Breaking

Thursday, August 23, 2018

இந்து மதம் ஒரு மிஷனரி மதமா?? | அம்பேத்கர் பார்வையில்



இந்து மதம் ஒரு மிஷனரி மதமா அதாவது பிற மதத்தாரை இந்துக்களாக்கும் மதமா இல்லையா என்பதைப் பற்றி ஒரு காலத்து வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இந்துமதம் ஒரு காலத்தும் மிஷனரி மதமாக இருக்கவில்லையெனச் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். சிலர் மிஷனரி மதமாக இருந்ததெனக் கூறினர்.

ஆனால் ஒரு காலத்தில் இந்து மதம் மிஷனரி மதமாக இருந்தது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். அது மிஷனரி மதமாக இருந்திராவிட்டால் இந்தியா முழுவதும் பரவியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்று இம்மதம் மிஷனரி மதமாக இருக்கவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே இந்துமதம் இப்போழுது மிஷனரி மதமாயிருக்க முடியாதாயிற்று என்பதே எனது அபிப்பிராயம்.

மதமாற்றத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை. மதமாற்றத்துக்கு மதக்கோட்பாடுகளும் நம்பிக்கையும் முக்கிய அம்சங்களாக இருக்கவில்லை. மதமாற்றம் பெற்றவனுக்குச் சமூகவாழ்வில் ஒரு இடம் அளிப்பது ஒரு முக்கியமான பிரச்சனை.

மதமாற்றம் பெற்றவனுக்கு எங்கு இடமளிப்பது? அவனை எந்தச் சாதியில் சேர்ப்பது என்பது மதமாற்றத்தையொட்டி முக்கியப் பிரச்சினைகளாக இருக்கின்றன. எனவே அந்நியர்களை இந்து மாதத்தில் சேர்க்க இந்துக்கள் தயங்குகிறார்கள் கிளப்களில் எல்லோரும் சேர்த்துக் கொள்ளப்படுவதுபோல் சாதியில் எல்லோரும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை அந்தந்தச் சாதியில் பிறந்தவர்களே அந்தந்தச் சாதியில் அங்கமாக இருக்கமுடியும்.

சாதிகள் சுயமாகவே சர்வாதிகாரமுடையவை, மற்றவர்களைச் சாதியில் சேர்த்துக் கொள்ளும்படி செய்ய எவருக்கும் அதிகாரமில்லை.

இந்து சமூகம் பல சாதிகள் சேர்ந்த ஒரு கதம்பமாயிருப்பதனாலும் ஒவ்வாரு சாதியும் கட்டுப்பாடாக அமைக்கப்பட்டிருப்பதனாலும் மதமாற்றம் பெற்றவர்கள் அங்கு இடம்பெற முடியாது. இந்துமதம் பரவாமலிருப்பதற்கும் பிற மதத்தார்களைத் தன்னுள் சேர்த்துக் கொள்ளாததற்கும் சாதியே காரணமாக இருக்கிறது. சாதி இருக்குமட்டும் இந்து மதம் மிஷனரி மதமாக இருக்கவே முடியாது. சுத்த முட்டாள்தனமான சடங்கு ; அதனால் பயன் ஏற்படவே செய்யாது.

- அம்பேத்கர்  (Book: சாதியை ஒழிக்க வழி)

No comments:

Post a Comment