Breaking

Sunday, March 13, 2022

இயேசுவும் - முகம்மது நபியும் | இரண்டு இறைத்தூதர்களின் தீர்ப்புகள்


இந்த பதிவின் நோக்கம் யார் உண்மை இறைத்தூதர் என்பது பற்றியல்ல (பொதுவாக எனக்கு இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லை). மாறாக, ஒரேமாதிரியான குற்றச்செயலுக்கு இந்த இருவரும் அளித்த தீர்ப்பு பற்றியது. இந்த தீர்ப்புகள் மூலம் நாம் எத்தகைய தீர்ப்பு செய்யாமல் இருக்கவேண்டும் எனும் படிப்பினை கொடுப்பதாக உள்ளதால் இவற்றை சீர்தூக்கி பார்ப்போம்.


முகம்மது நபியின் தீர்ப்பு:

Image credit : Unknown

ஒருநாள், தான் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக முகமது நபியிடம் ஒருவன் வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தான். அதாவது ஆடு தானே வந்து தலை கொடுப்பது போல். நீ திருமணம் ஆனவனா என்று நபி கேட்க அவன் ஆமாம் என்கிறான்.  உடனே பெருநாள் தொழுகை அன்று திடல் அருகில் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அவனுக்கு அறிவிக்கிறார் நபி. எல்லோரும் அவன் மீது கற்களை வீசும்போது வலிதாங்காமல் தப்பித்து ஓட முயல்கிறான். அவனை பிடித்து சாகும்வரல் கற்களைவீசி கொல்கிறார்கள். (ஹதீஸ்: 6820) 


இதுமட்டுமல்ல, இதுபோன்று பல தீர்ப்புகளை - குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகளை பலருக்கு கொடுத்திருக்கிறார்.

இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று சொல்பவரிடம் தன் பாவத்தை முறையிட்டவர்க்கு அந்த புனிதர் கொடுக்கும் பரிசை பார்த்தீர்களா. ஒருவேளை கடவுள் உண்டு என்றால், அவர் இப்படியெல்லாம் தான் தீர்ப்பளிப்பார் என்றால் அவரின் கருணை எத்தகையது என்று இதன்மூலம் உணர்ந்துகொள்ளலாம்.


இயேசுவின் தீர்ப்பு:

Image via Shutterstock


நம் பெரும்பாலானோர் இதை அறிந்ததே.

ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கையும் களவுமாக சிலர் பிடித்து யேசுவிடம் குழுமியிருந்த கூட்டத்தின் நடுவே கொண்டுவந்து நிறுத்தி. இவளின் குற்றத்திற்கு கல்லெறிந்து கொள்ளவேண்டும் என்று மோசஸின் நியாயப்பிரமாணம் நமக்கு கட்டளையிட்டிருக்கிறது. உங்களின் தீர்ப்பு என்ன என்று இயேசுவிடம் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அதற்கு அவர் "உங்களில் எந்த பாவமும் செய்யாதவன் எவனோ அவன் முதலில் கல்லெறியட்டும்" என்றார். ஒருவரும் கல்லெறியவில்லை, கூட்டம் பின்வாங்கியது. அந்த பெண் மட்டும் நின்றுகொண்டிருந்தாள். அவளைநோக்கி "நானும் உன்னை தண்டிக்கமாட்டேன். போ, உன் பாவத்தை விடு" என்றார். பின் கூட்டத்திடம் சில வாதங்களுக்குப்பிறகு இவ்வாறு சொன்னார் "நீங்கள் மேல்புறத்தைக் கண்டு நியாயத்தீர்ப்பு செய்கிறீர்கள். நான் யாரையும் நியாயத்தீர்ப்பு செய்வதில்லை. ஒருவேளை நியாயத்தீர்ப்பு செய்தால் என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்". (யோவான்: 8)


இந்த இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடத்தில நிகழ்ந்தாலும் ஒரே தண்டனையுடைய குற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால் இதை இவ்விருவரும் கையாண்ட விதம் தீர்ப்பளித்த விதம்தான் வேறு.,வேறு..


யேசுவிற்கும் - முகமது நபிக்கும் இடையேயுள்ள கால இடைவெளி தோராயமாக 500+ ஆண்டுகள். நபியைவிட காலத்தால் மட்டுமல்ல நுண்ணறிவிலும் மூத்தவர் இயேசு. அவரின் இந்த செயல் மதத்தைத்தாண்டி தனிமனிதனாக அவருக்கு நன்மதிப்பை கொடுத்துள்ளது.


முகமதுவின் அந்த தீர்ப்பால் அவருக்கு பின் வந்த கலீபா'களும் இதே சட்டத்தை பின்பற்றி பாலியலில் ஈடுபட்ட பல பெண்களை "ரஜ்ம்" என்ற இந்த கல்லெறியும் தண்டனையால் கொன்றுள்ளார்கள். இன்றைக்கும் சில இஸ்லாமிய நாடுகளில் பாலியல் குற்றங்களுக்கு கல்லெறி தண்டனை அல்லது தலையை வெட்டியெறிவது போன்ற தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. 2001 இல் கூட ஒரு பெண்ணை கல்லெறிந்து கொன்ற சம்பவம் பரவலாக பேசப்பட்டது. 


இதுபோன்ற கடுமையான தண்டனைகள் மட்டுமே சமூக சீரழிவுகளை நீக்கி ஒழுக்கத்தை கொண்டுவருமா? (முதலில் ஒழுக்கம் பற்றிய மதங்களின் வரையறைகளை கேள்விக்குள்ளாகவேண்டும்)  மனிதன் உள்ளார்ந்து தெளிவுபெற்றுவிட்டால் அவனுக்கு ஒழுக்க நெறிகளோ, மாதங்களோ, கடவுளோ தேவைப்படாது. அவன் செயல்களும் தெளிவானதாகிவிடும். ஆனால் இந்த எல்லா மதங்களும் தற்போதுவரை என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று சிந்தித்துப்பாருங்கள். 


- தீயவன்

No comments:

Post a Comment