புத்தர் மறைந்த பின் பௌத்தத்தில் பலப்பிரிவுகள் (18 பிரிவுகள்) ஏற்பட்டது. அதில் பெரும் பிரிவாக இன்றிருப்பது மகாயானம் (பெருவாகனம்), ஹீனயானம் (சிறுவாகனம்) மற்றும் வஜ்ரயானம். இவற்றிற்க்குள்ளும் உட்பிரிவுகள் உள்ளது. குறிப்பாக ஜென், தேரவாதம் போன்றவற்றை கூறலாம். இப்படி பலவகையாக பிரிந்திருக்கும் பௌத்தத்தில் அம்பேத்கார் தழுவிய பௌத்தம் எது? எந்த பிரிவை தேர்ந்தெடுத்தார்? என்பது பற்றி தெரிந்துகொள்ள, மதமாற்ற நிகழ்விற்கு முன்பும், பின்பும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவருடன் நடத்தப்பட்ட உரையாடல்களை படித்தாலே புரியும். அவற்றை கீழே மொழிபெயர்த்து பதிவிட்டுள்ளேன்.
அக்டோபர் 6 - 1956 , நாக்பூர் விடுதி ஒன்றில் :
புத்தரின் போதனைகளை ஏற்று அவற்றை பின்பற்ற போகிறேன். மஹாயானம், ஹீனயானம் என்ற வேறுபட்ட கருத்துக்களிலிருந்து - இரண்டு மத ஒழுங்கிலிருந்து என் மக்களை விளக்கி வைப்பேன். எங்களின் பௌத்த தம்மம் என்பது புதிய தம்மம், நவயானம் (புதிய வாகனம்).
அக்டோபர் 13 - 1956 , பௌத்த மதமாற்றத்திற்கு முந்தைய நாள், Hitwada எனும் ஆங்கில நாளிதழின் நிருபர் அம்பேத்கருடன் நிகழ்த்திய நேர்காணல் :
நிருபர் : புதிய பௌத்தர்கள், பாரம்பரிய பௌத்தத்தை கடைபிடிப்பார்களா அல்லது நவீனகால நிலைமைக்கு இசைவான பௌத்தத்தையா?
அம்பேத்கர் : "அவர்கள் பின்பற்றும் மதம், புத்தர் தானே கற்பித்ததாக இருக்கும். பௌத்தத்தின் வேறுபாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவை மகாயானம் மற்றும் வஜ்ரயானம் அல்லது பிற பிரிவுகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இது ஒரு வகையான நவயானம் (புதிய வாகனம்) மட்டுமே."
பௌத்த மதமாற்ற நிகழ்விற்கு அடுத்தநாள், நாக்பூர் - sham விடுதியில் Gajanan Tryambak Madkholkar என்ற மகாராஷ்டிர நாவலாசிரியரால் எடுக்கப்பட்ட பேட்டி:
Madkholkar : "நேற்று நீங்கள் சொன்னது பாரம்பரிய பௌத்த அறிஞர்களுக்கு பிடிக்காது என்று நான் நினைக்கிறேன்."
அம்பேத்கர்: மற்றவர்கள் விரும்பும்படி அல்லது விரும்பாதபடி இருக்கவேண்டும் என்பதற்காக நான் எதையும் சொல்வதில்லை. எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே பேசுகிறேன். அதனால்தான் எனது பௌத்தம், ஹீனயானம் மற்றும் மஹாயானம் ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் வேறுபட்டது என்பதை பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெளிவாகக் கூறினேன். நீங்கள் விருப்பப்பட்டால் நவயானம் (புதிய வாகனம்) என்று அழையுங்கள்.
Madkholkar : அப்படியென்றால், ஏன் இந்த பிரிவை "பீமயானம்" (Bhimayana) என்று அழைக்கக்கூடாது?
அம்பேத்கர் சிரித்துவிட்டு சொன்னார் : " நீங்கள் அப்படி அழைக்க விரும்பினால், அழைத்துக்கொள்ளலாம். அதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் நான் அதை சொல்ல மாட்டேன். நான் ஒரு சிறிய மனிதன். இந்த உலகிற்கு நான் புதிய கருத்தை வழங்கவில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம், புத்தருடைய தர்மசக்கரம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
இந்துக்களாகிய நீங்கள், உங்கள் தற்கொலை மனப்பான்மையால், கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்நாட்டில் வந்து வளர அனுமதித்தீர்கள். இந்த மண்ணில் தோன்றிய, பகுத்தறிவு மிகுந்த பௌத்தத்தை, இந்த இந்திய மதத்தை நீங்கள் நாடுகடத்தி விட்டீர்கள். நான் அதை மீண்டும் அதன் வீட்டிற்க்கே கொண்டுவந்திருக்கிறேன் அதில் நான் பெருமைப்படுகிறேன்.....
இந்த பேட்டிகளின் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் அவர் எந்த பிரிவையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதுதான். மாறாக, எல்லா பௌத்த நூல்களையும், வரலாற்றையும் ஆராய்ந்து கற்பனைகளையும், திரிபுவாதங்களையும் களைத்து, நீக்கி - இதுதான் உண்மையான பௌத்தம் என்று "புத்தரும் அவரது தம்மமும்" என்ற நூலை கொடுத்திருக்கிறார். இதில் புத்தரின் கருத்துக்களோ வரலாறோ திரித்து கூறப்படவில்லை. காலத்தால் புத்தரின் போதனைகளில் படிந்த தூசிகளைமட்டுமே துடைத்து நமக்கு கொடுத்திருக்கிறார் அம்பேத்கர். பிற மரபு பௌத்த பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இது புதுவகையான பௌத்தம். ஆகவேதான், அவரும் இதை Navayana அல்லது Neo-Buddhism என்று சொல்கிறார்.
- தீயவன்
No comments:
Post a Comment