Breaking

Saturday, August 17, 2024

கயிறு - சிறார் சிறுகதை நூல் | விமர்சனம்


     விஷ்ணுபுரம் சரவணன் என்பவர் எழுதிய கயிறு எனும் சிறார்களுக்கான சிறுகதை நூல் (4,5 பக்கங்களுடைய சிறுகதை) மலிவு விலையில் ரூபாய் 5 க்கு வெளிவந்திருந்தது (வெறும் 5 ரூபாய்மட்டுமே கொடுத்து வாங்கமுடியாது. குறைந்தது 250 ரூபாய்க்கு 50 பிரதிகள் வாங்கவேண்டும்). இதன் நோக்கம் பள்ளி மாணவர்களிடம் சமத்துவத்தை கற்பிக்க - சாதி பாகுபாடு கூடாது என்பதை உணர்த்த எடுக்கப்பட்ட முயற்சி. இம்முயற்சி பாராட்டத்தக்கது. இதேபோல் பல நூல்கள் சிறுவர்களுக்காக - சிறுவயதிலேயே அறிவொளியூட்டி நல்வழிப்படுத்தும் படைப்புகள் உருவாக்கப்படவேண்டும். 


 சரி, "கயிறு" கதைக்கு வருவோம். இது அரசுப்பள்ளியில் படிக்கும் 7ஆம் வகுப்பு மாணவன் பற்றியது. அவனது தெருவை சேர்ந்த - சொந்த சாதிக்காரர் ஒருவர் பள்ளிக்கு அருகில் கடை வைத்திருக்கிறார் அவர்  அவனுக்கு ஒருநாள் கையில் சாதி கயிறை கட்டிவிடுகிறார். அவனுக்கு அது சாதி கயிறு என்றெல்லாம் தெரியாது. பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்தவன் தன் அம்மாவிடம் அதை காட்டுகிறான். அவனின் தாய் சுதாரித்துக்கொள்கிறார். ஆனால் அவரே அது எதற்கு கட்டப்பட்டது அதை கட்டலாமா வேண்டாமா என்றெல்லாம் சொல்லாமல் தன் மகனே அதை உணர்ந்துகொண்டு முடிவெடுக்கட்டும் என்று சில செயல்களை செய்வார். அவனுக்குள் சில கேள்விகளை உசுப்பிவிடுவார் கயிறை கட்டிவிட்டவரிடம் பதிலை கேட்க சொல்வர். என்னென்ன மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டது அதற்க்கு என்னென்ன பதில்கள் கிடைத்தது அதன்மூலம் அவன் புரிந்துகொண்டதென்ன கடைசியில் கயிறை அவிழ்த்தானா இல்லையா என்பதுதான் கதை.


இந்த முயற்சி வென்றதா என்றால் இது வெறும் முயற்சியாக மட்டுமே இருப்பதாக தோன்றுகிறது. சில விஷயங்கள் சொல்லப்படாமல், சில விஷயங்கள் தவறாக புரிந்துகொள்ளும்படியாகவே உள்ளது. அந்த கதையில் வரும் கடைசி பகுதியை பார்த்தல் அதற்கான காரணம் புரியும்.


அந்த மாணவன் தன்னுடைய நண்பனுக்கும் (தலித் நண்பன்) அதே கயிறு வேண்டும் என்று அந்த கடைக்காரரிடம் கேட்பான் அதற்கு அவர் இந்த கயிறை அவங்க எல்லாம் கட்டக்கூடாது, அவங்க வேற ஆளுங்க, நாமெல்லாம் ஒரே ஆளுங்க... அவங்க எல்லாம் நமக்கு கீழ என்று சொன்னதாக தன் அம்மாவிடம் சொல்வான். பிறகு, என்னைவிட அவன்தான் அதிக மார்க் வாங்குவான், பேச்சு போட்டியிலையும் அவன்தான் first அப்பறம் எப்படி அவன் எனக்கு கீழன்னு நினச்சு குழப்பமா இருந்ததாக சொல்ல்வான். மேலும், இது எங்களோட friendship 'அ பிரிச்சிடும்னு தோணுச்சு அதனால கயிறை அவுத்து போட்டுட்டேன் என்பான்.


தன்னைவிட அதிக மார்க் எடுப்பதால் போட்டிகளில் முதலிடம் பெறுவதாலும் அவன் கீழானவன் இல்லையென்று சொல்லும்போது  குறைந்த மார்க் எடுத்தால்,போட்டிகளில் தோல்வியடைந்தால் கீழானவனா என்கிற கேள்வி எழுகிறது... இதை படிக்கும் மாணவர்கள் என்னவாக புரிந்துகொள்வார்கள் என்று சிந்தித்துப்பார்த்தால் இதிலுள்ள குறைபாடு புரியும்.


மேலும், கீழ் மேல் - உயந்த சாதி, தாழ்ந்த சாதி என்கிற வரையறையை ஆணித்தனமாக உடைக்கும்படியான கருத்து இதில் விடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி வெறும் நட்ப்பு, மதிப்பெண் என்பதோடு பூசி மொழுகி கடந்துவிடுகிறது. 


- தீயவன் 

No comments:

Post a Comment