புத்தர், இயேசு, திருமூலர் இவர்கள் வெவ்வேறு சமயத்தவர்கள் ஆனால் ஒரு கருத்தில் இம்மூவரும் ஒன்றுபடுகிறார்கள் அதுஎன்னவென்றால் போலி குருக்கள் அல்லது மற்றவர்களை வழிநடத்தும் குருடன் பற்றி இவர்கள் சொன்ன வாக்கியம். அவற்றை காலவரிசைப்படி புத்தரிலிருந்து ஆரம்பிப்போம்.
புத்தர்
பிராமணர்களின் வேதாந்த கோட்பாடான பிரமத்தை பற்றி இரண்டு பிராமணர்களிடம் புத்தர் விவாதித்துக்கொண்டிருந்தார். அவர்களிடம் மூன்று வேதங்களையும் கரைத்துக்குடித்த பிராமிணர்கள் எவரேனும் பிரமத்தை கண்டுள்ளார்களா? ஏழு தலைமுறை வரையிலான பிராமணர்களோ அல்லது அவர்களின் ஆச்சார்யார்களோ பார்த்திருக்கிறீர்களா? பண்டைய கால ரிஷிகளாவது பிரம்மத்தை கண்டிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்களா என்று விவாதங்கள் செய்துகொண்டே கடைசியாக இதை சொல்வார்:
"ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டிருக்கும் குருடர்கள் வரிசையில்
முதற்குருடனும் எதையும் கண்டதில்லை
இடைக்குருடனும் காண்பதில்லை
இறுதிக்குருடனும் காண்பதில்லை."
பிரம்மம் பற்றி பிராமணர்கள் கூறுவது யாவும்
குருட்டு உரை என்றே நான் கருதுகிறேன்.
- புத்தரும் அவர் தம்மமும் - நூல் 3
என்று இந்த குருட்டு பிராமணர்களின் வழிகாட்டுதலை பற்றி புத்தர் சிறப்பாக எடுத்து கூறியிருப்பார். இந்த வாசகத்தை கேக்கும்போது பலருக்கு இயேசுதான் நினைவிற்கு வருவார் ஆனால் அவருக்கு முன்பு வாழ்ந்த புத்தர் கிட்டத்தட்ட இயேசுவைப்போலவே இந்த போலி குருக்களையும் அவர்களை பின்பற்றுபவர்களையும் குருடர்களாகத்தான் கருதியிருக்கிறார்.
இயேசு
ஒரு மதகுரு இயேசுவிடம் வந்து கேட்டார் உங்கள் சீடர்கள் ஏன் பாரம்பரியத்தை கடைபிடிப்பதில்லை? என்று. அதற்கு அவர் அவர்களின் சமயத்தில் உள்ள ஒன்றை மேற்கோள் காட்டி நீ ஏன் இதை கடைபிடிப்பதில்லை வஞ்சகனே என்று சொல்லிவிட்டு அங்கு இருந்த மக்களிடம் மதகுருக்களை பற்றி இப்படி சொன்னார் :
"அவர்களை விட்டுவிடுங்கள்,
அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்;
குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால்
இருவரும் குழியிலே விழுவார்கள்."
- மத்தேயு 15 :14
திருமூலர்
இன்று சைவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தமிழர்களுக்கும் பரிச்சயமான ஒரு சொல் என்றால் அது "அன்பே சிவம்" தான் அந்த சொல்லுக்கு சொந்தகார் திருமூல சித்தர் என்றும் சொல்லலாம். அன்பே சிவமாயிருக்கிறதென்று அவர்தான் தன் பாடலில் கூறியிருக்கிறார். 3000 பாடல்களை கொண்ட அந்த திருமந்திரத்தில்தான் குருட்டு குருவைப்பற்றியும் கூறியுள்ளார்
"குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே."
- திருமந்திரம்:1680
தன்னுடைய குருட்டுத்தனங்களை நீக்கக்கூடிய குருவை விரும்பாதவன் - குருடை சரிபடுத்தாத குருவைத்தான் ஏற்றுக்கொள்வான். அந்த இரண்டு குருடர்களும் (குரு,சீடன்) குருட்டாட்டம் ஆடுவது குழியில் விழுவதற்கு. என்று தன்னுடைய நடையில் பாடியுள்ளார்.
மூவரும் வெவ்வேறு காலம் வெவ்வேறு இடம், சமயம் என்றாலும் இந்த ஒரு கருத்தில் ஒன்றாகவே சிந்தித்திருக்கிறார்கள்.
- தீயவன்
wow, so powerful analysis thank you
ReplyDeleteThankyou so much :)
Deleteமிகவும் அருமை
Deleteமிக்க நன்றி :)
Delete