Breaking

Wednesday, December 30, 2020

புலால் உண்ணும் புத்தன்

Artist : Unknown

பௌத்தம் ஊன் உண்ணாமையை போதிப்பதாகவே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல.


வேதகால பிராமணர்கள் இறைவனின் பெயரால் பல விலங்குகளை பலியிட்டு இறைவனுக்கு படைத்தும் உண்டும் வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவர் புத்தர் என்பதை "யூதமும் - ஆரிய பிராமணமும் । இயேசுவும்  புத்தரும்" என்ற முந்தைய பதிவில் பார்த்தோம்.


இப்படி பலியிடுதலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய புத்தர் ஏன் புலால் உண்பதற்கு எதிராக பேசவில்லை. அவரது சங்கத்தில் மீன், இறைச்சி உணவிற்கு ஏன் தடைவிதிக்கவில்லை என்று கேட்கலாம்..  நீலகேசியிலும் இந்த கேள்வியை முன்வைத்தே பௌத்தம் கொல்லாமைக்கு எதிராக உள்ளது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. அதாவது,


"தீமையை நேரடியாக செய்வதுமட்டுமல்ல, தீமையை செய்ய தூண்டுவதும் தீவினையே. அதுபோலவே ஊனுண்ணலும் மறைமுக தீவினை "


"எல்லா உயிர்களுக்கும் அன்பும் அருளும் காட்டவேண்டும் என்று சொல்லிக்கொண்டே ஊனுண்ணலுக்கு மௌனம் சாதிக்கிறது"


"எளிதில் மீன் உணவு கிடைக்கும் என்பதற்காகவே புத்தர் கடற்கரையோரங்களில் மடங்கள் அமைத்திருக்கிறார்


என்றெல்லாம் பௌத்தத்தை தன் வாதத்தால் வதைத்தெடுப்பாள் நீலகேசி.


(நீலகேசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிற சமய துறவிகளிடம் வாதம் செய்வதாக கற்பனையாக எழுதப்பட்டதே இந்நூல்.)

நீலகேசி கேட்பதைப்போன்றே ஒரு பிராமணர் புத்தரிடம் சொன்னார்:

தானியங்கள், பழங்கள், கீரைகள் இவைகளால் நல்வினையும். இறைச்சி உணவால் தீவினையும் ஏற்படுகிறது என்று.


அதற்க்கு புத்தர்:

கொல்லுதல், திருடுதல், அடிமைப்படுத்துதல், ஏமாற்றுதல், புறங்கூறுதல், தற்புகழ்ச்சி, சினம், வஞ்சகம்,,,.. இவைகளே செத்த இறைச்சியை உண்ணுவதென்பதாகும் (தீமையை உண்பதாகும்) - தீமைகளாகும். இறைச்சி உண்பதன்று.


மீன், இறைச்சி உண்ணாமல் தவிர்த்தலும், நிர்வாணமாயிரத்தலும், குடுமிவைத்தலும், மழித்தலும், யாகம் வளர்த்தாலும், தன்னை வருத்தலும், தானப்பொருட்களை வேள்வித்தீயில் இழந்தலும், சடங்குகளும் ஒருவனை தூய்மையும் படுத்தாது - நல்வினையும் கொடுக்காது என்று சொன்னார்.


புத்தர் வாழ்ந்த காலத்திலேயே புத்தரும் அவரது சீடர்களும் புலால் உணவை உண்டிருக்கிறார்கள் பின்னர்தான் இறைச்சி உணவு விஷயத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்தார் புத்தர்.


அவை:

எந்த ஒரு விலங்கும் கொல்லப்படுவதை தாங்கள் நேரில் பார்த்தாலோ, அல்லது அவர்களது உணவுக்காக கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டாலோ அத்தகைய விலங்கின் இறைச்சியை அவர்கள் உண்ணக்கூடாது என்று தடை விதித்தார் .


ஆனால்,

எந்த விலங்கு கொல்லப்படுவதை பிட்சுக்கள் நேரில் பார்க்கவில்லையா,

எந்த விலங்கு தங்களின் பொருட்டு கொல்லப்பட்டதாக கேள்விப்படவில்லையோ,

எந்த விலங்கு தனக்காக கொல்லப்படவில்லையென்று ஐயமின்றி நம்புகிறார்களோ அவற்றை பிட்சுக்கள் உண்ணலாம் என்று அனுமதித்தார். 


இதில் கவனிக்கப்படவேண்டிய விஷையம் என்னவென்றால். இறைச்சி மனிதன் உண்ணக்கூடிய உணவு வகையில் ஒன்று என்று புத்தர் கருத்தியிருப்பதுதான். 


ஆனால், இன்று தங்களை மரக்கறி உணவாளர் (vegan) என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட இறைச்சி உணவு மனிதன் உண்ணக்கூடிய உணவல்ல எனும் முடிவிற்கு சென்றுவிடுகிறார்கள். அதாவது மனிதனின் உடலமைப்பு இயற்கையாகவே மரக்கறி உண்ணக்கூடியது  என்றும் இன்னும் சிலர் விலங்கை கொன்று சாப்பிட்டால் விலங்கு குணம் வளரும் என்பனபோன்றெல்லாம் வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 


மனிதக்குரங்கிலிருந்து / தாவர இனத்திலிருந்து விலகி விலங்குகளைவிட மேல்நிலைக்கு மனிதன் உயர்வதற்கு காரணமாக இருந்ததில் முக்கியப்பங்கு வகிப்பது இறைச்சி உணவே என்றும் இறைச்சி உணவு இல்லாமல் மனிதன் உருவாகியிருக்கமுடியாது என்றும் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்  "மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்" எனும் தனது நூலில் கூறியிருப்பதை மறுக்கமுடியாது. 


புத்தர் தன்னை ஒரு புனிதனைப்போல் காட்டிக்கொள்ளாமல். எதார்த்தவாதியாக ,பகுத்தறிவாளாராகவே இருந்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.


இறைச்சி சாப்பிடுவதால் நீ தீட்டுப்படமாட்டாய், அது உடலுக்கு தீங்கானதும் அல்ல ஆனால் தேவையின்றியோ இறைவனின் பெயரிலோ பலியிடாதே. அவற்றின்மேலும் உன் கருணை இருக்கட்டும். நீயே உனக்கு ஒளியாயிருந்து தம்மத்தை கடைபிடி பின் எந்த உயிர்க்கும் ஊறுவிளைவிக்க தோன்றாது என்று கனிவுடன் - பகுத்தறிவுடன் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.


- தீயவன்


References:

1. நீலகேசி

2. புத்தரும் அவரது தம்மமும்

3. தீண்டப்படாதவர்கள் யார்

4. மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம் 



No comments:

Post a Comment