நான்கு சுவற்றிற்குள் எண்ண அலைகளில் அலைமோதிக்கொண்டிருக்கும் நான் சிறிதுநேரம் வெளியே செல்ல முடிவெடுத்து கடற்கரைக்கு சென்று சூரியன் மறையும் காட்சியையும், ஓயாமல் கரைமோதும் அலை கடல் என் எண்ண அலை நீளத்தை குறைக்கும் இனிமையையும் மௌனத்தில் ஆழ்ந்து ரசித்திருந்த வேளையில் அருகாமையில் சில இளைஞர்கள் வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.
ஒருவன் சொன்னான் "நா வாழ்க்கையில ஏதாச்சும் சாதிக்கனும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம்'னு இருக்கக்கூடாது".
"அமன்டா மச்சான், ஏதாவது சாதனை செய்றதுதான் வாழ்கை". என்றான் இன்னொருவன்.
மற்றொருவன் சொன்னான்; "என்ன பொறுத்தவரை யாருக்காகவும், எதுக்காகவும் கவலைப்படாம நமக்கு புடிச்சமாரி வாழனும் அதுதான் வாழ்க்க".
"சூப்பரா சொன்ன மச்சான், சாதனைய விட பணம் தான் முக்கியம். பணம் இருந்தாதான வாழவே முடியும். நிறைய பணம் சேத்து காரு, பெரிய வீடு'னு மத்தவன் பொறாமைப்படுற மாறி வாழனும். அதுதான் சாதனை, அதுதான் வாழ்க்கை" என்றான் மற்றொருவன்.
அடுத்து இன்னொருவன் சொன்னான் "நாமமட்டும் சந்தோசமா வாழுறது வாழ்க்க இல்ல மச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்தனும் வறுமைல இருக்கவங்களுக்கு உதவனும்... சரக்கு, பொண்ணு, பொருளுனு மட்டுமே அலஞ்சிட்டிருக்காம நல்லதும் செய்யணும் அதுதான் நம்ம வாழ்க்கையோட நோக்கம். இல்லனா மண்ணாதான் போவோம்".
"போடா... நல்லது மட்டுமே செஞ்சாலும் மண்ணுதான், கெட்டது செஞ்சாலும் மண்ணுதான். கெடச்ச இந்த ஒரு வாழ்க்கைய அனுபவிக்கிறதுதான் புத்திசாலித்தனம். எப்பெப்போ என்னென்ன ஆச வருதோ அத அத அப்பப்போ அனுபவிச்சிடனும். இந்த பாவம், புண்ணியம், புண்ணாக்கு இதெல்லாம் ஒன்னுமில்ல". என்றான் வேறொருவன்.
இப்படியாக இவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
வாழ்க்கையைப்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை வைத்துள்ளார்கள். அவைகள் பொதுவான கருத்துக்களாக இருந்தாலும் பொதுவிதியாக இல்லாமலிருப்பதுதான் விதியாகவும் உள்ளது. ஒவ்வொரு சூழலில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டான வாழ்க்கையைப்பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு காலத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு யுகத்திற்கும் வேறுபட்டும்/மாறுபட்டும் வருகிறது.
வாழ்க்கைப்பற்றிய இவர்களின் புரிதல்களும், சிந்தனைகளும் காலத்தோடு சேர்ந்தே மறைந்துபோகும் எதிர்காலத்தை போல. வளர, வளர கழற்றியெறியப்பட்ட பாம்பின் சட்டையைப்போல வாழக்கை பற்றிய இந்த மனிதர்களின் சிந்தனைகள் இக்கடற்கரை மணலைப்போல எண்ணமுடியா அளவில் குவிந்து கிடக்கிறது. நாமும் அதன்மேல்தான் நடந்துகொண்டிருக்கிறோம்.
வாழ்வை பற்றி எந்த முன் யோசனையும் இன்றி இங்கே வந்த என்மீதும் அவை ஒட்டிக்கொண்டுவிட்டது. இங்கிருந்து கிளம்பும்முன் என்மீதுள்ள இத்துகள்களை இக்கடலில் கழுவவேண்டும். நேரமாகிவிட்டது, காலையில் உதித்த சூரியன் கடலுக்குள் கரைந்து இரவை பொழியச்செய்வதால் நானும் என் எண்ணங்களை/சிந்தனைகளை கரைத்து இருளின் மடியில் இளைப்பாறப்போகிறேன்.
பி.கு: உண்மைச்சம்பவமல்ல கற்பனையாக எழுதப்பட்டது
No comments:
Post a Comment