும், சத்ரியர்களும், வைஷியர்களும் அசுத்தமான பணிகளிலேயே அசுத்தமான தோட்டி பணியை செய்துவந்திருக்கிறார்கள் எனும்போது அருவருப்பான பணிகள் செய்வது தீண்டாமைக்கு காரணமல்ல. இந்து படைப்பு சிந்தாந்தமான வர்ணமுறைப்படி பார்த்தால்கூட சூத்திரர்கள்தான் கடைசியாக  இருக்கிறார்கள். ஐந்தாவது வர்ணம் என்ற ஒன்று இருக்கவில்லை. கிராமத்திற்கு வெளியே வசிப்பவர்கள் அவ்-வர்ணமுறைக்கு அப்பாற்பட்டவர்கள் - அவர்ணர்கள். மேலும் மனுவின் காலத்தில் தீண்டாமை இல்லை ஆனால் தூய்மையின்மை இருந்தது.


பிறகு வேறென்ன  அடிப்படை காரணமென்றால் அது மாட்டிறைச்சி உண்பதுதான். ஆனால் இன்றிருப்பதுபோல அன்று கிராமத்திற்கு வெளியே வசிப்பவர்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்பவர்களாக இருக்கவில்லை. எல்லோருமே மாட்டிறைச்சி உண்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள். குறிப்பாக பிராமணர்கள் பசுக்களையும் விலங்குகளையும் யாகமென்ற பெயரில் வதைசெய்திருக்கிறார்கள். அதன் இறைச்சிகளை உண்டுமிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிராமணர்களின் வீட்டுக்கு விருந்தாளி யாராவது வந்தால் அவர்களை கௌரவிக்க பசுவை கொன்று விருந்தளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. பௌத்தர்களும் இறைச்சி உண்பவர்களாக இருந்தாலும் யாகத்தின் பெயரால் உயிர்வதை செய்வதை கடுமையாக எதிர்த்துவந்ததால் இயல்பாகவே இவர்களுக்கு பௌத்தபிக்குகளின்பால் பகைமை இருந்தது. 


பிறகு பௌத்தமன்னர்களின் வீழ்ச்சிக்கு பிறகு பிராமண மேலாதிக்கம் பெற்ற ஆட்சி தொடங்கியபோது கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் - இந்துமதத்தின் தீவிர ஆதரவாளர்களான குப்த மன்னர்கள் பசுவதையை பெருங்குற்றமாக; மாபெரும் பாவமாக பிரகடனம் செய்தனர். அதாவது பசுவை கொல்வது ஒரு பிராமணனை கொள்வதற்கு இணையான குற்றம் என்று கி.பி 465 ஐ சேர்ந்த செப்பு சாசனம் சொல்கிறது. இது விந்தையான ஒன்று - பசுக்களை யாகத்துக்காகவும் உணவுக்காகவும் அதிகளவில் கொல்பவர்கள் குடியமர்ந்த சமூகத்தினரே ஏனெனில் அவர்களிடம் கால்நடை செல்வங்கள் ஏராளமாக இருந்தது. சிதறுண்டவர்களுக்கு அப்படியல்ல. அவ்வப்போது அவர்களின் காவல்பணிக்காக இறந்த பசுக்களை ஊதியமாக பெற்றிருக்கிறார்கள். - பசுவதை செய்து இறைச்சியை விரும்பி உண்டுவந்தவர்கள் திடீரென்று மாறுவது மனுதர்மத்திற்கே எதிராக இருக்கிறது. ஏனென்றால் பசுவதையை மனு ஒரு குற்றமாக கருதவில்லை. அதன் இறைச்சியை உண்பதில் எந்த ஆட்சேபனையும் அவர் தெரிவிக்கவில்லை.


பிராமணர்கள் இறைச்சியை கைவிட்டுவிட்டு சைவத்திற்கு மாறினார்கள். பிராமணரல்லாத இந்துக்கள் மற்ற இறைச்சிவகைகளை உண்டாலும் மாட்டிறைச்சி உண்பதை மட்டும் நிறுத்தினர். ஆனால் சிதறுண்ட பிரிவினர் தொடர்ந்து மாட்டிறைச்சி உண்டுவந்தனர். இது தீண்டாமைக்கு வழிவகுத்துவிட்டது. மாட்டிறைச்சி உண்பது தனி நபரது சம்மந்தப்பட்டதாக - மதச்சார்பற்றதாக இருந்திருந்தால் இந்த அளவு வேறுபாட்டை உண்டுபண்ணியிருக்காது. மாறாக இது மதம் சம்மந்தப்பட்ட ஒன்றாக, புனிதத்தன்மையை மதிக்காமல் செய்யும் அவச்செயலாக கருதப்பட்டது. 



புனித பிராணியாக கருதப்பட்ட பசுவின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையானைகளை மீறியதன் விளைவாகவே தீண்டாமை தோன்றிற்று. மனு காலத்தில் மாட்டிறைச்சி உண்பது பாவமில்லை ஆனால் குப்த மன்னர்களின் காலத்தில் தடையாணை பிறப்பிக்கப்பட்டதால் கி.பி நான்காம் நூற்றாண்டில் தான் தீண்டாமை தோற்றம் பெற்றிருக்கக்கூடும். இதன் காரணமாகவே சமுதாயம் பிளவுபட்டு குடியமர்ந்த சமூகத்தினர் தீண்டத்தக்கவர்களாகவும், சிதறுண்ட மக்கள் தீண்டப்படாத சமூகத்தினராகவும் ஆனார்கள். இன்றளவும் இந்திய கிராமங்கள் ஊரும் - சேரியுமாகவே பிரிந்துகிடக்கிறது.





- தீயவன்


Reference:  

தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்? - அம்பேத்கர் (நூல் தொகுப்பு - தொகுதி: 14 )



No comments:

Post a Comment