Breaking

Friday, March 25, 2022

ஸ்டீபன் ஹாக்கிங்கும் தாவோயிசமும் | பிரபஞ்சத்தின் தோற்றம்


ஸ்டீபன்  ஹாக்கிங் ஒரு நாத்திக விஞ்ஞானி. தமிழக பெரியரியவாதிகள் கொண்டாடும் ஒருவர். காரணம், இவர் விஞ்ஞானபூர்வமாக கடவுள் இல்லை என்பதை விளக்க முயற்சித்தார். பெரியாரிஸ்டுகளை போல மார்க்சிஸ்ட்டுகளும், அம்பேத்கரியர்களும் ஹாக்கிங்கை கொண்டாடுவார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால், அவர்களின் கொள்கைக்கும் ஹாக்கிங்கின் கருத்துக்கும் உள்ள சிறு முரண். அது வேறொன்றுமல்ல, பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றியது. அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.


மார்க்சியம்:

  • பிரபஞ்சத்தை யாரும் படைக்கவில்லை.
  • அதற்க்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை.
  • பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொருட்களால் ஆனது 
  • இதில் உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை, இயங்கிக்கொண்டே இருப்பவை, நிலையான பொருள்கள் எதுவும் இல்லை.
  • பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

பௌத்தம்:

அடுத்தது அம்பேத்காரியம் என்றுதானே வரவேண்டும் ஏன் பௌத்தம் என்று உள்ளது என்று நினைக்கலாம். அம்பேத்கரியர்கள் பின்பற்றுவது அம்பேத்கரை மட்டுமில்லையே  அவர் வகுத்த பௌத்தத்தையும் தானே.. அதனால் தான்.

  • பிரபஞ்சத்தை யாரும் படைக்கவில்லை.
  • பிரபஞ்சமே எங்கும் வியாபித்துள்ளது. அதற்க்கு அப்பால் ஏதுமில்லை.
  • அதற்க்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. 
  • பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொருட்களால் (நீர்,காற்று,மண்,நெருப்பு போன்ற மூலங்களால்) ஆனது.
  • பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கணத்திற்கு கணம் மாற்றத்திற்குட்பட்டவை.
  • கனத்திற்கு கணம் தோன்றியும், மறைந்தும், மாறியும் வருகிறது. 
  • நிலையானதென்று எதுவும் இல்லை. பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும்.
  • மூலங்களின் கலவையால் உருவானவை அழிந்தாலும் மூலங்கள் அழிவதில்லை.
பிரபஞ்சம் பற்றி மார்க்சியமும், பௌத்தமும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான கருத்தை கொண்டுள்ளன. சரி, ஹாக்கிங் கூறியதை பார்க்கலாம் அப்போதுதான்  அது எப்படிப்பட்ட முரண் என்று புரியவரும்.

ஸ்டீபன் ஹாக்கிங்:

  • பிரபஞ்சத்தை யாரும் படைக்கவில்லை.
  • அது ஒன்றும் இல்லாததிலிருந்து தோன்றியது.
  • பிரபஞ்சத்திற்கு தொடக்கமும் உண்டு, முடிவும் உண்டு.

இது என்னடா புது கதையா இருக்கு என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. என்ன செய்வது நம்பினால்தான் சோறு.... என்று சொல்லமாட்டேன். வாங்க, அவர் அப்படி சொன்னதற்காக காரணத்தை பார்ப்போம்.

பெருவெடிப்பு - Big Bang எனும் சிறு புள்ளிதான் பிரபஞ்சத்தின் தொடக்கம் என்று நாம் அறிந்திருப்போம். அதாவது, கடுகளவுள்ள விதை சட்டென வெடித்து பெரும் மரமாக விரிவடைவதை கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த மரத்தை போல்தான் இந்த பிரபஞ்சமும் சிறு புள்ளியாக இருந்து மிகப்பெரும் ஒன்றாய் கணநேரத்தில் தோன்றியது. இன்னமும் விரிவடைந்துகொண்டே செல்கிறது. 

இப்போது ஒரு கேள்வி எழலாம். அந்த வெடிப்பிற்கு முன், அந்த விதை (அணுக்கருவைவிட சிறிய ஒன்று) எப்படி வந்தது?

குவாண்டம் விதிப்படி புரோட்டான் போன்ற துகள்கள் ஒருசில கணங்களுக்கு ஒரு இடத்தில் தலைகாட்டிவிட்டு மறைந்து வேறோரிடத்தில் தோன்றும் தன்மையுடையது. இதுபோலவே பிரபஞ்சமும் யாருடைய உதவியுமின்றி தன்னிச்சையாக தோன்றியிருக்கக்கூடும். இது இயற்கைமீறிய செயலன்று. இயற்கை விதிப்படியே நிகழும் ஒன்று என்கிறார் ஹாக்கிங்.

அந்த விதை தோன்றுவதற்கு முன் என்ன இருந்தது? என்ற கேள்விக்கு விடை ஒன்றும் இல்லை என்பதுதான். வெளியும் (space) காலமும் (time) பருப்பொருளும் (mass and energy) பெருவெடிப்பிற்கு பின் தோன்றியவை. எனவே அதற்க்கு முன் ஒன்றும் அற்றதாகவே இருந்திருக்கும் (no time, no space). உதாரணமாக ஒரு கருத்துளையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மையத்தில் காலமும் வெளியும் இருக்காது. பிரபஞ்சம் தோன்றுவதற்குமுன் இப்படித்தான் இருந்திருக்கும் என்கிறார்.

ஒன்றுமே இல்லாததிலிருந்து பிரபஞ்சம் தோன்றமுடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டும் சொல்கிறர். ஒரு சமதளத்தில் ஒரு கோபுரம் கட்டப்படுகிறது. கோபுரத்தை பிரபஞ்சமாக நினைத்துக்கொள்ளுங்கள். இப்போது அங்கே உருவானது கோபுரம் மட்டுமா? குழியும் தான். குழியில் இருந்த மண்ணை வைத்துதான் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. குழி, கோபுரத்தின் எதிர்மறை வடிவம். அதனால் அவை ஒன்றை ஒன்று ஈடுகட்டிவிட்டன. நேர்மறையையும் எதிர்மறையையும் கூட்டினால் பூஜியம் தான் கிடைக்கும். நேர்மறையை +1 என்றும் எதிர்மறையை -1 என்றும் எடுத்துக்கொண்டு கூட்டினால் கிடைப்பது 0 பூஜ்யம் (-1+1=0). இதை பூஜ்யமாற்ற பூஜ்யம் அல்லது இருதலற்ற இருத்தல் என்று சொல்லலாம். எனவே ஒன்றுமற்றதிலிருந்து (பூஜ்யத்திலிருந்துதான்) தான் பிரபஞ்சம் தோன்றியது (இதை Zero-energy universe என்பார்கள்). இதற்கு கடவுள் தேவையில்லை. இதுவும் ஓர் இயற்கை விதியே. 
Example for Zero Energy Universe Model

இவைகளெல்லாம் உண்மையா என்பதற்கு வருங்கால அறிவியல் தான் அதற்கான பதில்கள் கொடுக்கவேண்டும். ஆனால், மார்க்சியத்தின் பொருள்முதல்வாத கருத்துக்கள் எப்படி 2000 வருடத்திற்கு முன் தோன்றிய புத்தரின் கருத்துக்களுடுன் ஒத்துப்போவதாக உள்ளதோ அதேபோல, ஹாக்கிங்கின் இந்த கருத்துகளும் 2000 வருடத்திற்கு முன் வாழ்ந்த லாவோட்சு (Lao Tzu or  Laozi) என்ற சீன ஞானியின் கருத்துடன் ஒத்துப்போவதாக இருப்பதால் அந்த ஒற்றுமைகைளை பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

தாவோயிசம்:

  • ஒன்றும் இல்லாததிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது.
  • அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை, இயங்கிக்கொண்டிருப்பவை.
  • ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றியவை மீண்டும் ஒன்றுமில்லாததாகிறது.

தாவோயிசம் என்றதும் yin yang symbol நினைவிற்கு வருகிறதா? ஹாக்கிங் கூறிய அந்த நேர்மறை எதிர்மறை ஆற்றலுடன் இந்த symbol ஐ ஒப்பிட்டு பாருங்கள். நேர்மறை ஆற்றல் உருவாகும் அதேவேளையில் அதே அளவில் எதிர்மறையும் உருவாகிவிடுகிறது. ஒன்று இன்றி மற்றொன்று இல்லை. இவை இரண்டும் தான் அனைத்திற்கும் மூலாதாரம். இந்த இரண்டையும் கூட்டினால் பூஜ்யம் = சமநிலை. முன்பு கூறியதுபோல இருத்தலற்ற இருத்தல். இதைதான் இந்த symbol'ம் வெளிப்படுத்துவதாக உள்ளது.

அடுத்து தாவோயிச நூலான "தாவோ தே ஜிங்" இல் ஒன்றுமே இல்லாததிலிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றியது பற்றிய தாவோயிச வாசகங்களை பார்ப்போம்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும்
இருத்தலிலிருந்து வருகின்றன
இருத்தல்
இருதலின்மையிலிருந்து வருகிறது.
- tao te ching, 40

தாவோ ஒன்றை பெற்றெடுத்தது
ஒன்று இரண்டை பெற்றெடுத்தது
இரண்டு மூன்றானது
மூன்று அனைத்தையும் பெற்றெடுத்தது

எல்லாமும் யங்'கைத் தழுவி
யின்'னைச் சுமந்தன
இவ்விரண்டின் இணைவில்
ஒத்திசைவு சாத்தியப்பட்டது
 - tao te ching, 42

மேலேயுள்ள வாசகம் படிப்படியாக பெருகும் நிகழ்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதை இப்படி அர்த்தப்படுத்தலாம்: ஒன்றுமற்றதில் ஒன்று (புரோட்டான் போன்ற துகள்) தோன்றுகிறது அந்த ஒன்று வெடித்து; காலம், வெளி'யை ஏற்படுத்துகிறது. பிறகு,  குவார்க் இணைந்து புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்  துகள்களாகி இவைகள் இணைந்து ஒரு முழு அணுவாகிறது. இந்த அணுக்கள் உருவான பிறகே அதிலிருந்து அனைத்தும் பிறக்கிறது. காலம், வெளி'க்கு பிறகு பருப்பொருளும் உண்டாகிவிட்டது. இந்த மூன்றும் தான் பிரபஞ்சத்தை சமைக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று ஹாக்கிங் கூறியதையும் நினைவில்கொள்ளுங்கள்.

இன்னொரு உதாரணம், ஒன்றுமற்றதிலிருந்து எதிர்மறை, நேர்மறை என்ற இரண்டு உள்ளது. இந்த இரண்டின் விளைவால் பிரபஞ்சம் தோன்றி; உயிர், கோள்கள், நட்சத்திரங்கள் என்று அனைத்தையும் தோற்றுவிக்கிறது. 

அனைத்துக்கும் பிறப்பிடம் தாவோ
பிரபஞ்சத்தில் உள்ளவையாவும்
தாவோவின் வெளிப்பாடு
- tao te ching, 51

 

தொடக்கத்தில் இருந்தது தாவோ
எல்லாம் அதிலிருந்து வருபவைதான்
தாவோ பிரபஞ்சத்தின் அன்னை
அன்னையை அறிந்துகொள்கிற மனிதன்
அதன் குழந்தைகளையும் அதையொட்டி
அறிந்துகொள்கிறான்.
- tao te ching, 52


பொருளற்றது அல்லது இருத்தலற்றது
ஊடுருவ முடியாததில் நுழைய முடியும்.
- tao te ching, 43 


மேலேயுள்ள இந்த வாசகம் ஹாக்கிங் கூறியதுபோல காலமும் வெளியும் இல்லாத இடத்திலும் குவாண்டம்  விதிப்படி புரோட்டானைப் போன்ற துகள் திடீரென தோன்றும் என்று கூறியிருப்பதை போன்றே  இதுவும் உள்ளது. 


தாவோ எங்கும் நிறைந்தது
எல்லா திசைகளிலும் வியாபித்திருக்கும்
அனைத்துக்கும் பிறப்பிடம் தாவோ.
- tao te ching, 34

இந்த வாசகத்துக்கு ஹாக்கிங் கூறிய ஒரு எடுத்துக்காட்டு பொருத்தமாக உள்ளது. அதுதான் அந்த குழி மற்றும் கோபுரம். கோபுரம் எனும் நேர்மறை; இந்த பிரபஞ்சத்திலுள்ள நிறை, ஆற்றல் என்றும். குழி எனும் எதிர்மறை கண்ணுக்கு தெரியாமல் இந்த பிரபஞ்ச வெளியெங்கும் நிறைந்துள்ளதென்றும் சொல்கிறார். எனவே நேர்மறையும், எதிர்மறையும் அதாவது yin yang பிரபஞ்சமெங்கும் உள்ளது. 

விண்ணுலகம், மண்ணுலகம் தோன்றுவதற்கு முன்பே
இயற்கையான விஷயம் ஒன்று இருந்தது.
சலனம் அற்றதாக
ஆழம் காண முடியாததாக
மாறாமல் தனித்து நின்று
எங்கும் வியாபித்து
என்றும் தீர்ந்து போகாமல்.
அந்த ஒன்றை பிரபஞ்சத்தின் அன்னை எனலாம்.
அந்த ஒன்றின் பெயர் எனக்கு தெரியாது.
பெயர் கொடுத்தாகவேண்டும் என்றால்
அதை தாவோ என்றழைப்பேன்.
- tao te ching, 25


தாவோ என்றால் என்ன என்ற கேள்வி இருந்திருக்கும் அதற்கான பதில் இந்த வாசகத்தை படிக்கும் போதே தெரிந்துகொண்டிருப்பீர்கள். இதுபோல் இன்னும் சில வாசகங்களும் உள்ளது. இவைகளை கொண்டு ஹாக்கிங்கின் கூற்றுடன் நம்மால் அர்த்தப்படுத்திக் கொள்ளமுடிகிறது . பொதுவாக தாவோயிசத்தை நாம் மதம் என்றே நினைக்கிறோம். அது மதமில்லை அதில் கடவுளும் இல்லை. பிரபஞ்ச விதியை - இயற்கை நியைதியை பற்றியும் நாம் அதைக்கொண்டு, அதனோடு எப்படி இசைந்து வாழ்வது பற்றியும் எடுத்துரைப்பதாக நான் பார்க்கிறேன்.


- தீயவன்

No comments:

Post a Comment