Breaking

Friday, January 3, 2025

கயிறு நூல் பற்றிய விமர்சனத்திற்கு கரன் கார்க்கியின் காட்டமான பதில்

 


     விஷ்ணுபுரம் சரவணன் அவரகள் எழுதிய கயிறு எனும் சிறார் சிறுகதையின் விமர்சனத்தை (கயிறு - சிறார் சிறுகதை நூல் | விமர்சனம்) முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன். அக்கருத்துக்கு எழுத்தாளர் கரண் கார்க்கி அவர்கள் அளித்த காட்டமான பதிலைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம். 


 01/01/2025  அன்று கயிறு நூலை தன் மகனுக்கு பரிசளித்திருந்த கரண் கார்க்கி  அந்நூலைப்பற்றி மகனின் கருத்தை கேட்டு அதை மகனுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் அவரது மகனும் அந்த புத்தகம் "குழந்தைகள் படிக்கலாம், நல்ல புத்தகம் தான் என்றும் என்னைவிட அதிகம் படிப்பவன் போட்டிகளில் வெல்பவனை விட நான் எப்படி உயர்ந்தவன் என்று கையிலிருந்த கயிறை கழற்றி போட்டுவிடுவான்" என்று சொல்லியிருப்பார். இந்த பதிவை பார்த்ததும் இந்நூலைக்குறித்து எனக்கிருக்கும் விமர்சனத்தை பின்வருமாறு மிக சுருக்கமாக பதிவிட்டேன்.. 


தன்னைவிட அதிக மார்க் எடுப்பதால் போட்டிகளில் முதலிடம் பெறுவதாலும் அவன் கீழானவன் இல்லையென்று சொல்லும்போது குறைந்த மார்க் எடுத்தால்,போட்டிகளில் தோல்வியடைந்தால் கீழானவனா என்கிற கேள்வி எழுகிறது... இதை படிக்கும் மாணவர்கள் என்னவாக புரிந்துகொள்வார்கள் என்று சிந்தித்துப்பார்த்தால் இதை வேறுமாதிரியாக அனுகியிருக்கலாம் என்று தோன்றும்...

மேலும், கீழ் மேல் - உயந்த சாதி, தாழ்ந்த சாதி என்கிற வரையறையை ஆணித்தனமாக உடைக்கும்படியான கருத்து இதில் விடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி வெறும் நட்ப்பு, மதிப்பெண் என்பதோடு பூசி மொழுகி கடந்துவிடுகிறது என்று தோன்றுகிறது... (இது குறையாக சொல்லவில்லை... )


இந்த விமர்சனமானது என்னை அறிவாளியென்று காட்டிக்கொள்வதற்கோ, அவரது மகனின் விமர்சனத்தை குறை கூறுவதற்கு என்றோ பதிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நூலை படித்தபிறகு இன்னும் கூடுதலாக வாங்கி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொடுத்தேன்... எனவே இந்த நூலாசிரியரின்மீதோ நூலின்மீதோ எனக்கு ஏதோ தனிப்பட்ட முறையில் வெறுப்பிருக்கும் அதனால் தான் இப்படி விமர்சிக்கிறேன் என்று யாராவது நினைத்தால் அதற்கு வருந்துவதை தவிர வேறொன்றும் என்னால் செய்யமுடியாது. (இப்படி விளக்கங்கள் கொடுத்து நியாயப்படுத்திக்கொள்வதைக்கூட நான் விரும்புபவனல்ல - வேறென்ன செய்வது) ஒரு சிறந்த எழுத்தாளர் இந்தநூல்குறித்து பதிவிடும்போது அந்நூலை பற்றி ஒரு வாசகனாய் தான் புரிந்தவற்றை பற்றி அவரிடம் வெளிப்படுத்த விரும்புவான். அப்படியொரு ஆர்வத்தில்தான் அந்நூலை பற்றிய விமர்சனத்தை - அதுவும் கடைசி பத்தியை மட்டும் பதிவிட்டேன். ஆனால் என்னுடைய அந்த விமர்சனத்திற்கு அவரின் பதில் சற்று கட்டமாகவே இருந்தது. 


கரன் கார்க்கியின் காட்டமான பதில்


நானும் இதை குறையாக சொல்லவில்லை.


கருத்து சொல்ல வருகிறேன் என்று எல்லோருமே ஒரு உண்மையான உள்ளடக்கத்தை உடைத்தெரியவதாக நினைக்கிறேன்.. ஒரு புத்தகம் என்ன பேசுகிறது அந்த புத்தகம் குறித்து ஒருவர் என்ன பேசுகிறார் என்று எதையுமே ஆய்வு செய்யாத ஒரு மனநிலையில்...


கேள்வி இதுதான் எதை வைத்து உன்னை உயர்சாதி என்று சொல்லிக் கொள்கிறாய் ஒன்று நீ உயர்ந்த செயல் ஏதாவது செய்ய வேண்டும், அல்லது அந்த வயதுக்குரிய பேசுகிற கதாபாத்திரங்கள் படிக்கிறவர்கள் அவன் தன்னை உயர்சாதியாக கருதி கொள்கிறவனை நோக்கி எழுப்புகிற கேள்வி இது. உன்ன விட நான் நல்லா படிக்கிறேன், நல்ல புத்தியோடு இருக்கிறேன், அன்பா இருக்கிறேன் எந்த விதத்தில் என்னை விட நீ உயர்ந்துட்ட நீ உன்னை உயர்சாதி என்று சொல்றன்னு கேட்கிற கேள்வியை கவனிக்காமல் மற்ற எல்லா விஷயத்தையும் நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம்.


குறையாக சொல்லவில்லை.



அந்நூலின் உள்ளடக்கத்தை அல்லது உட்கருவை சரிவர புரிந்துகொள்ளாமலேயே/ஆராயாமல் நானும் விமர்சிக்கிறேன்னு கிளம்பி வந்துட்டான்... அப்படியென்று; மூக்கை உடைக்கும்பதிவு என்பதுபோல காட்டமாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் கொடுத்த விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. ஆனாலும் அது அவருடைய கருத்து எனவே அக்கருத்தை மதிக்கிறேன் ஆனால் அதை ஏற்கும்படி அதில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு விடை இல்லை என்பதே உண்மை.


நான் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம் இதுதான் இது சிறார்களுக்கான நூல்/கதை. சிறுவர்களுக்கு கதை சொல்வது சுலபம் யார்வேண்டுமானாலும் கதை சொல்லிவிடலாம் ஆனால் அவர்களை மேம்படுத்தக்கூடிய வகையில் சொல்வது சவாலான விஷயம். நாம் உபயோகிக்கும் ஒவ்வுறு வார்த்தையும், ஒவ்வொரு சொல்லும் கவனமாக பயன்படுத்தவேண்டும் இல்லையென்றால் அதன் பின்விளைவு அவர்கள் பெரியவர்களாகும்போது வெளிப்படும். (0 - 18 வயதுவரை வயதில்தான் pesonality develop ஆகும். இந்த வயதில் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.) 


அவர் சொல்வதுபோல, தன்னை உயர்சாதியாக கருதிக்கொள்பவனை பார்த்து உன்னைவிட அவன் (தாழ்ந்த சாதியாக பார்க்கப்படுபவன்) பலமடங்கு அறிவாளியாகவும், குணசாலியாகவும் எல்லாவிதத்துலையும் உயர்ந்திருக்கான் அப்போ எப்படி நீ உன்னை உயர்ந்த சாதின்னு சொல்லிக்குற என்று கேட்பது சரியான கேள்வி என்பது போலத்தான் தோன்றும். இது சாதிய பெருமிதம் மட்டுமே கொண்ட படிப்பில், அறிவில் குறைந்தவனை கூனி குறுக செய்யும் அதனால் அவன் சாதிய பெருமிதத்தை விட்டுவிடுவான் என்பதாக இருக்கலாம். ஆனால் இதுவும் ஒரு தவறான கற்பிதமாகவே இருக்கிறது. அதேசமயம் இது சரியானதல்ல என்று சொல்வதால் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டாம், படிக்கவேண்டாம், போட்டிகளில் வெல்லவேண்டாம் என்று சொல்வதாகவும் புரிந்துகொள்ளவேண்டாம். தாழ்ந்த சாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் படிப்பிலும், அறிவிலும், பொருளாதாரத்திலும், உயர்பதவிகளும் பெறவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


ஆனால் படிப்பில், பதவியில், அறிவில், விளையாட்டு போட்டிகளில், பொருளாதாரத்தில் உயராமல் இருக்கும் ஒரு தலித் மாணவன் அந்த நண்பன் கதாபாத்திரமாக இருந்திருந்தால் அந்த கற்பிதமுடைய சாதி இந்து மாணவன் இப்படித்தான் நினைத்திருக்கக்கூடும் :- "ஆமாம், இவன் நம்மைவிட படிப்பிலும், போட்டிகளிலும் கூட கம்மிதான், அப்போ நாம உயர்ந்தவன்தான் போல"


அந்த கற்பிதத்தின் எதிர் பதம் இதுதான். ஒருவேளை சிறுவர்கள் இப்படி புரிந்துகொண்டால்! என்ற ஐயத்தில் அச்சத்தில்தான் அந்த விமர்சனத்தை எழுதினேன். 


சாதிய ஏற்ற தாழ்விற்கு அறிவு, திறமை ஆகியவற்றை ஒப்பிடுவது சரியானதல்ல... அதேபோல் நடப்பு என்ற உறவை புனிதப்படுத்தி அதனூடாக சாதிய பாகுபாடு கூடாது என்பது மேலோட்டமான உணர்ச்சிநிலையிலிருந்து சமத்துவம் பேசுவதாகும். இதுவும் நிலையான/வலுவானதல்ல. வழிகேட்டிலிருந்து விடுபடுவதற்கு முன்வைக்கப்படும் இதுபோன்ற மாற்று கற்பிதங்கள் ஒருவகையில் சரியானதாக தோன்றினாலும். இதுவும் வெறும் கற்பிதமாகவே இருக்குமே தவிர உண்மைக்கு நெருக்கமாக இருக்காது. எனவே நல்வழிப்படுத்த கற்பிதங்களை பயன்படுத்துவதைவிட்டுவிட்டு உண்மையை எடுத்துவைக்கவேண்டும். அறிவியல் பார்வையில் அணுகும் பக்குவத்தை ஏற்படுத்தவேண்டும். 


தொல் திருமாவளவன் ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சொல்லியிருப்பார்:


என்னை விட அறிவில் உயர்ந்தவன் ஒருவன் இருக்கலாம்

என்னை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவன் இருக்கலாம்

என்னை விட பதவியில் உயர்ந்தவன் இருக்கலாம்

என்னை விட ஆற்றலில் உயர்ந்தவன் ஒருவன் இருக்கலாம்

ஆனால் என்னைவிட பிறப்பால் எவனும் உயர்ந்தவன் இல்லை

என்னைவிட பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன் என்று நான் எந்த சூழலிலும் சொல்லமாட்டேன்


பிறப்பால் யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்று நெத்தி பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருப்பார். இதுதான் சரியான பார்வை அறிவியல்/அறிவு பூர்வமான பார்வை, உண்மையான பார்வை. 


ஆனால் கரன் கார்க்கி அவர்களின் கருத்தோ தலைகீழாக அல்லவா உள்ளது.  சாதி புத்திகொண்டவனை பார்த்து கேக்கும் எதிர்கேள்வி என்னுமளவில் வேண்டுமானால் அதை கொள்ளலாமே தவிர அதை சிறார்களின் புத்தியில் புகுத்துவது சரியானதாக இருக்காது.


மேலும்,   "என்னைவிட அவன்தான் அதிக மார்க் வாங்குவான், பேச்சு போட்டியிலையும் அவன்தான் first அப்பறம் எப்படி அவன் எனக்கு கீழ? இது எங்களோட friendship 'அ பிரிச்சிடும்னு தோணுச்சு அதனால கயிறை அவுத்து போட்டுட்டேன்" என்று அந்த மாணவன் நினைப்பது - மாணவனின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது இதில் தவறில்லை. அதேசமயம் அவனை அவனாகவே சிந்திக்க வைத்த அவனது தாயாவது ஏதாவது சொல்லியிருந்திருக்கலாம்.அவன் உன்னைவிட கம்மி மார்க் எடுத்திருந்தாலும், நீ அதிகமார்க் எடுத்திருந்தாலும் யாரும் யாருக்கும் உயர்ந்தவங்க இல்லை என்றோ அல்லது வேறுவிதமாகவோ. அப்போதுதான் இக்கதையை படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் தெளிவாக விளங்கியிருக்கும். என்பதே என் விமர்சனத்தின் நோக்கமே தவிர யாரையும் சிறுமைப்படுத்துவது வெறுப்பை உமிழ்வது அல்ல.


- தீயவன் 

No comments:

Post a Comment