ஒவ்வொரு மதத்தவரும் தன் மதத்தவரை சந்திக்கும்போது பொதுவான ஒரு வார்த்தையை சொல்லி முகமன் செய்துகொள்வார்கள். இஸ்லாமியர்கள் "அஸ்ஸலாமு அலைக்கும்", "வா அலைக்கும் அஸ்ஸலாம்" என்பார்கள். பௌத்தர்கள்; "நமோ புத்தயா" என்பார்கள். வடஇந்திய இந்துக்கள் மற்றும் பிறர் "நமஸ்தே" என்பார்கள். அதுபோல கிறிஸ்தவர்கள் குறிப்பாக தமிழ் கிறிஸ்தவர்கள் "ஸ்தோத்திரம்" என்று சொல்கிறார்கள். ஏன் இவர்கள் ஸ்தோத்திரம் சொல்கிறார்கள்? அதற்கு அர்த்தம் என்ன என்று பார்ப்போம்.
முன்பு சொன்னதுபோல ஒருவரைச் சந்திக்கும்போது மகிழ்ச்சியையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாகவும், வாழ்த்துரைக்கவும் ஸ்தோத்திரம் எனும் சொல்லை பயன்படுத்துகிறார்கள். தேவாலையத்திலோ, மற்ற கிறிஸ்தவர்களை பார்கும்போதோ, உறவினர்களை சந்திக்கும்போது பெயருக்கோ, உறவுமுறைக்கோ முன்பு ஸ்தோத்திரம் என்ற வார்த்தையையும் சேர்த்து கையை கூப்பி வணங்கி சொல்வார்கள். அதாவது ஸ்தோத்திரம் மாமா, ஸ்தோத்திரம் பாஸ்டர், ஸ்தோத்திரம் சிஸ்டர் என்று.
ஸ்தோத்திரம் என்றால் துதி என்று அர்த்தம். மேலும் போற்றுவது, உயர்த்துவது, ஆராதிப்பது என்றும் பொருள்படும். ஆங்கிலத்தில் praise என்று சொல்லலாம். Praise Uncle, Praise Pastor, Praise Sister அல்லது தமிழில் துதி மாமா, துதி பாஸ்டர், துதி சகோதரி இப்படி சொல்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? சுத்த கூமுட்டை தனமாக இருக்கிறதல்லவா! அரைகுறை மொழி தெரிந்தவன் கூட இந்த அளவு சொற்களை அர்த்தமற்று பயன்படுத்தமாட்டான்.
உண்மையில் அந்த வார்த்தையை அப்படி பயன்படுத்தக்கூடாது. ஆங்கிலத்தில் "Praise The Lord" என்பார்கள் அதாவது "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்". அது காலப்போக்கில் சுருக்கி/சுருங்கி ஸ்தோத்திரம் என்று முழு அர்த்தமற்ற வார்த்தையாக மாறிவிட்டது.
எனவே ஸ்தோத்திரம் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்துவது இலக்கணப்படியும், மற்றபடியும் பிழையானது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றோ அல்லது சாத்தானுக்கு ஸ்தோத்திரம் என்றோ அல்லது வேறுமாதிரியோ தான் பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் அந்த வார்த்தை இலக்கணப்படி சரியானதாக பொருளுடையதாக இருக்கும்.
சரி, ஒருவரை சந்திக்கும்போது ஏன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்கிறார்கள்? அதற்கு கிறிஸ்தவர்கள் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால் ஒருவரை சந்திக்க நேர்ந்ததாக கடவுளை துதிக்கும் விதமாக கடவுளுக்கு துதியும், மகிமையும், நன்றியும் என்று பொருள்கொள்ளும்படி Praise The Lord என்று சொல்லப்படுவதாக சொல்கிறார்கள்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ற வார்த்தை இலக்கணப்படி சரியாக இருந்தாலும் பகுத்தறிவின்படி முட்டாள்தனமானது. ஒருவரை சந்திக்கும்போது நான் ஏன் கடவுளை துதிக்கவேண்டும் அல்லது கடவுளுக்கே துதியும், மகிமையும் என்று புகழ் பாடிக்கொண்டிருக்க வேண்டும்? இரண்டு கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் சாந்திகொம்போது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லிக்கொண்டு போகட்டும் ஆனால் கிறிஸ்தவ மதத்தவர் வீட்டில் பிறந்த கடவுள்/மத நம்பிக்கையற்ற ஒருவர் அச்சொல்லை சொல்லியே ஆகவேண்டும் என்று மற்ற கிறிஸ்தவர்கள் எதிர்பார்ப்பது கூமுட்டைத்தனம். முதலில் நீங்கள் கடைபிடிக்கும் பழக்கங்களை (சரியோ தவறோ) பொருள் அறிந்து கடைபிடியுங்கள் பிறகு மற்றவருக்கு உபதேசியுங்கள் (மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் ஒழிய).
ஒருவரை சந்திக்கும்போது சொல்வதற்கு மத அடையாளமற்ற நல்ல வார்த்தைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வணக்கம், Hi - Hello இவைகள் நடைமுறைக்கு ஏற்றதாக, மதசாயமற்று, பகுத்தறிவற்ற தன்மை இன்றி எல்லோராலும் பயன்படுத்தப்படும்படி இருக்கிறது. வணக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வாங்க (வருக-வாருங்கள்), Hi - Hello என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதே கூட போதுமானது. இதில் மரியாதைக்குறைவு என்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
- தீயவன்
No comments:
Post a Comment