Breaking

Tuesday, August 10, 2021

விபாசனா தியானம் - எளிய விளக்கம்

Image Credit: Nicolas Häns

விபஸ்ஸனா எனும் உள்ளுர நோக்கும் தியானத்தை  கற்பனை உரையாடல்மூலம் எளிமையாக புரியும்படி விளக்க முயற்சித்துளேன்:


தீயவன் : தியான சாதகரே, தியானம் என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் எந்த அசைவுமின்றி உட்கார்ந்து அப்படி என்னதான் செய்கிறீர்கள்.. வெளியே நடப்பவைகளை மறந்து ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றுவிடுவீர்களா? அல்லது Inception படத்தில் வருவதுபோன்று கனவுலகிற்கு சென்றுவிடுகிறீர்களா?. 


தியான சாதகன் : இல்லை, நான் உறங்கிக்கொண்டிருப்பதில்லை, முழு விழிப்புணர்வுடன் இருப்பேன் அதேபோல் கற்பனையான கனவுலகிற்கும் செல்வதில்லை.. கற்பனை கனவுகளை உருவாக்கிக்கொண்டிருப்பது தியானமே இல்லை.


தீயவன் : அப்படியென்றால் என்னதான் செய்துகொண்டிருப்பீர்கள்?


தியான சாதகன் : தலைமுதல் பாதம்வரையும், பாதத்திலிருந்து தலைவரையும் - என் முழு உடலில் ஏற்படும் உணர்ச்சிகளை  வெறுமனே விருப்பு, வெறுப்பின்றி கவனித்துக்கொண்டிருப்பேன்; இருக்கிறேன்.


தீயவன் : ஹாஹாஹா.. இதைத்தான் மணிக்கணக்கில் தியானம் என்று செய்துகொண்டிருக்கிறீர்களா! என்ன ஒரு வேடிக்கை. இதைவிட நாம் வாழ்க்கையில் செய்வதற்க்கு பல முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. சோம்பேறிகள்தான் இப்படி நேரத்தை கழிப்பார்கள்.


தியான சாதகன் : சோம்பேறியாய் இருந்திருந்தால் இந்த தியானத்தை நான் ஆரம்பத்திலேயே நிறுத்தியிருப்பேன். மேலும் இதைவிட செய்வதற்கு முக்கிய விஷயங்கள் எதுவும் இருக்கமுடியாது. இதுவே அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது.


தீயவன் : ஓ, அப்படியென்ன முக்கியத்துவம் இதில் உள்ளது.


தியான சாதகன் : மெய்யறிவை வளர்க்கிறது - உண்மையை உண்மையாக பார்க்கும் பக்குவத்தை கொடுக்கிறது. மேலும் துன்பம், ஆசை, பற்று, அறியாமை, வஞ்சம், துரோகம், ஆணவம், அகங்காரம் போன்ற கட்டுகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது.நம்மை மேலும் விழிப்புள்ளவர்களாக மாற்றுகிறது. விழிப்புணர்வுள்ள ஒருவனின் செயல்கள் விழிப்பற்றவனின் செயல்களைக்காட்டிலும் சரியானதாகவும், முக்கியமானதாகவும் இருக்கும்.    


தீயவன் : என்ன ஐயா, நான் கேனை என்றே முடிவுசெய்துவிடீர்களா! உடலின் உணர்ச்சிகளை கவனிப்பதால் மட்டும் எப்படி அது சாத்தியமாகும்? 


தியான சாதகன் : சாத்தியம்தான். ஏனென்றால், நம் அணைத்து இன்ப துன்ப செயல்களுக்கும் மூலவேராக இருப்பது; உடலாலும் மனதாலும் உண்டான உணர்ச்சிகள் தான். அந்த உணர்ச்சிக்கு நாம் ஊற்றும் நீர்தான் நம்மை துன்பத்திலிருந்து, அறியாமையிலிருந்து விடுபடாமல் செய்து மேலும் மேலும் துன்பமெனும் மரத்தை வளர்த்துவிடுகிறது.


மனிதன் உணர்ச்சிவயப்பட்டவன். இந்த உணர்ச்சிகளே அவனது மன செயல்கள் மட்டுமின்றி வெளிப்புற செயல்களையும் தீர்மானிக்கிறது. எனவே இந்த உணர்ச்சிகளைப்பற்றி முதலில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.


தீயவன் : சரி சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறேன்.


தியான சாதகன் : இந்த உடல், ஐம்புலன்கள் மூலமாக உணர்ச்சிகளை தோற்றுவிக்கிறது. ஐம்புலனில் ஒன்றான கண்கள் மூலமாக பார்க்கும் காட்சிகள் இனிமையானதாக இருந்தால் விருப்பமான உணர்ச்சிகளையும். வெறுக்கத்தக்க காட்சிகளாக இருந்தால் வெறுப்பான உணர்ச்சிகளையும் தோற்றுவிக்கின்றது. இதுபோலவே மற்ற புலன்கள் மூலமாகவும் விருப்பு, வெறுப்பு என்ற உணர்ச்சிகள் தோன்றுகின்றன அல்லது அதை விருப்பு வெறுப்பு என்று வகைப்படுத்தி ஒன்றை விரும்புவதும் மற்றொன்றை வெறுக்கவும் செய்கிறோம்.


மேலும், உடலால் மட்டுமின்றி மனதாலும் உணர்ச்சிகள் தோன்றுகின்றது. சிந்தனை, எண்ணம், ஆசை, அச்சம், கற்பனை..etc ஆகியவை மனதுடன் தொடர்புகொண்டு உணர்ச்சிகளை தோன்ற செய்கிறது. எனவே உடலால் தோன்றும் உணர்ச்சிகளும் மனத்தால் தோன்றும் உணர்ச்சிகளும் வெவ்வேறானவையல்ல. ஒவ்வொன்றும் மற்றொன்றில் பிரதிபலிக்கிறது.


தீயவன் : இந்த உணர்ச்சிகள் நம்மை துன்பத்திற்கு இட்டுச்செல்கிறது என்று எப்படி சொல்கிறீர்? 


தியான சாதகன் : உணர்ச்சிகள் துன்பத்தை கொடுப்பதில்லை. உடலாலும், மனதாலும் உணர்ச்சி உண்டாகிறது. இந்த உணர்ச்சி விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை தோற்றுவிக்கிறது. இந்த விருப்பு, வெறுப்பான உணர்ச்சிகளுக்கு நாம் ஆற்றும் வினையே நம்மை துன்பத்திற்கு இட்டுச்செல்கிறது.  

எப்படியென்றால், உணர்ச்சிகள் நிலையற்றவை அவை கணந்தோறும் தோன்றி மறைந்துகொண்டே இருக்கும். அதில், துன்பம் தரக்கூடிய உணர்ச்சியோ அல்லது இன்பமான உணர்ச்சியோ தோன்றும்போது அதன்மீது நாம் எதிர்வினை ஆற்றுவதால் அது  தூண்டப்பட்டு வலுவானதாகவும் மனதை ஆக்கிரமித்து நம்மை கட்டுப்படுத்துபவையாகவும் தீவிரமடைகிறது. அது நாளடைவில் சங்கலித்தொடராக தீவிரமடைந்து துன்பத்தை கொடுக்கிறது. 


தீயவன் : ஆனால், உடல் உணர்ச்சிகளை கவனிப்பதால் எப்படி அதிலிருந்து விடுதலை கிடைக்கும்?


தியான சாதகன் : துன்பமெனும் (ஆசை, பற்று, அறியாமை,ஆணவம்) மரத்தை நீக்கவேண்டி அம்மரத்தை வெட்டினாலும் அது மீண்டும் துளிர்விடும். அம்மரம் வளர காரணமாக இருக்கும் வேரை கண்டறிந்து அதை பிடுங்குவதுதான் சரியான முறை. அதற்காக நம்முடைய அணைத்து இன்ப துன்பங்களுக்கு காரணமாக இருக்கும் இந்த  உணர்ச்சிகளை பிடுங்கவோ, கட்டுப்படுத்தவோ போவதில்லை. ஏனெனில் நமக்கு உணர்ச்சிகள் தோன்றுவது ஒரு இயற்கையான நிகழ்வு.  எனவே, உணர்ச்சிகளுக்கு எதிர்வினையாற்றாமல் வெறுமனே விருப்பு, வெறுப்பின்றி கவனிப்பதால் பற்றற்ற தன்மை வளர்கிறது. மேலும் நம் உணர்ச்சிகள், எண்ணங்கள் அனைத்தும் நிலையற்றவை, மாறிக்கொண்டே இருப்பவை எனும் நிலையாமையை அனுபவித்து உணரமுடிகிறது.


தீயவன் : பற்றற்ற தன்மை வளர்வதால் மட்டும் துன்பம் வராமல் இருக்குமா அல்லது வந்தாலும் நமக்கு துன்பத்தை தராதா?

 

தியான சாதகன் : பற்றற்று இருப்பதால் துன்பமான உணர்வு தோன்றாமல் இருக்காது, தோன்றினாலும் அது துன்பத்தை தாராது. துன்பமான உணர்வு தோன்றும்போது அது தோன்றுகிறது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு அதன்மீது வெறுப்பின்றி முழு விழிப்புணர்வுடன் இருப்பதால் அது தோன்றி மறைவதை காணலாம். துன்பமான உணர்வுமட்டுமல்ல இன்பமான உணர்வு தோன்றினாலும் அதே பற்றற்றதன்மையில் இருப்போமேயானால் நாம் இந்த வினைகளிலிருந்து விடுபடுவோம். 


இந்த தியானப்பயிற்சியை செய்வதால் உணர்ச்சிகளின், மனதின்,  ஐம்புலன்களின் அடிமையாக இல்லாமல் இருக்கும் ஆற்றல் நமக்குள் வளரும். நீங்கள் நடக்கும்போதும், அமரும்போதும், உறங்கும்போதும், எந்த செயல்களை செய்துகொண்டிருக்கும்போதும் முழு விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.


தீயவன் : ஏதோ, புரிந்தும் புரியாததும்போல இருக்கிறது. இன்னும் சில கேள்விகளையும் தூண்டுகிறது. இப்பொது நீண்டநேரமாகிவிட்டதால் நான் சென்றாகவேண்டும். உங்களை மீண்டும் சந்திக்கும்போது அவற்றை கேட்கிறேன்.


தியான சாதகன் : நிச்சயமாக எப்போதுவேண்டுமானாலும் வந்து கேளுங்கள், உங்களது சந்தேகங்களையோ அல்லது மாற்றுக்கருத்தையோ comment செய்யுங்கள் நான் பதிலளிக்கிறேன்.


- தீயவன்


Reference: 

வாழ்க்கை கலை - விபாசனா தியானம் As Taught by S.N. Goenka

No comments:

Post a Comment