Breaking

Friday, June 24, 2022

தமிழி எழுத்தின் காலம்

 


தற்போது நாம் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தின் வடிவம் இந்நிலையை அடைவதற்கு முன் பலவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வடிவமாக மாறுதல் அடைந்து இன்று நாம் எழுதும் வடிவத்திற்கு வந்துள்ளது. கி.பி. 3 அல்லது கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை "வட்டெழுத்துக்கள்" எனப்படும் வட்டமான எழுத்து முறை பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் "தமிழி" ஆகும்.


தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள் மூலம் நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி  தமிழி (தமிழ்பிராமி) எனும் எழுத்து வடிவமே இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்துக்களின் முன்னோடி அல்லது முதன்மை எழுத்து வடிவம் என்று கண்டுபிடித்துள்ளோம். இப்போது இந்த தமிழி (தமிழ்பிராமி) எழுத்து வடிவம் எப்போது தோன்றியிருக்கும்? அல்லது எவ்வளவு காலம் பழமையானது? என்பன போன்ற கேள்விகள் எழலாம்.


சில ஆண்டுகள் முன்புவரை கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தமிழி எழுத்து தோன்றியிருக்கும் என்று கருதிவந்தார்கள். ஆனால் கீழடி, கொற்கை, அனுராதபுரம், கொடுமணல் மற்றும் பல இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள்மூலம் தமிழி எழுத்தின் காலம் மிகவும் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கீழடி அகழாய்வில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பல பானை ஓடுகள் கிடைத்தது. அவற்றை carbon dating செய்தபோது அதன் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்று கண்டறிந்தார்கள்.


கி.மு. எட்டாம் நூற்றாண்டு மதிக்கத்தக்க பண்டைய
தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு.
கொற்கை

இதேபோல் கொற்கையில் நடந்த அகழாய்வில் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோட்டை carbon dating செய்தபோது அதன் காலம் கி.மு 755 ± 95 அதாவது கி.மு 8 ஆம் நூற்றாண்டு முதல் என கண்டறிந்தார்கள். இதன்மூலம் தமிழி எழுத்தின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டதாக இருக்கக்கூடும். 


இவைகள் மட்டுமின்றி கீழடி போன்ற இடங்களில் காலத்தால் முற்பட்ட பல குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானையோடுகளும் கிடைத்துள்ளது அவை சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகளைப்போல் உள்ளது. இக்குறியீடுகள் தமிழி எழுத்துக்கு முற்பட்ட எழுதுவடிவமாக இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். இன்னும் அவை முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. தமிழி எழுத்துகளுக்கு முன்பு என்ன எழுத்து பயன்படுத்தப்பட்டது என்று இனி வரும் காலங்களில் கண்டறியப்படலாம்.


தற்போது செய்த ஆய்வுகள் மூலம் தமிழி எழுத்தின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது.

  

- தீயவன்

No comments:

Post a Comment