தங்களை கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்ட்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தலித்தியத்தின் மீது ஒரு ஒவ்வாமையை-வெறுப்பை கொண்டிருக்கிறார்கள்.
தலித்தியம் என்பது அடையாள அரசியல். அடையாள அரசியல் என்பது பின்நவீனத்துவக் கட்டமைப்பு. பின்நவீனத்துவம் என்பது முதலாளித்துவத்த்துவதால் உருவாக்கப்பட்ட கருத்தியல். எனவே, தலித்தியம் நிராகரிக்கப்பட வேண்டும். சாதிப் பிரச்சனைக்கு மார்க்சியம் மட்டுமே ஒரே தீர்வு. அனைவரும் தங்களை உழைப்பாளி வர்க்கம் என்ற வர்க்க உணர்வை ஏற்படுத்திக்கொண்டு முதலாளித்துவ பொருளாதாரத்தை சோஷலிச புரட்சியின் மூலம் தகர்த்துவிட்டால் வர்க்க வேறுபாடு மட்டுமின்றி சாதியம், ஆணாதிக்கம், உளவியல் கோளாறு என்று அணைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள். இதை காரணம் காட்டியே தலித்தியத்தை எள்ளிநகையாடுவதும் விமர்சிப்பதுமாக இருக்கிறார்கள். அவ்வபோது சாதியத்துக்கு எதிராக இவர்கள் குரல் எழுப்பினாலும் தலித்தியதை சாதி எதிர்ப்பு தலித் இயக்கங்களை இவர்கள் பிற்போக்கானதாகவே/வலதுசாரியமாகவே பார்க்கிறார்கள்.
சாதிய அமைப்பால் ஒடுக்கப்பட்டவர்கள், தங்களை 'தலித்துகள்' என்று உணர்ந்து ஒன்றிணைந்து அந்தச் சாதிய அமைப்பை வீழ்த்தி சாதியற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்காக போராடுபவர்களை அடையாள அரசியல் செய்கிறார்கள் என்று சொல்வீர்களென்றால்... இதே குறுகிய பார்வையுடன்; முதலாளித்துவ அமைப்பால் சுரண்டப்படுபவர்கள் தங்களை உழைப்பாளர் வர்க்கம் என்று உணர்ந்து ஒன்றிணைந்து அந்த முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தி வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்று சொல்பவர்களை அடையாள அரசியல் செய்கிறார்கள் என்று சொல்வது சரியாக இருக்குமா?
தர்க்கரீதியாகப் பார்த்தால் இவை இரண்டிற்கும் பெரிய வித்யாசம் இல்லையே. இரண்டுமே தங்களை ஒடுக்கும் அமைப்பை உடைக்க, அதே அமைப்பால் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை (ஒடுக்கப்பட்டவர்கள்/தலித்துகள் என்ற அடையாளத்தை தலித்தியமும் - உழைப்பாளர் வர்க்கம் என்ற அடையாளத்தை மார்க்சியமும்) ஓர் ஆயுதமாகக் கையிலெடுக்கின்றன. அப்படியிருக்க தலித்தியத்தை மட்டும் அடையாள அரசியல் என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா.
இவர்கள் தலித்தியத்தை இப்படி சொல்வதற்கு முக்கிய காரணம்; மார்க்சியத்தின் அடித்தளம் மற்றும் மேற்கட்டுமானம் (Base and Superstructure) எனும் concept தான். இதில் அடித்தளத்தை மட்டுமே முக்கியமக பார்ப்பதால் தான் இந்த பிரச்னை.
சில மார்க்சிய அறிஞர்களிடையே கூட இதைப்பற்றி சிந்திக்கத்தொடங்கி விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.. இதன் நீட்சியாக பின்நவீன மார்க்சியம் அல்லது பின்னை மார்க்சியம் (Post-Marxism) என்ற ஒன்று கூட தோன்றியுள்ளது (பரிணமித்துள்ளது). அடையாள அரசியல் என்று சொல்லப்படும் பெண்ணியம், LGBTQ போன்றவைகளும் கூட உள்ளடங்கிய பின்னை மார்க்சியம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இந்தியாவிலுள்ள இந்த மார்க்சியர்களோ இன்னும் அதே பழைய புராணத்தையே பாடிக்கொண்டு தலித் அரசியலை கொச்சைப்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் யாராவது மேற்கட்டுமானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினால் உடனே; ஹா! மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று திருத்தல்வாதம் செய்கிறார்கள் என்று கலாச்சார காவலர்களைப்போல இந்த மரபு மார்க்சியர்கள் போருக்குத் தயாராவதுபோல பாவனை செய்து தன்னை உண்மையான மார்க்சியன் என்று காட்டிக் கொள்கிறார்கள்.
தான் அணிந்துள்ள கண்ணாடியின் வழியே மட்டும் பார்த்து ஒன்றை எடைபோட்டு; அதற்க்கென்று தனியாக நியாயப்பாடுகள் இருந்தாலும் தன்னுடைய சட்டகத்துக்குள் பொருந்தாத காரணத்தால் புறந்தள்ளி நிராகரிப்பது என்பது நிச்சயம் ஆரோக்கியமான போக்காக இருக்காது. அதைத்தான் இந்த மார்க்சியர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தலித்தியத்தை அடையாள அரசியல் என்று முத்திரை குத்தி நிராகரிக்க அந்த ஆயுதத்தை ஏந்தி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த பூச்சாண்டி வித்தை காட்ட முடியும்!
- தீயவன்

No comments:
Post a Comment