தூய தமிழில் எழுதவேண்டும், படிக்கவேண்டும் என்றெல்லாம் பலரும் பலகாலமாக சொல்லிவருவதை நாம் அனைவரும் கேள்விப்பட்டதே. அவர்களிடம் எது தூய தமிழ் என்று கேட்டால் முதல் பதில் ஆங்கிலம் கலக்காமல் பேசவேண்டும் என்று தான் சொல்வார்கள். உதாரணமாக கம்ப்யூட்டர் என்பதை கணினி என்று தமிழுக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்து பயன்படுத்தவேண்டும். அவர்களை பொறுத்தவரை நாம் பேசும்போது ஆங்கிலவார்த்தைகளை கலக்காமல் அவற்றை தமிழில் மொழிபெயர்த்து பேசுவதுதான் தூயதமிழ்.
'ஒன்னு ஆங்கிலத்துல பேசு இல்லனா தமிழ்ல பேசு, ரெண்டையும் கலந்து பேசாத' என்பதுதான் இவர்கள் நமக்கு சொல்லும் அறிவுரை. ஏனென்றால் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவதால் மொழிகலப்பு ஏற்படுகிறதாம், மொழிக்கலப்பு என்பது இனஅழிப்புக்கு ஒப்பானதாம்.
நாம் தமிழ் என்று நினைத்து நாம் பயன்படுத்தும் பிறமொழி சொற்கள் எவை என்பதை கீழே காணலாம்
மராத்தி சொற்கள்:
கசாயம் பட்டாணி சேமியா ஜாடி
குண்டான் கிச்சடி கேசரி வில்லங்கம்
சாவடி கோலி அபாண்டம் கில்லாடி
சலவை ஜாஸ்தி
தெலுங்கு:
தீவட்டி ஜாடி ஜதை சொக்கா
ரவிக்கை உத்தி கபோதி கம்பல்
கொலுசு ரம்பம் ஜாஸ்தி வில்லங்கம்
பாளயம் கோமுட்டி கண்ணராவி
கன்னடம்:
எகத்தாளம் சமாளித்தல் பட்டாக்கத்தி எட்டன்
உருது:
கெடுபிடி கைதி சராசரி செலாவணி
சாமான் சீனி சீட்டு தயார்
அசல் அஸ்திவாரம் கச்சேரி கஸகஸா
மலாய்:
சவ்வரிசி (சவ்) மல்லாக் கொட்டை மணிலாக் கொட்டை
அரபு:
வசூல் ரத்து ஜப்தி ஜாமீன்
ஜில்லா சுன்னி இலாக்கா மகசூல்
பார்சி:
சர்தார் சால்வை சிப்பந்தி லுங்கி
ரசீது ஷால் தயார் சுமார்
ஸர்க்கார்
துருக்கி:
துப்பாக்கி
போர்ச்சுகீசியம்:
பறங்கி கடுதாசி பேனா வாத்து
அலமாரி மேசை சாவி அன்னாசி
கோப்பை பீப்பாய் வராந்தா கொரடா
ஏலம் சன்னல் மேஸ்திரி பிஸ்கோத்து
பொத்தான் பாதிரி
டச்சு (டானிஷ்):
கக்கூஸ் பப்ளிமாஸ் துட்டு
பிரெஞ்சு:
ஆஸ்பத்திரி பீரோ
ஆங்கிலம்:
காலரா பங்களா உயில் ஏக்கர்
தமிழ் இலக்கியங்களில் உள்ள வேற்றுமொழி சொற்கள்:
ஆதி யாமம் காரணம் கமலம்
போகம் பாக்கியம் தானம் தருமம்
ஞானம் இந்திரன் கருமம் பாவனை
நரகர் அநித்தம் துக்கம் பக்குவம்
பிரமன் மாசம்
இவைகள் அனைத்தும் தமிழ் இயல் (B.A Tamilology) பாடநூலில் தமிழ் மொழி வரலாறு புத்தகங்களில் உதாரணங்களாக கொடுக்கப்பட்டவையே...
இதைத்தவிர நாம் பயன்படுத்தும் இன்னும் பல வேற்றுமொழி சொற்கள் உள்ளன.. இணையத்தில் தேடி பெற்ற அச்சொற்களை கீழே காணலாம். இதேபோல் தமிழில் உள்ள இன்னும் பல வேற்றுமொழிச் சொற்களையும் அதற்கு மாற்றான தமிழ் சொற்கள் அடங்கிய கோப்பையும் விக்கிபீடியா இணைப்பையும் இங்கே இணைக்கிறேன். அதில் நீங்கள் காணலாம்.
தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - விக்கிபீடியா
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ் சொற்கள் - PDF File
போர்த்துகீசிய சொற்கள்:
கோப்பை
உருது:
சிபாரிசு தராசு வாபஸ்
வடமொழி சொற்கள்:
சாதம் தேசம் பரீட்சை கோபம்
சந்தோஷம் ரத்தம் சகோதரன் சகோதரி
புத்திரன் சிநேகிதன் சத்துரு ஜனம்
ஜலம் மிருகம் காரியம் கிராமம்
தினம் ராத்திரி யுகம் லட்சம்
ராஜா ராணி யுத்தம் சபை
நீதி நிதி ஆயுதம் சக்தி
துக்கம் பயம் ஆசை புத்தி
சூரியன் சந்திரன் பூமி ஆகாசம்
தந்தம் இதயம் தேகம் சரீரம்
வியாதி சுகம் ஜீவன் பிராணன்
அமிர்தம் மதுரம் ஆகாரம் பாயாசம்
ரசம் பூஜை ஆலயம் விக்கிரகம்
பிரசாதம் தீர்த்தம் பக்தி பாபம்
பாவம் புண்ணியம் முக்தி மோட்சம்
சுவர்க்கம் சொர்கம் நரகம் வித்தை
சரித்திரம் சங்கீதம் நாட்டியம் காவியம்
ஆரம்பம் அந்தம் சுத்தம் அசுத்தம்
சந்தேகம் நிச்சயம் யோசனை சமயம்
விஷயம் அனுமதி உத்தரவு கல்யாணம்
வம்சம் புருஷன் எஜமான் சேவகன்
துவாரம் தீபம் தரிசனம் பரிகாரம்
வியாபாரம் லாபம் நஷ்டம் நதி
மேகம் பிரதேசம் ஆயுள் சத்தியம்
தர்மம் கௌரவம் அவமானம் தைரியம்
ஆனந்தம் பிரபஞ்சம் மௌனம் சாந்தம்
அதிகாரம் அதிகாரி மந்திரி பிரதிநிதி
தண்டனை சாட்சி அபராதம் வர்ணம்
சுகந்தம் வாசனை ஆபரணம் ரத்தினம்
ரூபம் அவசியம் சிரமம் அனுபவம்
சம்பவம் விசேஷம் சுபாவம் நட்சத்திரம்
கிரகணம் மந்திரம் குரு சன்னியாசி
யோக்கியன் குணம் ஆச்சர்யம் கர்வம்
கருணை துரோகம் விசுவாசம் பிரச்சனை
சந்தர்ப்பம் அவசரம் சுலபம் கஷ்டம்
உபயோகம் சமாதானம் வைத்தியன் பத்தியம்
விஷம் சுவாசம் ஜீரணம் வார்த்தை
பாஷை விவாதம் அர்த்தம் சப்தம்
பத்திரிகை வாலிபம் விதவை மூடன்
பண்டிதன் ருசி ராகம் தாளம்
அலங்காரம் சித்திரம் நாடகம் வாத்தியம்
மோகம் நாசம் யோக்கியதை பரிசுத்தம்
விபரீதம் நியாபகம் விவேகம் சதி
மண்டபம் கபடம் பிரசவம் சகுனம்
திருப்தி விரக்தி குரோதம் அபிமானம்
தாபம் அசாத்தியம் அத்தியாயம் வாக்கியம்
சூத்திரம் பிரயோகம் விமர்சனம் உதாரணம்
கற்பூரம் திலகம் அந்தரங்கம் அங்கீகாரம்
நிராகரிப்பு அபிவிருத்தி சமர்ப்பணம் உத்தரவாதம்
பிரதி விபரம் சந்தா வரதட்சணை
அனாதை கம்பீரம் தந்திரம் சண்டாளன்
அவதாரம் மாயை சன்னிதி ரசாயனம்
சமரசம் பிரகடனம் மாகாணம் சந்தர்ப்பவாதி
சுயநலம் வைராக்கியம் அகங்காரம் பதவிப் பிரமாணம்
அனுமானம் அதிசயம்
இப்படி நாம் பேசும் தமிழே பல மொழி கலந்த கலவையாகத்தான் உள்ளது. இவற்றையெல்லாம் தவிர்த்து அதற்கு நிகரான தமிழ் சொற்களை பயன்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது எனும் சூழலில் தான் இருக்கிறோம் என்பதை இவர்கள் உணரவில்லை என்றே தோன்றுகிறது. ஆங்கிலம் கலப்பதில்தான் இவர்களுக்கு பிரச்னை!
சரி அப்படியே வேற்றுமொழி சொற்களை நீக்கி பேசினால், எழுதினால் அது தூய தமிழாகிவிடுமா? தூய தமிழ் என்பதற்கு என்ன வரையறை?
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக தமிழ் பேசப்பட்டுள்ளது. 2500 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று சங்ககால தமிழனுடன் உரையாடினால் அவன் பேசும் தமிழ் நமக்கு சுலபமாக புரிந்துகொள்ளும்படி இருக்காது. நாம்பேசும் தமிழ் அவனுக்கு வேற்று மொழியைப் போல இருக்கும் என்பதுதான் உண்மை. அவனுடைய பார்வையில் நாம் பேசும் தற்கால (வேற்று மொழி சொற்களற்ற) தமிழே தமிழ் இல்லை என்றுதான் நினைப்பான் - தமிழை போன்ற வேறு வேற்று மொழி என்று நினைப்பான்...
பேச்சுமொழி புரியவில்லை என்றால் என்ன எழுதி காண்பித்து உரையாடலாம் என்று நினைக்கிறீர்களா? அது இன்னும் மோசமான யோசனை. ஏனென்றால் 600,700 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றாலே அவர்கள் பயன்படுத்திய எழுத்து வடிவத்திற்கும் தபோது நாம் எழுதும் எழுத்து வடிவத்திற்கும் பெருமளவு வித்தியாசம் காணமுடியும்.. அவ்வளவு சுலபமாக படித்து தெரிந்துகொள்ள முடியாதபடி இருக்கும் - ஒரு சில சொற்களை தவிர. அப்படியென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வரிவடிவம் முற்றிலும் வேறாகவே இருந்துள்ளது. மொழியையையாவது ஓரளவு புரிந்துகொள்ளமுடியும் ஆனால் எழுத்தை சுத்தமாக புரிந்துகொள்ள முடியாது.
காலத்திற்கு காலம் தமிழ் எழுத்து பல மாற்றங்களை கடந்து உருமாறி பரிணமித்து தற்போதுள்ள இந்த நிலைக்கு வந்துள்ளது. அதேபோல்தான் பேச்சுமொழியும். இலக்கணங்களுக் கூட மாற்றம் கண்டுள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அனைத்திற்கும் பொருந்தும்.
நம்மில் பலர் என்ன நினைக்கிறார்கள், மொழி தோன்றியபோது எப்படி இருந்ததோ அப்படியேதான் உள்ளது என்று. சில மதத்தவர்கள்கூட மனிதர்கள் முதல் அணைத்து உயிரினங்களும் கடவுள் எப்படி படைத்தாரோ அப்படியேதான் இன்றுவரை இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் பரிணாமக்கோட்பாடு தெரிந்தவர்களுக்கு உண்மை புரியும். அதுபோலத்தான் மொழி வரலாறு படித்தவர்களுக்கு மொழி எப்படி உருவாகிறது, எப்படி கலக்கிறது, எப்படி பரிணமிக்கிறது, மாற்றம் அடைகிறது, எப்படி கிளை மொழிகள் உருவாகிறது என்பதெல்லாம் புரியும். முதன்முதலில் தமிழ் பேசத்தொடங்கியதற்கு முன்பும் இலக்கணம் வகுப்பதற்கு முன்பும் அது என்னவாக எப்படி இருந்திருக்கும்.. மற்றும் தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றுவரையும் எப்படியெல்லாம் மாற்றங்களடைந்த தென்றும் புரியவரும். இது தமிழுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.
தொல்காப்பியத்தில்கூட தமிழில் வடமொழி சொற்களை பயன்படுத்துவதற்கான இலக்கணம் வரையறுக்கப்பட்டது.. அதேபோல் பிற்காலத்தில் (13 ஆம் நூற்றாண்டில்) வந்த நன்னூல் எனும் இலக்கண நூலிலேயே கூட 'காலத்தின் ஓட்டத்தால் பழைய சொற்களும் இலக்கண அமைப்புகளும் வழக்கொழிந்து போவதும், புதிய சொற்களும் இலக்கண வடிவங்களும் பயன்பாட்டிற்கு வருவதும் குற்றமாகாது' (பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே நன்னூல்: 462) என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நாமோ இதையெல்லாம் உணராமல் மொழி தூய்மைவாதம் பேசிக்கொண்டிருக்கிறோம். உலகில் தூய மொழி என்று எதுவுமே இல்லை. கலப்பில்லாத மொழி என்றும் எதுவும் இல்லை. மாறாத மொழி என்று எதுவும் இல்லை.
மொழிகலப்பு கூடாது என்று கட்டிப்போட்டு வைத்தால் அந்த மொழி அழிந்துபோகும். மொழி என்பது மனிதர்களுக்கானது, மொழிக்காக மனிதர்கள் இல்லை. இன்னொரு மனிதனிடம் தொடர்புகொள்ளுவதற்கான சாதனம் தான் மொழி என்று சொல்கிறோமே அதற்கான அர்த்தம் என்ன தெரியுமா? அதுதெரிந்தால் தூய்மைவாதத்திற்கு இடமிருக்காது.
தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அது நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதுதான் காரணம். எனவே மொழித்தூய்மை, இனத்தூய்மை, சாதித்தூய்மை போன்ற இல்லாத தூய்மையை பேசிக்கொண்டிருப்பது பிற்போக்குத்தனம் என்பதைவிட அறியாமை என்றே சொல்லலாம்.
இறுதியா சொல்வது இதுதான், மொழியை வரைமுறையின்றி பிழையுடன் பேசுபவர்களையோ எழுதுபவர்களையோ ஆதரிப்பது இப்பதிவின் நோக்கமல்ல. அதேசமயம் இயல்பான மொழிக் கலப்பை, பாமர மக்கள் பேசும் பேச்சுவழக்கை கொச்சைமொழி என்று ஏளனப்படுத்துவதையும் ஒருபோதும் ஆதரிக்காது. இந்தியை இந்தியாவின் பொதுமொழியாக மாற்ற மற்ற மொழியின்மீது அதிகாரம் செலுத்தி அழிக்கநினைக்கும் நாட்டில் அத்தகைய ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தமிழைத் தனித்துவத்தோடு காப்பதும் அத்தியாவசியமானதாக இருக்கலாம்.
தமிழில் அதிகப்படியாக வடமொழி கலந்து, கரைந்து கொண்டிருந்தபோது தனித்தமிழ் இயக்கம் உண்டாகி அதை சீர்திருத்த முனைந்தது. அப்படியிருந்தும் இன்னும் வடமொழி சொற்கள் இல்லாமல் யாரும் பேசுவதில்லை. அந்த சீர்திருத்தம் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றாலும் அது முழுமையடையவில்லை என்றே தோன்றுகிறது. அதை கண்டுகொள்ளாமல் அப்படியே கடந்துவிட்ட ஆங்கிலம் கலந்து பேசுவதுதான் மொழிக்கலப்பு, மொழி அழிப்பு என்பதுபோல பேசிக்கொண்டிருக்கிறோம். எனவேதான் இப்படிப்பட்ட மொழிவரலாறு தெரியாமல் தூய்மைவாதம் பேசுவதோ, கண்மூடித்தனமான மொழி பற்றுக்கொள்வதோ தவறானது என்பதை சுட்டிக்காட்டவே இப்பதிவு.


No comments:
Post a Comment