பொருட்களை நாம் இரண்டு வகையாக பிரித்துள்ளோம். ஒன்று உயிருள்ளவை மற்றொன்று உயிரற்றவை. இதில் உயிருள்ளவை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிர்கள், செடி, கோடி, மரம் மற்றும் நுண்ணுயிர்கள் போன்றவை. உயிரற்றவை என்பது மேற்கூறியவற்றை தவிர்த்து மற்ற அனைத்தும் அதாவது கல், மண், உலோகம் மற்றும் மனிதர்கள் உருவாக்கிய பொருட்கள் போன்றவை.
உயிருள்ளவை என்று நாம் சொல்லும் இவைகளுக்கு உயிர் எப்படி வந்தது? உண்மையில் உயிர் என்றால் என்ன? என்று கேட்டால், கடவுள்தான் உயிரை உண்டாக்கினான் என்பார்கள் மதவாதிகள். கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள், யூதர்கள் எல்லாம், உயிர் என்பது கடவுளின் மூச்சுக்காற்று என்பார்கள். இந்துக்களோ அதை ஆன்மா என்பார்கள். இந்த உலகை உருவாக்கிய பிரம்மத்தின் பகுதிதான் ஆன்மா என்பார்கள். அதற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை என்றெல்லாம் சொல்வார்கள். கடவுள் நம்பிக்கை குறைந்த சிலரோ, உயிர் என்பது பிரபஞ்ச சக்தி என்பார்கள். இன்றைய சினிமாக்களில் - உடல் அழிந்தாலும் உயிர் அழியாது சிலநேரம் அது மற்றவர் உடலில் புகுந்து ஆட்டிப்படைக்கும் அல்லது தனக்கு தேவையானதை செய்துகொள்ளும் - உயிரற்ற பொருட்களில் கூட புகுந்து வேலைசெய்யும் என்பனபோன்று அக்கால மனிதர்களின் மூடநம்பிக்கைகளையே காண்பிக்கப்படுகிறது. இவையெல்லாம் உயிரை பற்றி மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளை காட்டுகிறது.
ஆனால், உண்மையில் உயிர் என்பது கடவுளால் உருவாக்கப்படவில்லை. இந்துக்கள் நம்புவதுபோல பரபிரம்மம், பரமாத்தா, பரம்பொருள் என்றெல்லாம் இல்லை. உடல் அழிந்தாலும் உயிர் அழியாது என்பதும் பொய். உடல் அழிவதுபோல அதுவும் அழிந்துவிடும் (அழிந்துவிடும் என்பதை உருமாறிவிடும் என்று எடுத்துக்கொள்ளலாம் - அதாவது, மண்ணில் புதைக்கப்பட்டவை மக்கி வேறொரு வடிவம் அடைவதை போல - நீரை சூடேற்றினால் ஆவியாகவும், குளிரவைத்தால் பனிக்கட்டியாகவும், பாறையை நொறுக்கினால் சிறு துகளாகவும் மாறுவதை போல.) உயிர் என்பது உயிரற்ற பொருட்களிலிருந்து உருவானது. இது ஏதோ திடீரென்று உருவாகிவிடுவதில்லை. உதாரணமாக பூமியில் கிடைக்கும் நிலக்கரி, தங்கம், உலோகங்கள், கச்சா எண்ணெய்கள் இவைகளெல்லாம் பூமியில் ஏற்படும் பல மாற்றங்களினால் பலகாலமாக நடக்கும் வேதிவினை காரணமாக உண்டாகின்றன என்று நமக்கு தெரியும். உயிர் என்பதும் அப்படிதான். பூமியில் உயிர்களே தோன்றாத காலத்தில் உயிரற்ற பொருட்கள் எப்படி உயிர்தன்மையுடையதாக மாறி பின் பரிணமித்து இன்று நாம் காணும் பலவகை உயிரினங்களாக உருவானது என்பதை அறிவியலார்கள் சோதனைகளின் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் ஏ.ஐ.ஓபாரின் எனும் சோவியத் உயிரியல் விஞ்ஞானி. அவர் பூமியில் முதன் முதலில் உயிர் எப்படி தோன்றியது, என்னென்ன பொருட்களின் வேதிவினை காரணமாக அப்பொருள் உயிர்தன்மை பெற்றது என்று படிப்படியான பரிணாமத்தை (வேதிப் பரிணாம கோட்பாடு) விளக்கமாக "உயிரின் தோற்றம்" எனும் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். இது மார்க்சிய பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் அதற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
புத்தர் கூட இதைத்தான் சொன்னார், உயிரற்ற பொருட்களின் சேர்வையால் தான் உயிர் தோன்றுகிறது என்று. உதாரணமாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இம்மூன்றும் சேருகிறபோது சிகப்புநிறம் வருகிறது. இதுபோலவே குறிப்பிட்ட அளவுகளில் மூலங்கள் சேரும்போது உயிர்தன்மை பெறுவதாக சொல்வார். மேலும் இந்த உயிர் என்பது உடலில்லாமல் தனித்தியங்கமுடியாது எனவே, இறந்தபின் அதே உயிர் வேறு உடலுக்குள் நுழைகிறது (மறுபிறப்பு) அல்லது பிரம்மத்தோடு கலக்கிறது என்பதெல்லாம் கற்பனை என்றார்.
ஆகவே உயிர் என்பது தெய்வசக்தியோ, பரமாத்மாவோ அல்லது எதோ ஒரு சக்தி உலகம் உருவாகும் முன்பிருந்தே இருக்கிறதென்றோ இல்லை. தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் பொருட்கள் ஒன்றோடொன்று சேரும்போது ஏற்படும் வேதியியல் மாற்றத்தினால் உண்டானதே உயிர். அது ஒருசெல் உயிராக வளர்ந்து மேலும் மேலும் பரிணமித்து பல உயிர்களை தோற்றுவித்தது. அதில் மனிதனும் ஒருவன். மனிதனின் அறிவுக்கும், சிந்தனைக்கும், உடல் வடிவத்திற்கும் இவ்வளவுகாலமாக நிகழ்ந்த பரிணாம மாற்றங்களே காரணாம். சில மதங்கள் சொல்வதுபோல அவன் திடீரென்று கடவுளால் படைக்கப்படவில்லை.
- தீயவன்
No comments:
Post a Comment