Breaking

Sunday, February 13, 2022

தீவிர காதலன் - வின்சென்ட் வான்கா

Art : Vincent van Gogh 

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்கு மதபோதகராக பணியாற்றிய தனிமை விரும்பி வின்சென்ட் வான்கா பொழுதுபோக்காக படங்களை  கிறுக்குவார். தனக்குள் ஓவியத்திறமை இருப்பதை உணர்ந்து முழுநேர ஓவியராக விருப்பம் கொண்டு தன் இறைப்பணியை கைவிட்டார். இறைப்பணியை தொடராததற்கு இன்னொரு காரணமும் உண்டு - எந்தவித அடிப்படை வசதி பாதுகாப்பு இன்றி குறைந்த ஊதியத்திற்கு அவர்களை சுரண்டும் நிறுவனத்துக்கு கையாளாக அவரின் திருச்சபையே செயல்படுவதாலும், சுரங்கத்தில் கடுமையாக உழைத்து, உளுத்து நோய்வாய்ப்பட்டு இறந்துபோகும் தொழிலாளர்களின் துயரத்தை இந்த மதபோதனையால் ஒன்றும் செய்யமுடியாது இது பயனற்றதென்று உணர்ந்ததாலும் அப்படிசெத்தார். 


ஓவியராக முடிவெடுத்த அவருக்கு ஓவியம் வரைவதற்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்குவதற்கு கூட வழியில்லாத வறுமையில் இருந்தார். தன் சகோதரனின் உதவியால் பணமும் கூடவே 'உனக்கு பிடித்ததை தொடர்ந்து தீவிரமாக செய்' என்ற ஊக்கத்தையும் பெற்று தீவிரமாக ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார் - மழை , வெய்யலையும் பொருட்படுத்தாமல் மணிக்கணக்கில். ஓவியம் வரைவதில் அவருக்கிருந்த தீவிரம் - ஆர்வம் எப்படிப்பட்டதென்று இதிலேயே தெரிகிறது.


ஆனாலும் அவரின் ஓவியங்கள் மதிக்கப்படாமலும், விற்கப்படாமலும் - புறக்கணிப்பாலும், தாழ்வு மனப்பான்மையாலும், பட்டினியாலும் வறுமையில் உழன்றுகொண்டிருந்தர்வர் ஒருநாள் தற்கொலைசெய்து இறந்துவிட்டார் (தற்கொலை என்று செல்லப்படுகிறது). இவரின் வாழ்க்கை மட்டுமல்லாமல் மரணமும்கூட இவர் நினைத்ததுபோல் இல்லை. துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டும் இரண்டு நாட்கள் கழித்துதான் உயிர் போனது. தற்கொலையில்கூட தோல்வியை கண்ட அவரின் வேதனை எப்படி இருந்திருக்கும்.


இவர் ஒருமுறை தன் காதை தானே அறுத்துக்கொண்டார். பின் நாட்களில் அறுபட்ட காதில் கட்டுடன்கூடிய தன் படத்தையும் வரைந்திருக்கிறார். ஏன் தன் காதை அறுத்துக்கொண்டார் என்று ஓஷோ மிக அழகாக சொல்லியிருக்கிறார். அதை கேட்போம்:


வாரத்திற்கு நான்குநாட்கள் உணவருந்தும் விடுதிக்கு, நண்பர்களுக்கு - ஒருமுறை தன்னை "அழகற்றவன் நீ" என்று சொன்ன விலைமாதுவிற்கும் தன் ஓவியங்களை கொடுத்துவந்தார். அது உண்மை எந்த பெண்ணும் அவரை காதலிக்கவில்லை, அது சாத்தியமற்றது.


அவள் கருணையால் - சிலநேரங்களில் உங்கள் பெண்களைவிட, விலைமாதுக்கள் மிகுந்த கருணைமிக்கவர்கள்தான் - கூறினால் "எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும்" என்று. அதை அவன் என்றும் கேட்டதில்லை, காதல் ஒரு தொலைதூர விஷயமாக இருந்தது. விருப்பு(liking ) கூட...


அவர், “உண்மையாகவா, நீங்கள் என்னை விரும்புகிறீர்களா? என்னிடம் என்ன பிடித்திருக்கிறது?" சட்டென்று அவள் பேச்சற்று, "உன்னுடைய காது பிடிக்கும்", "உன் காதுகள் மிக அழகாக இருக்கிறது" என்றாள்.


நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், வின்சென்ட் வான்கா தன் வீட்டிற்கு சென்று சவரகதியால் தன் காதை அறுத்து அதை அழகாக pack செய்து அவளிடம் கொண்டுவந்து கொடுத்தார். ரத்தம் ஒழுகிக்கொண்டே..


அவள், "நீ என்ன செய்துவிட்டாய்"? என்றாள்


"யாரும் என்னிடம் எதையும் விரும்பியதில்லை. நான் ஒரு ஏழை, நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? நீங்கள் என் காதை விரும்பினீர்கள்; நான் அதை உங்களுக்கு வழங்கியுள்ளேன். என் கண்களை விரும்பியிருந்தால் அதையும் உங்களுக்கு வழங்கியிருப்பேன்,  ஒருவேளை நீங்கள் என்னையே விரும்பியிருந்தால், உங்களுக்காக நான் இறந்தும் இருப்பேன்." என்றார்


விபச்சாரிக்கு நம்பவே முடியவில்லை. ஆனால் முதன்முறையாக, வான்கா மகிழ்ந்தார், சிரித்தார்; யாரோ ஒருவர் குறைந்தது தன்னுடைய ஒரு சிறு பகுதியையாவது விரும்புகிறார் என்று.


----------

வாசகர்கள், Lust for Life என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான "நாயகன் வான்கா: ஒப்பற்ற ஓவியனின் வாழ்க்கைச் சரிதம்" படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 


- தீயவன்


No comments:

Post a Comment