Breaking

Monday, October 3, 2022

மனிதன் - உயர்திணையா? அஃறிணையா?

    


    மனிதன் வேறு விலங்கு வேறு என்று நாம் நினைக்கிறோம். குறிப்பாக மதநம்பிக்கையாளர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவிலோ மனிதர்களுக்குள்ளாகவே வேற்றுமைகள் தீவிரமாக இருந்த காலம் உண்டு. எல்லோரும் ஒரே உருவத்தில் இருந்தாலும் எல்லோரும் ஒன்றல்ல என்றே கருதினார்கள். இன்றும்கூட அக்கருத்து அவர்களின் மூலையில் எங்கோ ஓர் ஓரமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. காலப்போக்கில், நாமெல்லோருமே மனிதர்கள்தான் நமக்குள் உயர்வு தாழ்வில்லை என்று ஒப்புக்கொள்ளும் அளவிற்கு சிலர் வந்திருக்கிறார்கள் - இந்தியர்கள் மட்டுமல்ல நிற வேற்றுமை கொண்ட அயல்நாட்டுக்காரர்களும்தான். கிறிஸதவர்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும் "நாமெல்லாம் ஒன்று" என்ற கருத்தை நோக்கி நகர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் வேதாகமத்தில் படைப்பு பற்றி கூறப்பட்டுள்ளதைத்தான். முதன் முதலில்  ஆணையும், பெண்ணையும் (இரண்டு பேரை) மட்டும்தான் இறைவன் படைத்தான் நாமெல்லாம் அவர்களின் பிள்ளைகள்தான் - ஒருதாய் வயிற்று பிள்ளைகள் என்று தேனொழுக பாடுகிறார்கள். இப்படி பாடுபவர்கள் நாமும் விலங்குகளும் ஏன்  இந்த பிரபஞ்சத்தில் உள்ளவைகளும் ஒன்றுதான் என்று ஏற்கமாட்டார்கள். அதற்க்கு அவர்களின் வேதங்கள் இடம்கொடுக்காது. அவர்களை பொறுத்தவரை விலங்குகள், பறவைகள் (இப்பூமியில் உள்ள அனைத்தும்) மனிதர்களின் தேவைக்காக இறைவனால் படைக்கப்பட்டது.


ஆனால் ஆய்வுகளின் படி பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒருகாலத்தில் ஒரே மூதாதையரைதான் கொண்டிருந்தன. விஞ்ஞானபடி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒருகாலத்தில் ஒன்றிலிருந்துதான் பல்கி பெருகின; என்பதை அவர்கள் ஏற்கமறுகிறார்கள். அவர்களின் ஒற்றுமை என்பது வெறும் மத நம்பிக்கையின் அடிப்படையிலானது அதைத்தவிர அதற்கு எந்த மதிப்பும் இல்லை. இன்னும் சிலரோ நாமெல்லாம் ஒரேமூலத்திலிருந்து பரிணமித்து வந்தாலும் மற்ற உயிரினங்களைவிட நாம் பரிணாம உச்சத்தில் இருக்கிறோம். இதுதான் அவற்றிற்கும் நமக்கும் உண்டான வேற்றுமை. நாம் அவைகளை காட்டிலும் அறிவில், சிந்தனையில் சிறந்தவர்கள். நம்மால் இயற்கையை புரிந்துகொண்டு இயற்கையை கட்டுப்படுத்தி நமக்கு சாதகமாக பயன்படுத்த முடிகிறது அதனால் தான் நாம் உயர்திணை - என்று சொல்வார்கள்.


உயர்திணை என்று பிதற்றிக்கொள்ளும் நாம் இந்த உலகை - சமுதாயத்தை - வாழ்வியலை எப்படி உருவாக்கிவைத்துள்ளோம் என்று கொஞ்சம் கண்களை திறந்து பாருங்கள். நம்முடைய கடந்தகால வரலாற்றையும் புரட்டிப்பாருங்கள் நாம் உயர்திணையாகத்தான் இருந்திருக்கிறோமா? இன்றும் உயர்திணையாகத்தான் நடந்துகொண்டிருக்கிறோமா? என்று தெரியும். 


உண்மையிலேயே இந்த பூமி நமக்கு கிடைத்திருக்கும் சொர்கம் தான். ஆனால் நாமோ இதை நரகமாக்கிக்கொண்டே சொர்கம் வேறு எங்கோ இருப்பதாக கற்பனை செய்துகொண்டிருக்கிறோம்.  


நகரத்தின் சாலையோரமாக நின்று இந்த மனிதர்களை சற்று வேடிக்கை பாருங்கள். ஒவ்வொருவரும் அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார்கள். சிலர் ஆடம்பர உடைகளுடனும் சிலர் வெளுத்த உடைகளுடனும். சிலர் சொகுசு வண்டிகளிலும், சிலர் அரசு பேருந்துகளிலும், சிலர் கால்கடுக்க நடந்துகொண்டும். சிலர் பிச்சையெடுத்துக்கொண்டும், சிலர் தள்ளுவண்டிகள் முதல் சாலையோரமாக அமர்ந்து எதோ ஒன்றை விற்றுக்கொண்டும் இருப்பார்கள். எல்லாம் அடுத்தவேளை உணவுக்காகத்தான். தோற்றத்தை தாண்டி அவர்களை பார்க்க முடிந்தால் இன்னும் சில விஷயங்களை காண்பீர்கள். அது - துக்கம், வறுமை, ஆசை, தந்திரம், போட்டி, வஞ்சம் ஆகியவை. அவைகளோடுதான் அவன் நாளும் அலைகிறான் ஒருவகையில் அவனை வழிநடத்துவதே அவைகள்தான்.


நாமெல்லாம் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா? ஒருங்கிணைந்து - சமுதாயமாக இருப்பது வேறு ஒற்றுமையாய் - ஒன்றிணைந்திருப்பது வேறு. ஆழமாக சென்று பார்த்தல் நம்முடைய ஒருங்கிணைப்பெல்லாம் நம் சுயநலத் தேவைகளுக்காகத்தான் என்று புரியும். நமது கூட்டுழைப்பின் நோக்கம் - அதில் தனக்கான பங்கு இருப்பதுதான். சில விலங்குகள் கூட இப்படித்தான். கூட்டாக சேர்ந்து வேட்டையாடினால்தான் அவைகளால் உயிர் பிழைக்க முடியும். 


சுயநலத்தை தீமையாக நான் சித்தரிக்கவில்லை. நம் சுயநலம் என்பது மற்றவருக்கு துன்பத்தை கொடுப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் இன்று இருக்கும் சுயநலம் என்பது மற்றவரை வறுமையில், துன்பத்தில் தள்ளுகிறது, தந்திரக்காரர்களை உற்பத்தி செய்கிறது, ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. எல்லாத்துறைகளிலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை போட்டிபோட்டு முடிந்தால் அவன் காலை வாரியோ, காக்கா பிடித்தோ முன்னேறிச்செல்லவே துடிக்கிறான். ஒருவன் மேலே இருக்கிறான் என்றால் அவனுக்கு கீழ்த்தான் மற்றவர் இருக்கவேண்டும்.


இந்த உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் வறுமை, ஏற்றத்தாழ்வு இவற்றிற்கெல்லாம் யார் காரணம்? கடவுளை? சாத்தானா? அல்லது பெரும்முதலாளிகளா? இல்லை நமக்குள் இருக்கும் பேராசை, சுயநலம். இந்த குணம் கொண்ட மனிதன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் - அடிமை, தொழிலாளி, பிச்சைக்காரன்; அவனும் முதலாளி வர்கத்தை சேர்ந்தவனே (capitalist). அந்த குணங்கள் தான் அவனை அப்படி செய்யவைக்கிறது. அது நமக்குள்ளும் இருக்கிறதே.. அது இருக்கும்வரை வறுமை, துன்பம், ஏற்றத்தாழ்வு, மனநல பாதிப்பு, கொள்ளை, கொலை எல்லாம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். எல்லோருக்குமான சமதர்ம உலகம் உருவாகாது.


நமது சமுதாயமோ, பொருளாதார முன்னேற்றம் தான் அனைத்து துன்பங்களையும் துடைக்கும், சுதந்திரத்தை கொடுக்கும் என்று கற்பிக்கிறது. எல்லோருமே அதை நம்பித்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் உடல்/மன சோர்வை தனிக்கவே கேளிக்கை, திரைப்படம், மதுபானம் எல்லாம் பயன்படுகிறது. இவைகள் எல்லாமே போதை பொருட்கள்தான். இவைகளெல்லாம் இல்லாவிட்டால் அவர்கள் என்றோ zombie களாகியிருப்பார்கள் அல்லது கிளர்ந்தெழுந்திருப்பார்கள். பொருளாதார முன்னேற்றத்தால் ஒருவன் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஒருவன் சுதந்திரம் அனுபவிக்க பலர் சுதந்திரமற்று இருக்க வேண்டும் என்பதுதான் இங்கே (இந்த பொருளாதார அமைப்பில்) எழுத்தப்படாத விதியாக உள்ளது. உண்மையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது பொருளாதார முன்னேற்றமல்ல தற்போதிருக்கும் பொருளாதார அமைப்பையே மாற்றுவதில்தான் உள்ளது.


எவையெல்லாம் சாத்தியமற்றது என்று நினைத்தோமோ அவற்றையெல்லாம் - அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் - சாத்தியப்படுத்தினோம். ஆனால் கொஞ்சம் சிந்தித்து ஒற்றுமையாக முயன்றால் சிலதை சாதிக்கமுடியும் என்றிருப்பதை மட்டும் சாத்தியப்படுத்தாமலே வைத்திருக்கிறோம். அது ஏன்? பெரிய காரணங்களெல்லாம் ஒன்றுமில்லை முன்பே சொன்னதுபோல நமக்குள்  இருக்கும் பேராசை, போட்டி, பொறாமை, சுயநலம் ஆகியவை மற்றும் நாமெல்லாம் உண்மையிலேயே ஒற்றுமையாக இல்லை என்பதும்தான். இவற்றை தூக்கியெறிய முடியாத நாம்தான் நம்மை உயர்திணை என்று நாமே பிதற்றிக்கொள்கிறோம். 


கொஞ்சம் யோசித்து பாருங்கள். இன்று மனிதர்கள் இயந்திரங்களைப்போல கடுமையாக வாழ்நாள் முழுக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். உழைப்பிலேயே அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. அவர்கள் செலுத்திய உழைப்பில் பாதியை பயன்படுத்தியிருந்தாலே சுயநலம், போட்டி, பொறாமை, ஆணவம், துன்பம், மனநோய், வறுமை, ஏற்றத்தாழ்வற்ற எல்லா உயிர்களுக்குமான சமதர்ம-பொதுவுடைமை உலகை படைத்திருக்க முடியும். ஆனாலும் அது குறித்து நாம் சிந்திப்பதுகூட இல்லை. எல்லாம் காலத்தின்/கடவுளின் கையில் இருப்பதுபோன்று கடந்துவிடுகிறோம். நாம் ஏற்படுத்திய சூழ்நிலைக்குள் நம்மை பொருத்திக்கொள்ள மட்டுமே முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எனவே நாம் பகுத்தறிவு கொண்ட உயர்தினைதானா என்பதை சிந்தித்துப்பாருங்கள். என்னை பொறுத்தவரை என்று நாம் பேராசை, சுயநலம், ஆணவம் ஆகியவற்றை விட்டொழித்து  சமத்துவ - பொதுவுடைமை சமூகத்தை ஏற்படுத்துகிறோமோ அன்றுதான் நாம் உயர்திணை என்று சொல்லிக்கொள்ள தகுதியானவர்களாவோம். அப்படிப்பட்ட பக்குவம் ஏற்படும் நேரத்தில் நம்மை உயர்திணை என்று  பீத்திக்கொல்வதை கூட நாம் அற்பமாகவே நினைப்போம்.  


(24.09.2022 அன்று எழுதியதை திருத்தங்களும் மாற்றங்களும் செய்து பதிவிடப்பட்டுள்ளது)



- தீயவன் 

            

No comments:

Post a Comment