Breaking

Thursday, March 3, 2022

பலியாடு | சிறுகதை

Image Credit: William James Webb


கோடைகாலம் ஆரம்பமாகி பசுமைகுன்றிய வேளையில் மனித விவசாய நிலங்களுக்கருகே மலையாடுகள் வந்து மேய தொடங்கின. அங்கொன்றும், இங்கொன்றுமாக நிலத்தில் செழித்திருந்த செடிகளை மேய்ந்து கொண்டிருக்கும்போது தற்செயலாக அவ்வழியே வந்த ஒரு மனிதன் வந்தான். சில ஆடுகள் அவனைக்கண்டதும் ஆபத்து, ஆபத்து என்று கத்திகொண்டே புதருக்குள் ஓடின. ஒரு இள ஆடு மட்டும் "ஏன் மனிதர்களை கண்டாலே இப்படி ஓடுகிறார்கள். அவர்கள் சிங்கம், புலி, ஓநாய் போல இல்லையே இவ்வுலக உயிர்களையெல்லாம் படைத்த அந்த இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட அவர்களை கண்டு நாம் ஏன் பயப்படவேண்டும்? அவர்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள். கருணையிலும், அன்பிலும், அறிவிலும் நம்மைவிட உயர்ந்தவர்கள். அதனால்தான் அவர்கள் உயர்திணை நாம் அஃறிணை". என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு ஓடாமல் மேய்ந்துகொண்டிருந்தது. 

 

அந்தமனிதன் கையில் ஒரு கிளையை நீட்டிகொண்டே ஆட்டின் அருகில் நெருங்கினார். அவனின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருப்பதை அந்த ஆடு பார்த்தது. உள்ளூர அச்சம் இருந்தும் தயக்கத்தோடு அவர் கையிலிருந்த கிளையை மேய்ந்தது. மெதுவாக தன் கைகளால் அந்த ஆடை தடவிக்கொடுத்தான். அந்த ஆட்டிற்கு அது பிடித்திருந்தது. உண்மையில் மனிதர்கள் இறைவனின் சாயல்தான், நம்மிடம் இப்படி இனிமையாக இம்மனிதர் நடந்துகொள்கிறாரே என்று பூரிப்படைந்தது.  ஆட்டிற்கிருந்த கொஞ்சபயமும் மறைந்து அந்த கிளையில் உள்ள இலைகளை தின்பதில் மூழ்கிருந்தது ஏனெனில் அது அவ்வளவு சுவையாக இருந்தது. அந்தமனிதன் மெதுவாக கிளையை பிடித்துக்கொண்டே நடந்து சென்றான். ஆடும் இலைகளை தின்றுகொண்டே அவன்பின் சென்றது.


சுவைமிக்க அக்கிளைகளை தின்றுமுடித்ததும் விழிப்படைந்து சுற்றும் முற்றும் பார்த்து திகைத்துப்போனது. ஏனென்றால் ஆடு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் இருள் சூழ்ந்துகொண்டிருப்பது வானில் மட்டுமல்ல அந்த ஆட்டின் மனதிலும்தான். "நான் எப்படி இங்கே வந்தேன்! விழிப்பின்றி இருந்ததால் இப்படி மாட்டிக்கொண்டேனே, இனி நான் எப்படி என் வீட்டிற்கு செல்வது! என் நண்பர்களையும், சகோதர, சகோதரிகளையும் எப்படி சந்திப்பேன். இனி அது சாத்தியமற்றதா? அட கடவுளே, என்னை என்ன செய்ய போகிறார் இந்த மனிதர்!  இல்லை இல்லை எதுவும் செய்யமாட்டார். மற்ற ஆடுகளைப்போல் நான் ஏன் அச்சப்படுகிறேன்!" இப்படியெல்லாம் குழப்பத்தில் இரவுமுழுவதும் புலம்பிக்கொண்டே இருந்தது. அதை இரவின் காதுகள் மட்டும் அமைதியோடு கேட்டுக்கொண்டிருந்தது.


காலை விடிந்ததும் செடி, கொடிகளை கொண்டுவந்து தொழுவத்தில் போட்டான் அம்மனிதன். அருகில் தன் வீட்டிலிருந்து மகன் ஓடிவந்து "ஐ.. ஆடு! எப்ப வாங்கியாந்திங்கப்பா.. ரொம்ப நல்லாருக்கு.. நா தொடவா.." என்று கொஞ்ச பயத்தோடும், மிகுந்த மகிழ்ச்சியோடும் தொட முயன்றான்.. ஏற்கனவே குழம்பியிருக்கும் ஆடு விலக முயற்சித்தாலும் அச்சிறுவனின் கண்களில் வெளிப்படும் கள்ளங்கபடற்ற அன்பின் ஒளியால் அவனை தொட அனுமதித்தது. மென்மையாக வருடிகொடுத்தான். அம்மனிதன் தினமும் கொண்டுவரும் ஆட்டிற்குத்தேவையான செடி, கோடி, புற்களையெல்லாம் இச்சிறுவனே அதற்கு கொடுத்து வருடிவிட்டு, அதனோடு விளையாடி பொழுதை கழித்துவந்தான். நாட்கள் சென்றது, கொஞ்ச கொஞ்சமாக ஆடும் தன் கவலைகளை மறக்கத்தொடங்கியது.


திடீரென்று ஒருநாள் அதிகாலை - சூரியன் உதிப்பதற்குமுன் இரண்டுபேர் தொவத்திற்குள் நுழைந்தார்கள். சத்தம் கேட்டு ஆடு விழித்துப்பார்த்தது. ஒருவன் அங்கே கட்டப்பட்டிருந்த ஆட்டின் கயிற்றை அவிழ்த்துக்கொண்டிருந்தான். ஆடு அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் கத்திகொண்டே அவனை முட்ட பாய்ந்தது. இரண்டுபேரும் சமாளித்து அதை வெளியே இழுத்து வந்தார்கள். "அச்சிறுவனின் தந்தை வந்து நம்மை காப்பாற்ற மாட்டாரா" என்று பெருத்த ஓசையெழுப்பிக்கொண்டே முரண்டுபிடித்தது. அவ்விருவரும் தொழுவத்தின் பின்புறம் இழுத்து சென்றார்கள். அங்கே அந்த மனிதர் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ஆட்டிற்கு உள்ளூர ஓர் பாதுகாப்பு உணர்வுதோன்றியது, அவரிடம் செல்ல முயன்றது. என்றாலும் ஆட்டின் கயிற்றை இவர்களில் ஒருவன் இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்ததால் அதனால் சில அடிகளுக்குமேல் நகரமுடியவில்லை.


ஆனால் அந்த மனிதன் ஆட்டை கண்டுகொள்ளவில்லை. "சூரியன் உதயமாவதற்குள் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு சொல்லுங்கள்" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு தன் வீட்டை நோக்கி நடக்கலானார். அதற்குள் இன்னொருவன் தான் கொண்டுவந்த உபகாரணங்களையெல்லாம் பையிலிருந்து எடுத்து தயாராகிவிட்டான். அதுவரை முரண்டுபிடித்துக்கொண்டிருந்த ஆடு நிதானமாகி நடந்துசென்றுகொண்டிருக்கும் அம்மனிதரையே பார்த்துக்கொண்டிருந்தது.


அன்று அவரை சந்தித்த காட்சி கண்முன் தோன்றியது அன்று அம்முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியின் காரணத்தையும் இன்றுதான் உணர்ந்துகொண்டது. மரணத்தின் மடியில் அவ்விருவரும் ஆட்டை அமர்த்தினார்கள். அதன் இதயத்தில் இப்போது குழப்பமோ, அச்சமோ, கோபமோ இல்லை இனம்புரியாத ஏக்கமும், வாழ்வை உணர்ந்த ஞானியின் மௌனமுமே நிறைந்திருந்தது. சூரியன் உதித்ததும் ஓடிவந்து தன்னுடன் விளையாடவிருக்கும் அச்சிறுவனுடன் இருந்த இனிமையான நாட்களும், தான் பிறந்து வளர்ந்து சுற்றித்திரிந்த இடங்களும், நண்பர்களும், சகோதரர்களின் காட்சிகளும் கண்முன்னே விரிந்துகொண்டிருந்தது. சட்டென்று ஒரு சத்தம். எல்லாம் முடிந்தது. 


© தீயவன்



No comments:

Post a Comment