வள்ளலார் பற்றி நம் அனைவருக்கும் ஓரளவாவது தெரிந்திருக்கும். “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்னும் புகழ்பெற்ற வரியின்மூலம் அவரின் ஜீவகாருண்ய நெறியை சிலர் மெய்சிலிர்த்து புகழ்வதை அறிந்திருப்போம். சாதி, உருவ வழிபாடு போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்தார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். இவரின் பிற்கால கருத்துக்கள் வைதீக மதத்திற்கு எதிராக இருந்ததால் அந் நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தலைவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார்.
ஓர் ஆன்மீகவாதியாக இருந்து சாதி, உருவ வழிபாடு, கடவுள், சமயம் போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்ததாலேயே தந்தை பெரியார் இவரின்பால் நன்மதிப்பு கொண்டிருந்தார். வள்ளலார் எழுதிய ஆறாம் திருமுறையிலிருந்து நூறு பாடல்களை திரட்டி தனது குடியரசு இதழில் வெளியிட்டார். இப்படி வள்ளலார் ஓர் ஆன்மீக சீர்திருத்தவாதியாகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராகவும் பார்க்கப்படுகிறார். வள்ளலார்/வள்ளலாரியம் உண்மையிலேயே மூடநம்பிக்கைகளுக்கு எதிரானதுதானா? அது எதை போதிக்கிறது? அதன் நோக்கம் என்ன? என்பனவற்றை சுருக்கமாக பார்ப்போம்.
வள்ளலாரியம்:
- கடவுள்கள், வேதங்கள், மதங்கள் எல்லாம் கற்பனையே.
- சைவம்,வைணவம் சொல்லும் கடவுள் என்பது அக்கால ஞானிகள் தவத்தினால் அடைந்த அனுபவம் மட்டுமே. உடலில் நிகழும் அனுபவங்களே பிற்காலங்களில் உருவம்கொடுக்கப்பட்டு பின் கடவுள்களாக்கப்பட்டது.
- அருட்பெரும்ஜோதி என்பதும் ஒரு அனுபவமே.
இவ்வாறு தவத்தினால் ஏற்படும் அனுபவத்தையே இறைவனாக பாவிக்கிறது வள்ளலாரியம். அதுவே உள் ஒளி அதைத்தவிர வேறு கடவுள் இல்லை. கடவுளுக்கு உருவமும் இல்லை என்கிறது.
- இறந்த பின் சொர்கம், நரகம் செல்வதென்பது பொய்.
- உலகில் உள்ள அனைவரும் தான் செய்த நல்வினை, தீவினைக்கேற்ப பிறவி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். இறந்த ஒவ்வொருவரும் மறுபிறப்பு எடுத்தே தீருவார்கள்.
- பிறக்காமல் இருக்க இறக்காமல் இருக்கவேண்டும்.
இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் பலகாலமாக நாம் பல பிறவிகள் (மனிதனாக,விலங்காக,பறவையாக,மரமாக, செடியாக) எடுத்துவந்துள்ளோம் இனியும் எடுப்போம். அப்படி அந்த பிறவி சூழலிலிருந்து விடுபடவேண்டும் என்றால் நாம் சாகா நிலையை அடையவேண்டும். அதாவது உடலைவிட்டு உயிர் தனியாக பிரியவிடாமல், என்றைக்கும் வயதாகாமல் நித்திய உடலோடு இருக்கும் நிலையை அடையவேண்டும் என்கிறது வள்ளலாரியம். அதற்கான சில வழிமுறைகளையும் வகுத்துவைத்துள்ளது (உணவுமுறை,தூக்கம்,தவம், ஜீவகாருண்யம்) அவற்றை பின்பற்றி அந்நிலையை அடையமுடியும் என்கிறது.
ஞானமா? அஞ்ஞானமா? :
சாதி, உருவ வழிபடு, கடவுள், சமயம், உயிர் பலி போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து. ஆண்-பெண் சமத்துவம், அணைத்து உயிர்களிடத்தும் கருணை ஆகியவற்றை போற்றும் அதே வேளையில் மறுபிறப்பு, ஊழ்வினை, மரணமில்லா பெருவாழ்வு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இயங்குவது என்பது ஒரு மூடநம்பிக்கையை கைவிட்டு விட்டு இன்னொரு மூடநம்பிக்கையை பற்றிக்கொள்வதாக உள்ளது.
ஒருவன் முன்ஜென்மத்தில் செய்த வினையின் பயனாக இப்பிறவியில் செல்வந்தனாகவோ, ஏழையாகவோ, விலங்காகவோ, பறவையாகவோ, புல்லாகவோ, மரமாகவோ பிறப்பான் என்பது ஞானமா?
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் பலகாலமாக பல பிறவிகள் எடுத்துகொண்டேவருகிறது என்றால் புது உயிர்கள் பிறப்பதில்லை என்றுதானே அர்த்தம். இருப்பதெல்லாம் என்றோ ஓர்நாள் வாழ்ந்து இறந்தவை என்பதாகுமே. இதற்க்கு என்ன ஆதாரம்? (பொருட்களுக்கு அழிவில்லை - அவை உருமாறும் என்பது உண்மை ஆனால் வினைபயன் படி அவை பிறவி எடுக்கிறது என்பது - நன்மை தீமை செயல்களை காலம் காலமாக சேகரித்து வைத்திருக்கிறது - கற்பனையல்லாமல் வேறென்ன)
உடலைவிட்டு உயிர் பிரிவதை மரணம் என்போம். உடல் என்பது ஒரு பொருள். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் இயங்கிக்கொண்டேதான் இருக்கும், மாறிக்கொண்டேதான் இருக்கும் - குழந்தை பருவம் முதல் முதுமை வரையான மாற்றம் நிகழ்ந்தே தீரும். பிறந்த முதலேயே நாம் மரணத்தை நோக்கி நடைபோட ஆரம்பித்துவிடுகிறோம். ஒவ்வொரு வினாடியும் நம்மை மரணத்தின் அருகில் இழுத்துச்செல்கிறது. இது நமக்கு மட்டுமல்ல பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும். பிறப்பைபோல இறப்பும் ஒரு இயற்கைவிதி அதை யாராலும் தடுத்துநிறுத்தமுடியாது. அப்படியிருக்கும்போது மனிதனால் சாகாநிலை அடையமுடியும் என்பது மூடநம்பிக்கையாகவே கருதப்படும். என்றைக்கும் வயதாகாமல் இந்த உடலை அப்படியே வைத்திருக்க முடியும் என்று நம்புவதுதான் ஞானமா? இப்படி சொல்வதால் என்னை நீங்கள் அவநம்பிக்கையாளன் என்று சொல்லலாம். என் அவநம்பிக்கையை போக்க நீங்கள் ஏன் உங்கள் வள்ளலாரிய நெறியை பின்பற்றி மரணமில்லா பெருவாழ்வை அடைந்து காண்பிக்கக் கூடாது!
ஏன் சாத்தியமில்லை:
வள்ளலார் வகுத்துவைத்திருக்கும் உணவுமுறைகளையோ, தவ முறைகளையோ பின்பற்றி சாகா நிலையை அடைய முடியாது. வேண்டுமானால் சிறிதுகாலம் கூடுதலாக வாழலாம் அவ்வளவுதான். அதுகூட சந்தேகமே. அதிலும், நாம் தூங்கும் பழக்கத்தை குறைத்து ஒருநாளைக்கு ஒருமணிநேரம் மட்டுமே தூங்க பழகினால் ஆயிரம் ஆண்டுகள் வரை வாழமுடியும் என்று வள்ளலாரியம் சொல்வதெல்லாம் வேற லெவல்.
பிரபஞ்சம் என்பது நேரம், வெளி, பருப்பொருட்களால் ஆனது. அதன் விதிப்படி நேரம் இருக்கும்வரை ஒன்றின் இயக்கத்தையோ அல்லது அதன் முடிவையோ தடுத்து நிறுத்த முடியாது. அப்படி தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் நேரத்தைதான் நிறுத்தவேண்டும் (நேரத்தை நிறுத்தினால் அங்கே எந்த இயக்கமும் இருக்காது) அல்லது நேரம்/வெளி இல்லாத இடத்தில் கொண்டுபோய் வைக்கவேண்டும்.
பருப்பொருள் இல்லாமல் நேரமும், வெளியும் இருக்கமுடியும் ஆனால் நேரமும், வெளியும் இல்லாமல் அங்கே பருப்பொருள் இருக்காது. எனவே அதுவும் சாத்தியமில்லாதது.
ஆனால் விஞ்ஞான சித்துவேலைகள் சில செய்யமுடியும்
Space Time இல் இருக்கும் பருப்பொருள் தன் நிறைக்கு (mass) ஏற்ப அதன் நேரம் மாறுபடும் (குறைவாகவோ/வேகமாகவோ). அதிக நிறைகொண்ட கிரகத்தில்(பருப்பொருள்) நேரம் மெதுவாகவும், குறைவான நிறைகொண்ட கிரகத்தில் நேரம் வேகமாகவும் இருக்கும். உதாரணத்திற்கு blackhole என்பது ஒரு இறந்த நட்சத்திரம். நூறுகோடி சூரியனின் நிறைகொண்ட ஒரு பெரிய கருந்துளை இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன் அருகில் செல்ல செல்ல நேரம் குறைந்துகொண்டே போகும். அதன் மையத்தை அடையும்போது நேரம் என்பது பூஜ்யமாகிவிடும் அதாவது நேரம் என்ற ஒன்றே இருக்காது நின்றுவிடும். அதனுள் சென்று அங்கிருந்து ஒளியை பாய்ச்சினால்கூட அது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த ஒளி தெரியாது. ளிஒளி வெயே செல்லாது. அந்த அளவு ஈர்ப்பை கொண்டிருக்கிறது (காலம், வெளி வளைக்காப்பாற்றிருக்கிறது). மனிதனால் அங்கே செல்லமுடியாது அதன் மையத்தை அடையும்போது அவன் நொறுங்கி காணாமல் அழிந்துபோய்விடுவான்.
ஆனால் அதன் ஈர்ப்பில் மாட்டிக்கொள்ளாமல் குறிப்பிட்ட தூரத்தில் அதன் அருகில் சிலமணிநேரம் இருந்துவிட்டோ அல்லது அங்கே ஏதாவது ஒரு கிரகம் இருக்கும்பட்சத்தில் அங்கே சில மணிநேரம் மட்டும் சுற்றிபார்த்துவிட்டோ பூமிக்கு வந்தால் பூமியில் பலவருடங்கள் ஓடியிருக்கும். ஆனால் உங்களுக்கோ சிலமணிநேரம் மட்டுமே ஆகியிருக்கும். நீங்கள் கிளம்பும் முன் உங்கள் பக்கத்துவீட்டில் இருந்த 10 வயது சிறுவன் நீங்கள் திரும்பி வரும்போது 70,80 வயது கிழவனாக ஆகியிருப்பான் interstellar படத்தில் வருவதைப்போன்று.
அனைவரும் ஆச்சர்யபடுவார்கள். பல ஆண்டுகளாக நீ வயதாகாமலேயே இருந்திருக்கிறாய், சாகாவரம் பெற்றுவிட்டாயோ என்று கூட நினைப்பார்கள். இது ஏன் என்றால் அதிக நிறையுள்ள பொருளால் space Time வளைவதால் (curve) அதன் வளைவிற்கு ஏற்ப நேரம் குறையும். இது ஒருவகை சித்துவிளையாட்டுதான்.
இதேபோல் wormhole மூலமாகவும், ஒளியின் வேகத்தில் பயணிப்பதன் மூலமாகவும்கூட பல சித்துவேலைகளை செய்யமுடியும். என்னதான் சித்துவேலைகள் செய்தாலும் பிரபஞ்சவிதிப்படி நேரம் ஓடிக்கொண்டேதான் இருக்கும். மரணம் நெருங்கிக்கொண்டேதான் இருக்கும். அதை யாராலும் தடுக்கமுடியாது. மரணமில்லா பெருவாழ்வு எனும் பேராசைக்கு பிரபஞ்சவிதி இடம்கொடுக்கவில்லை.
எனவே வள்ளலாரியத்தை மேலோட்டமான சாதி எதிர்ப்பு, ஜீவகாருண்யம், சமரச சுத்த சன்மார்க்கம், கடவுள் மறுப்பு என்பனவற்றை தாண்டி அதன் அடிப்படை கோட்ப்பாடுகளை, நோக்கங்களை ஆராய்ந்து ஞானமா, அஞ்ஞானமா என்பதை ஒருவர் உணரவேண்டும்.
- தீயவன்
No comments:
Post a Comment