பெரியார் சொல்வதுபோல; ஒரு மதத்தை எடுத்துக்கொண்டால் அது அதற்க்கு முன்பிருந்த மதத்தை அல்லது சிந்தனைப்போக்கைவிட முன்னேறியதாக - சீர்திருத்தம் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு மதமும் அதற்க்கு முன்பு இருந்த மதத்திற்கோ அல்லது அன்று நிலவிய சிந்தனை சூழலுக்கோ எதிராக சில சீர்திருத்தங்களோடோ அல்லது புதிய சிந்தனைகளோடு தோற்றம்பெற்றவையாக இருப்பதை எல்லா மதங்களும் தோன்றிய வரலாற்றை அறிவதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு புதியமதமும் ஒரு Updated Version போன்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அது பழமையாகிவிடும். மீண்டும் இன்னொன்று. இப்படி ஒவ்வொரு காலத்திலும் மதங்கள் தோன்றியும் அழிந்தும் வந்திருக்கிறது. அந்த வரிசையில் வள்ளலாரியம் (சமரச சுத்த சன்மார்க்க சங்கம்) மிக சமீபத்தில் வந்த இன்னொரு version
எனவே மற்ற பழைய மதங்களைவிட இது மேம்பட்ட சீர்திருத்தம் அடைந்தவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை (சமீபத்தில் தோன்றிய எல்லா மதங்களும் மேம்பட்டதுதான் என்று சொல்லிவிடமுடியாது. அப்படி தோன்றிய சில மதங்கள் மிக பிற்போக்கானதாகக்கூட இருக்கிறது).
கிறிஸ்துவமோ, பௌத்தமோ, தாவோயிசமோ இன்னும் சில... அது தோன்றியபோது மதமாக அவை பார்க்கப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் ஒரு தனி மதமாகவே ஆகிவிட்டது. அதுபோலவே வள்ளலாரியம் ஒரு மதம் இல்லை என்று சொல்லிக்கொண்டாலும் கிறிஸ்துவம், பௌத்தம், தாவோயிசம் போல மதமாவதற்கான கூறுகளை பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக எதிர்காலத்தில் இது பெரிய மதமாக வளரப்போகிறது என்று சொல்லவில்லை. (எதிர்காலத்தில் மதங்களுக்கான வேலையே இருக்கப்போவதில்லை - மதங்கள் இருக்கப்போவதில்லை - என்பதே உண்மை).
வள்ளலாரின் சில சிந்தனைகள் இன்றைய காலத்திற்கு தேவைப்படுவதாகவே தோன்றுகிறது. பிராமணீயத்தால் மழுங்கடிக்கப்பட்ட பாமர இந்துக்களின் சிந்தனையை மேலும் நஞ்சேற்றப்படாமல் இருக்க வழிசெய்யவும். அவர்களை மனிதத்தன்மைக்கு மீட்டுவரவும், ஏற்றத்தாழ்வுகளை கலைக்கவும் உதவக்கூடியதாக இருக்கும். ஆனால் முழுமையாக செய்துவிடும் என்று சொல்லிவிடமுடியாது.
இத்தனை காலமாக உள்ள இந்துமதமானது (இந்துமதம் என்று சொல்லப்படும் மதம்) ஏற்றத்தாழ்வுகளை, தீண்டாமையை, மூடநம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டிருப்பதால் அதை பின்பற்றுபவர்களையும் மனிதமற்றவர்களாக, மூடர்களாக வைத்திருக்கிறது. அவற்றையெல்லாம் வள்ளலாரின் சிந்தனைகள் நொறுக்குபவையாக இருக்கிறது என்பதால் இது கடவுளை விடமுடியாத இந்துக்களால் ஏற்கக்கூடிய சிறந்த சீர்திருத்தமடைந்த மாற்று மதமாக - மார்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பசியோடு யாரும் வாடக்கூடாது என்று "சத்திய தருமசாலை" ஏற்படுத்தி பசியோடிருப்பவர்களுக்கு இலவசமாக உணவளிப்பது; சாதி, மதம், இனம், மொழி என்ற கற்பிதங்களை கலைவது, எந்த உயிர்க்கும் துன்பம் ஏற்படுத்தக்கூடாது - கொல்ல கூடாது போன்ற நெறிகளை கொண்டிருக்கிறது. இவைகளை நேர்மையாக பின்பற்றினாலே மனிதர்களுக்குள் பிரிவினை, வெறுப்பு ஆகியவை மறையும். மதவெறி, இனவெறி, மொழிவெறி தூண்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவற்றிற்கு பலியாகாமலிருக்க இதுபோன்ற கொள்கைகளுடைய மார்க்கம் சமுதாயத்திற்கு நன்மையுடையதாகவே இருக்கும் .
கடவுள் எனும் கருத்தை விடமுடியாத ஆத்திகர்களுக்கு குறிப்பாக பிராமணிய நஞ்சேற்றப்பட்ட Socalled இந்துமதத்தை பின்பற்றுபவர்களுக்கு இது ஒரு மாற்றாக/நல்வழிப்படுத்தக்கூடிய மார்கமாக அமையும். இந்துமதத்தைவிட இது மேம்பட்டது என்றாலும் இதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது.
மதம், கடவுள் போன்ற கருத்துக்கள் எல்லாம் மறைந்துபோகும் காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். அக்காலத்தில் எல்லோரும் உண்மையை உணர்ந்தவர்களாக மதம், கடவுள், ஆன்மா, சொர்கம், நரகம், மறுமை போன்ற கற்பனைகளிலிருந்து விடுபட்டு ஏற்றத்தாழ்வுகள் இன்றி ஒன்றுபட்டு வாழ்வோம். அக்காலத்தை நெருங்க நெருங்க நாம் பற்றிக்கொண்டுள்ள கடவுள், மத நம்பிக்கைகள் சிறுக சிறுகத்தான் நம்மைவிட்டு உதிர்ந்து விழும். பெரும்பாலான மனிதர்கள் (நாத்திகர்களை தவிர) தங்களின் மத நெறிகளை முழுமையாக கடைபிடிக்க முடியாவிட்டாலும் - தங்கள் மத கருத்தை முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் இருந்தாலும் அவர்களால் அவற்றை முற்று முழுவதுமாக விட்டுவிட முடிவதில்லை என்பதே மனிதர்களுக்கு எதோ ஒருவகை ஊன்றுகோல் இன்னமும் தேவைப்படுகிறது என்பதை காட்டுகிறது. எனவே அவர்களுக்கு இதுபோன்ற சீர்திருத்தப்பட்ட மார்க்கம் ஒரு நல்ல ஊன்றுகோலாக இருக்கக்கூடும். இதன்மூலம் அவர்களிடம் ஓடிக்கொண்டிருக்கும் சில கருத்துக்களும் காலப்போக்கில் உதிர்ந்துபோக வாய்ப்புள்ளது.
அதேசமயம், இன்னொரு வாய்ப்பும் உள்ளது. கடந்த காலத்தில் நடந்ததுபோல், இன்றும் நடந்துகொண்டிருப்பதுபோல வள்ளலாருக்கு காவிசாயம் பூசும் வேலை. புத்த மத கருத்துக்களை திரித்து புத்தரையே அவதாரமாக சித்தரித்ததுபோல. வள்ளலாரையும் நேரடியாக எதிர்கொள்ளாமல் அவரின் முற்கால கருத்துக்களை வைத்து அவரை விழுங்கிட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
வள்ளலார் பிறந்ததினம் இன்று. சமூக வலைத்தளத்தில் சில முற்போக்கு சிந்தனைகொண்டவர்களால் அவர் நினைவுகூரப்படுகிறார். பொதுவாக இந்துக்கள் என்று அழைக்கப்படும் பாமர மக்களை தங்கள் அரசியல் லாபத்திற்காக மதத்தின் பெயரால் மதத்திலுள்ள தீங்கான சில சிந்தனைகளை பரப்பி தங்களின்பக்கம் ஈர்க்க பல வேலைகள் நடைபெற்றுவரும் இக்காலத்தில். வள்ளலாரை நினைவுகூருவது - அவரின் சிந்தனைகள் என்ன, அவர் எதற்கு எதிரானவர் என்று இந்துக்களிடையே விழிப்பேற்படுத்துவது - தவறில்லை என்றே தோன்றுகிறது.
- தீயவன்
No comments:
Post a Comment