Breaking

Sunday, August 11, 2019

வள்ளுவரும் லாவோட்சுவும் । திருக்குறளும் தாவோவும்


திருவள்ளுவர் : தென்னிந்தியாவை (தமிழகம்) சார்ந்தவர். 2500 ஆண்டுகளுக்குமுன் 5,6 BCE  இல் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அவர் எழுதிய நூல் "திருக்குறள்".
லாவோட்சு : சீனாவை சார்ந்தவர். 2500 ஆண்டுகளுக்குமுன் 5,6 BCE  இல் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அவர் எழுதிய நூல் "தாவோ தே ஜிங்" (Tao Te Ching). தாவோயிசம் எனும் மதத்தின் அடிப்படை நூல் இதுவே.

லாவோட்சு எழுதிய  தாவோ தே ஜிங் -இல் எளிமையான வாழ்க்கை, உயிர்களின் மூலம், பற்றின்மை பற்றியும் போர், அதிகாரம், தண்டனை, ஆயுதம் ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளும் காணப்படும். மொத்தம் 81 வசனங்களை கொண்ட சிறிய நூல். திருக்குறளோ தமிழில் கிடைக்கபெற்ற நூல்களில் வாழ்க்கைக்கு பயனுள்ள, இல்வாழ்க்கை முதல் ஞானத்தை நோக்கிய தவம், துறவு வரை மூன்று பகுதிகளாக (அறம்,பொருள்,இன்பம்) ஒவ்வொரு குரலும் 2 அடிக்குள்  மொத்தம் 1330  குரல்கள் அடங்கிய முதல் பழமையான சிறப்புமிக்க நூலாக விளங்குகிறது.

திருவள்ளுவரும், லாவோட்சு'வும் மிகச்சிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் மட்டுமல்ல இருவரும் தலைசிறந்த மெய்யியலாளர்கள், ஞானிகள். இவர்கள் ஞானத்தின் வெளிப்பாடே இந்த நூல்கள், ஞானமடைந்தவர்களின் சொற்களே இந்த நூல்கள். வெவ்வேறு நாடு வெவ்வேறு மொழி என்றபோதிலும் இவற்றிலும் சில ஒற்றுமைகள், ஒத்த கருத்துக்கள் காணப்படுகிறது. அவற்றை ஒப்பிட்டு விளக்கத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம்.

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 7 :
.......... ஞானி தன்னை பின்னால் இருத்திக்கொள்கிறான்;
அதனால், அவன் முன்னாள் இருக்கிறான்.
ஞானி 'தன்' நினைப்பு இல்லாமல் இருக்கிறான்;
அதனால், அவன் தன்னை தக்கவைத்துக்கொள்கிறான்.
ஞானிக்குத் 'தன்' நலத்தில் அக்கறை இல்லாததால்தானே
அவன் சுய-நலம் நிலைநிறுத்தப்படுகிறது?

குறள் 268 :
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
(பொருள் : தவ வலிமையால் தன்னுடைய உயிர், 'தான்' என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் -அவனுடைய பெருமையை உணர்ந்து- தொழும்)

விளக்கம் : இதற்க்கு விளக்கம் தேவைப்படாது படிக்கும் போதே இதில் உள்ள ஒற்றுமை - சாரத்தை புரிந்துகொள்ளலாம். குறள் 346 இதே கூற்றையே வெளிப்படுத்துகிறது.

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 8 :
மிகச்சிறந்த  நல்லதன்மை , நீர் மாதிரி;
நீர் எல்லாப் பொருளுக்கும் நன்மை செய்கிறது.
என்றாலும், அது எதனுடனும் போட்டியிடுவதில்லை.
தாழ்வு என்று மற்றவை நினைக்கிற இடங்களில் அது தங்கியிருக்கிறது.
எனவே, நீர் தாவோவிற்கு நெருக்கமாக இருக்கிறது....

குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
(பொருள் : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு "அமிழ்தம்" என்று உணரத்தக்கதாகும்)

விளக்கம்: நீர் எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்து தன்னை உயர்ந்தது என்று பகட்டிக்கொள்ளாமல் இருப்பதால் அது தாவோவிற்கு (பிரபஞ்சத்தின் மூலத்துடன்) நெருக்கமாக இருக்கிறது. உயந்த குணம் நீரின் குணத்தை போன்று இருக்கும் என்று  லாவோட்சு கூறுகிறார். வள்ளுவரும் கிட்டத்தட்ட அவ்வாறே சொல்கிறார் நீர் அனைத்துயிர்களுக்கும் நன்மைசெய்வதால் அது "அமிர்தம்" என உணரலாம் என்கிறார்.

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 12 :
ஐந்து நிறங்கள் கண்ணைக் குருடாக்கும்.
ஐந்து ஸ்வரங்கள் காத்தைச் செவிடாக்கும்.
ஐந்து சுவைகள் நாக்கை கெடுக்கும்.
குதிரை பந்தயமும் வேட்டையும் மனிதனை பைத்தியமாக்கும்.
விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் மனிதனின் நடத்தையை சீர்குலைக்கும்.

எனவே, ஞானி புலங்ககை விடுத்து உள்ளிருப்பதன்படி கவனித்து நடத்தப்படுகிறார்
ஆகவே அவர்  புறத்திருப்பதை விடுத்தது உண்மையை தேர்வுசெய்கிறார்.

குறள் 6 :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
(பொருள் : பொருள் : ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்)

குறள் 27 :
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
(பொருள் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது)

விளக்கம்: புலன்களும்,உணர்வுகளும் ஒருசமயத்தில் நம்மை சீர்குலைய செய்துவிடும் என்பதை அறிந்ததால் ஞானி புலங்களின்படி நடக்காமல் உள்ளத்தின்படி நடக்கிறான் என்கிறார் லாவோட்சு. திருவள்ளுவரின் இந்த 2  குறள்களும் மற்றும் குறள் 6 -ம் இதனையே எடுத்துரைப்பதாக உள்ளது.

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 20 : 
உண்டு என்பதற்கும் இல்லை என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது ?
நன்மை என்பதற்கும் தீமை என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது ?
எதற்கு மற்றவர்கள் பயப்படுகிறார்களோ அதற்கு நாம் பயந்தாகவேண்டும்!!
அவைதான் எத்தனை எத்தனை!

பொதுவாக மக்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள் ஏதோ விருந்தை அனுபவிப்பது மாதிரி;
அல்லது வசந்த காலத்தில் உல்லாசப்பயணம் போகின்றவர்கள் மாதிரி;
நான்மட்டும் சலனமற்று இருக்கிறேன்,
என்ன என்று காட்டிக்கொள்ள முடியாத, இன்னும் சிரிக்கமுடியாத சிசு மாதிரி;
கதியில்லாமல், போவதற்கு வீடு இல்லாத மாதிரி......
.................................நான்மட்டும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கிறேன்.
ஆனால் நான் அன்னையால் (தாவோ) ஊட்டமடைகிறேன்.
(நீளம் காரணமாக இடையில் நீக்கப்பட்டுள்ளது)

குறள் 23 :
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
(பொருள் : இம்மை மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்ததாகும்)

விளக்கம் :  இம்மை மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து தாவோவின் வழியில் அல்லது அறநெறியில் வாழ்பவனின் வாழ்க்கை, உலக மக்களின் வாழ்க்கைக்கு மாறானதாக அல்லது முட்டாள்தனமானதாக தோன்றலாம் ஆனால் அதுவே உண்மையான வாழ்க்கை என்பதைத்தான் இவ்விரண்டும் சொல்கிறது.

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 31 :
........ராணுவ வெற்றிகளில் தாவோ மனிதன் மகிழ்ச்சியடைவதில்லை.
அவன் அவற்றில் மகிழ்ச்சியடைந்தால் மக்களின் படுகொலையில் அவன் மகிழ்ச்சியடைகிறான் என்று அர்த்தம். மக்களின் படுகொலையில் மகிழ்ச்சியடைகிற மனிதன் தன் சித்தத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது.

குறள் 327 :
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
(பொருள் : தனது உயிர் போய்விடும் என்றாலும் செய்யக்கூடாது தன்னை போன்ற அடுத்தவரின் இன்பமான உயிரை போக்கும் காரியத்தை.)

விளக்கம் : ஒரு தாவோ மனிதன் - ஞானி பிற உயிரை கொள்ளும் போர்களில் மகிழ்ச்சி கொள்வதில்லை அப்படி மகிழ்கிறவன் முழுமையடைவதில்லை என்று கொல்லாமையை பற்றி சொல்கிறார். இதற்கு வள்ளுவரின் ஒரு குரல் மட்டும் பொருந்துவதாக இல்லை மாறாக கொல்லாமை மற்றும் இன்னாசெய்யாமை ஆகிய இரண்டு அதிகாரங்கல் முழுக்க இதனையே வலியுறுத்தியிருப்பார்.

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 46 :
மனிதர்கள் ஆசைப்படுவதை தேடிக்கொண்டிருப்பதைவிட பெரிய குற்றம் வேறு எதுவுமில்லை;
மனநிறைவை அறியாமலிருப்பதைவிடப் பெரிய துயரம் வேறு எதுவுமில்லை;
பேராசைக்கு இடம்கொடுப்பதைவிட பெரிய கேடு வேறு எதுவுமில்லை.
எனவே, மனநிறைவை அறிகிற மனநிறைவு எப்போதும் மனநிறைவுடன் இருக்கும்.

குறள் 368 :
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
(பொருள் : ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.)

குறள் 369 :
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
(பொருள் : ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.)

குறள் 367 :
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
(பொருள் : ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.)

குறள் 370 :
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
(பொருள் : ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.)

விளக்கம் : மனநிறைவில்லாமல் பேராசைகளுடன் இருப்பதே துன்பங்களுக்கு காரணமாக அமைகிறதென்று லாவோட்சுவும் வள்ளுவரும் கூறுகிறார்கள், திருக்குறளில் அவா அறுத்தல் எனும் அதிகாரம் முழுவதும் இதனையே வலியுறுத்தும்.

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 52 :
....மனிதன் தன் வாயை மூடிக்கொண்டு தன் வாயில்களை அடைத்துக்கொண்டால்
அவன் ஒருபோதும் கலைத்துபோகமுடியாது.
மனிதன் தன் வாயைத் திறந்துக்கொண்டு தன் காரியங்களை அதிகரித்துக்கொண்டால்
அவனை ஒருபோதும் காப்பாற்ற முடியாது....

குறள் 127 :
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
(பொருள் : எவற்றைக் காத்தவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்)

குறள் 128 :
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
(பொருள் :

விளக்கம் : மனநிறைவில்லாமல் பேராசைகளுடன் இருப்பதே துன்பங்களுக்கு காரணமாக அமைகிறதென்று லாவோட்சுவும் வள்ளுவரும் கூறுகிறார்கள், திருக்குறளில் அவா அறுத்தல் எனும் அதிகாரம் முழுவதும் இதனையே எடுத்துரைக்கிறது.

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 56 :
தெரிந்தவன் பேசுவதில்லை. பேசுகிறவன் தெரிந்தவனில்லை.
எனவே, ஞானி வாயைத்திறப்பதில்லை. உணர்வுகளும் கதவைதிறப்பதில்லை.
வாயை மூடிக்கொண்டு இருங்கள்.
உங்கள் புலன்களைக் காத்துக்கொள்ளுங்கள்....... (சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது)..
...... இந்தநிலையை அடைந்தவரிடம் அவமானம், பாராட்டு, நன்மை,தீமை, அணுகமுடியாது.
இப்படியாக உலகம் மதிப்பவராகிறார்.

குறள் 6 :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
(பொருள் : ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்)

குறள் 126 :
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
(பொருள் : ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது)

விளக்கம் : புலன்களை அடக்கத்தெரிந்தவனுக்கு உண்டாகும் நன்மையை பற்றி வள்ளுவரும் லாவோட் சு'வும் கூறுகின்றனர்.


================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 67 :
..........அன்பின் அடிப்படையில் போராடுபவன் போரில் வெற்றிபெறுவான்;
அன்பின் அடிப்படையில் தன்னை காத்துக்கொள்பவன் பத்திரமாக இருப்பான்.
வானகம் அவனை காப்பாற்றும், வானகம் அவனை அன்புடன் பாதுகாக்களும்.

குறள் 76 :
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
(பொருள் : அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது)

விளக்கம் : அன்பின் அடிப்படையில் போரில் ஈடுபடும் வீரனும் வெற்றிபெறுவான், அவனை வானமும் பூமியும் அன்போடு பாதுகாக்கும் என்கிறது தாவோ தே ஜிங் அதையே திருக்குறளும் வெளிப்படுத்துகிறது அதாவது அறத்திற்கு மட்டும் அன்பு உறுதுணையாகஇருக்கும் என்பது முட்டாள்தனம் வீரத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என்று ஒரே சாரத்தை இவை இரண்டும் எடுத்துரைக்கின்றன.

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 75 :
மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.
அவர்களிடம் கடுமையான வரிகளை அதிகாரிகள் வசூல் செய்கிறார்கள்.
எனவே, மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.

மக்களை ஆள்வது கடினம்.
அவர்களின் விஷயங்களில் அனாவசியமாக அதிகாரிகள் தலையிடுகிறார்கள்.
எனவே, மக்களை ஆள்வது கடினம்.....
........

குறள் 552 :
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
(பொருள் : அரசன் குடிகளிடம் முறை கடந்து வரி கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், ‘எல்லாவற்றையும் கொடு’ என்று கேட்பதைப் போன்றதாகும்)

குறள் 555 :
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
(பொருள் : கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்)

விளக்கம் : அரசு, அரசனின் அதிகப்படியான வரி மற்றும் முறை தவறிய கொடுங்கோல் ஆட்சி ஆகியவற்றை பற்றிதான் மேலேயுள்ள வசனங்கள் பேசப்பட்டுள்ளது. இதில் இருவரின் சிந்தனைகளும் அக்கால சூழலும் ஒன்றாக இருப்பதை காட்டுகிறது, திருக்குறளில் கொடுங்கோன்மை எனும் அதிகாரம் முழுவதும் இப்படியாகவே காணப்படும். 

================================================================
தாவோ தே ஜிங் - வசனம் 78:
இந்த உலகத்தில் மிக மெல்லியது மிக வலியதை வெல்ல முடியும்.
வலுவின்மையிலும் நெகிழ்விலும் நீருக்கு ஒப்பாக எதையும் சொல்லமுடியாது;
என்றாலும், வலியத்தையும் கடினத்தையும் தாக்குவதில் நீருக்கு நிகராக எதுவுமில்லை.........
......

குறள் 13 :
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
(பொருள் : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.)

குறள் 20 :
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
(பொருள் :எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுங்கு நிலைபெறாமல் போகும்.)

குறள் 16 :
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
(பொருள் :வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது)

விளக்கம் : மிகவும் வலிமையற்றதாக கருதப்படுவதும் வலிமையானதாக கருதப்படுவதை அழிக்கவோ அல்லது வெல்லவோ முடியும் என்பதனை நீருடன் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இதில் வள்ளுவரின் கூற்றும் லாவோட் சு'வின் கூற்றும் ஒன்றாகவே காணப்படுகிறது, வான்சிறப்பு எனும் அதிகாரத்தில் நீரின் முக்கியத்துவத்தை பற்றி வள்ளுவர் விரிவாகவே கூறியுள்ளார். 

================================================================

©️தீயவன்டேவிட்

Reference:
திருக்குறள்  
தாவோ தே ஜிங்  

No comments:

Post a Comment